உள்ளூர் செய்திகள்

இளஸ்... மனஸ்... (188)

அன்புள்ள ஆன்டி...என் வயது, 12; நான், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி. அம்மாவின் மூட்டு வலிக்காக, அமுக்ரா மாத்திரை டப்பா வாங்குகிறோம். அந்த டப்பாவில், மாத்திரைகளுடன் சேர்ந்து, ஒரு சிறிய துணி பொட்டலம் இருந்தது. தொட்டுப் பார்த்தேன். நெருநெருத்தது.அதை, மாத்திரை டப்பாவில் போட்டுள்ளனரே, எதற்கு... துணி பொட்டலத்தில் இருப்பதை தின்னலாமா... அது பற்றிய விபரங்கள் தெரியவில்லை. நல்ல ஆலோசனை கூறுங்கள்!இப்படிக்கு, காவ்யா ராகவன். அன்பு மகளுக்கு...அந்த துணி பொட்டலத்தில் இருப்பது, 'சிலிக்கா ஜெல்' ஆகும். சிலிக்கானும், ஆக்சிஜனும் கலந்த சிலிகான் டை ஆக்சைடே, 'சிலிக்கா ஜெல்' எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில், 59 சதவீதம் பாறைகளில், 95 சதவீதம் சிலிக்கான் டை ஆக்சைடு உள்ளது. சிலிக்கா ஜெல், சிறப்பாக ஈரத்தை உலர்த்தும். உணவு பொருட்கள், காலணி, கைபேசி, புகைப்பட கருவி, மருந்து பொருட்கள், அருங்காட்சியக பொருட்கள், மருத்துவ ஆவணங்கள் போன்றவற்றை, ஈரத்திலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது.இது, 28, 10, 5, 2 கிராம் என, பல அளவுகளில், பொட்டலங்களாக தேவைக்கேற்ப கிடைக்கிறது. இது, விஷப்பொருள் அல்ல. ஆனால், விழுங்கினால் செரிக்காது; அதிகம் தின்றால், குடல் வீக்கம் ஏற்படும். பொருட்களுடன் பொட்டலமாக வருவதை, சில நேரம் குழந்தைகள் தவறுதலாக உண்ணக் கூடும். அந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கயைாக செயல்பட வேண்டும். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தை இதை தின்றால் ஆபத்து அதிகம். சிலிக்கா ஜெல்லை தின்று விட்டதாக அறிந்தால் உடனே, 1800 222 1222 என்ற எண்ணில், உதவி கேட்டு தொடர்பு கொள்ளலாம்; அவசர மருத்துவ உதவி கிடைக்கும்.சுரங்கங்கள், புதிய கட்டடங்கள், இரும்பு தொழிற்சாலைகள், மணல் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் கல் குவாரிகளில் வேலை செய்வோர் சிலிக்கான் டை ஆக்சைடு அதிகம் சுவாசிக்கின்றனர். அவர்களுக்கு, 'சிலிகோசிஸ்' என்ற நோய் வர வாய்ப்பு இருக்கிறது.உனக்கு மட்டுமல்ல... பொதுவாக, எல்லா குழந்தைகளுக்கும், ஒரு அறிவுரை கூறுகிறேன்... வீடுகளில், கழிப்பறையை சுத்தம் செய்ய, வணிக ரீதியாய் பயன்படும் அமில பாட்டில் வைத்திருப்பர். எலியை கொல்ல விஷ கேக்குகள், வீட்டின் மூலை முடுக்குகளில் போட்டு இருப்பர். சலவை செய்த ஆடைகளுக்கு நடுவில், அந்து உருண்டைகள் பதுக்கியிருப்பர்.வீட்டில், சுவர் ஓரங்களில், எறும்பு மருந்து துாவியிருப்பர்; உபயோகமற்ற, காலாவதி மாத்திரைகள் அலமாரிகளில் துாங்கும்.இவை, பார்க்க வண்ணமயமாய் இருக்கிறதே என எண்