உள்ளூர் செய்திகள்

சொர்க்கம் போறேன்!

வெகு காலத்துக்கு முன், வீரகேசரி என்னும் பெயருடைய மன்னன் மருத நாட்டை ஆண்டு வந்தான். அவன் எந்த நாட்டை சேர்ந்த முனிவர்களாக இருந்தாலும், அவர்களை தன் நாட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் அரசாங்கத்தின் சார்பில் செய்து வந்தான்.ஒருசமயம் ஒரு முனிவர் வீர கேசரியின் நாட்டுக்கு வந்தார். அவர் நாட்டுக்கு வெளியே ஆசிரமம் அமைத்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். தன் நாட்டுக்கு எங்கோ தூர தேசத்தில் இருந்து ஒரு முனிவர் வந்ததை அறிந்த மன்னன் வீரகேசரி, முனிவரை சந்திக்க, தன் மந்திரியுடன் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்றான்.மன்னன் வீரகேசரி முனிவரின் ஆசிரமம் சென்ற போது, அங்கே நூற்றுக்கணக்கான மக்கள், முனிவரை சுற்றி அமர்ந்து அவர் கூறும் அறிவுரைகளை கேட்டுக் கொண்டிருந் தனர். முனிவரை சுற்றி இருந்த கூட்டத்தையும், அவர் கூறும் அறிவுரைகளையும் கேட்ட மன்னன், தானும் மக்கள் கூட்டத்தில் கலந்து முனிவரை கரம் கூப்பி வணங்கி நின்றான். மன்னனை பார்த்த முனிவரின் கண்கள் ஆனந்தத்தில் மின்னியது.முனிவர் மன்னனை அருகில் அழைத்து, அமரச் சொன்னார். பிறகு அவர் தன் கையில் சிறிதளவு விபூதியை எடுத்து கைகளை மூடி தனக்குள் ஏதோ மந்திரங்களை சொல்லி கையை திறக்கவும், கையில் இருந்த விபூதி ஒரு வைர கல்லாக மாறியது. அந்தக் கல்லை முனிவர் மன்னனிடம் அளித்தார். மன்னனும் முனிவர் அளித்த மின்னும் வைரக் கல்லை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டான். மன்னன் தன் சிரத்தை முனிவர் பாதங்களில் படும்படி, விழுந்து வணங்கினான்.மன்னன் முனிவரை வணங்கியதை பார்த்த மந்திரி சற்று வேதனையுடன் மன்னனிடம், ''முனிவர் உண்மையானவர் இல்லை என்றும், அவர் ஒரு ஊரை ஏமாற்றும் போலி முனிவர்,'' என்றும் கூறினார்.மன்னன் தன் மந்திரி, முனிவரை பற்றி கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முனிவரை தன் அரண்மனையில் தங்கி அருளுரை வழங்க அழைத்தான். முனிவரும் மன்னனின் அழைப்பை ஏற்று அரண்மனையில் குடியேறினார். முனிவருக்கு அரசாங்க செலவில், எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. முனிவர் அரண்மனைக்கு குடியேறியது முதல், மந்திரி அவரை மிகவும் கவனத்துடன் கண்காணித்து வந்தார். முனிவர், மன்னனை ஏமாற்ற, பல வழிகளில் பல தில்லு முல்லுகளை செய்து வந்தார்.அவர் செய்து வந்த தில்லுமுல்லுகளில் ஒன்று, முனிவர் வாரத்தில் ஒருநாள் அதாவது, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் தன் பூத உடலை விட்டு பிரிந்து சொர்க்கம் சென்று வருவதாக அரண்மனைவாசிகளோடு மன்னனையும், ஊர் மக்களையும் ஏமாற்றி வந்தார். மந்திரிக்கு முனிவரின் செயல்கள் சற்றும் பிடிக்கவில்லை. அவர் தொடர்ந்து மன்னனிடம் முனிவர் ஒரு போலியானவர் என்று கூறி வந்தார். மன்னன் மந்திரி கூறுவதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. முனிவரை முழுமையாக நம்பினான் மன்னன்.தான் ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்க்கம் செல்லும் போது மன்னன் சொர்க்கத்தில் வசிக்க வசதியான இடம் தேடிக் கொண்டிருப்பதாக கூறி, மன்னனை மகிழ்வித்து வந்தார். மன்னனும், முனிவர் கூறுவது உண்மை என்று நம்பி வந்தான்.முனிவர் ஒரு போலியான ஆசாமி என்பதை, மன்னனிடம் மீண்டும், மீண்டும் கூறிய மந்திரி, மன்னனை முனிவரின் வலையில் விழாது இருக்குமாறு எச்சரித்தார். மன்னர் சிந்தனையில் ஆழ்ந்தார்.முனிவர் நடுவில் வந்தவர். ஆனால், மந்திரியோ தன்னுடன் பலகாலம் தன் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டவர். மந்திரி சொல்வதில் உண்மை இருக்குமென்ற முடிவுக்கு வந்த மன்னன், மந்திரியை அழைத்து, ''முனிவரின் நேர்மையையும், உண்மையையும் எப்படி சோதிக்கலாம்?'' என்று கேட்டான்.மந்திரி மகிழ்ச்சி அடைந்து, ''மன்னா! ஞாயிற்றுக் கிழமைகளில் முனிவர் தியானத்தில் இருந்து பின் அவர் உடலை விட்டு விட்டு, சொர்க்கத்துக்கு செல்வதாக கூறுவது உண்மையா என்று கண்டறிய வேண்டும். அதனால் அவர் தியானத்தில் இருக்கும் போது அவரை சுற்றி கட்டைகளை அடுக்கி அவர் தியானம் முடிந்து சொர்க்கம் செல்லும் நேரம் என்று கூறும் நேரத்தில், கட்டைகளை கொளுத்தி விடலாம். உண்மையில் அவர் உடலை இங்கேயே விட்டு விட்டு சொர்க்கம் சென்றால், நாம் பற்றவைக்கும் நெருப்பு அவரை ஒன்றும் செய்யாது. காரணம், அவர் உடலில் எந்தவித உணர்ச்சிகளும் இருக்காது. நெருப்பு அவரை சுட்டால் அவர் போலி முனிவர் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்,'' என்று கூறினார்.மந்திரி கூறியதில் உண்மை உள்ளது என்று நினைத்த மன்னன், அப்படியே செய்யச் சொன்னான். மந்திரியும் மன்னனை ஞாயிற்றுக் கிழமை முனிவர் தியானத்தில் அமரும்போது, அவர் அறைக்கு வெளியே இருக்கும்படி கூறினார். மந்திரியும் முனிவர் அமர்ந்த அறையை சுற்றி கட்டைகளை அடுக்கி விட்டார். முனிவர் தியானம் முடிந்து சொர்க்கம் செல்வதாக நடித்த போது, மந்திரி கட்டைகளை கொளுத்தி விட்டார். சுற்றிலும் கட்டைகளை அடுக்கியது அறையில் தியானத்தில் அமர்ந்த முனிவருக்கு தெரியாது. கட்டைகள் எரிந்து நெருப்பு சுட ஆரம்பித்ததுமே, முனிவர் சற்று நேரம் பொறுமையாக இருந்தார். நெருப்பின் சூடு அதிகமாக அதிகமாக முனிவரால் சூட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் அலறினார். உதவிக்கு ஆட்களை அழைத்தார். மந்திரி அருகில் இருந்த மன்னனிடம், முனிவர் நெருப்பின் சூட்டை பொறுத்துக் கொள்ள முடியாமல் அலறுவதை கூறினார்.மன்னனும், தான் இவ்வளவு நாட்கள் முனிவரால் ஏமாற்றப்பட்டதை நினைத்து மந்திரியிடம், முனிவர் நெருப்பில் இருந்து தப்பிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கோபத்தோடு கூறி சென்று விட்டான்.போலி சாமியாருக்கு யாரும் உதவ முன்வரவில்லை. இதனால் அவர் நெருப்பில் வெந்து மடிந்தார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !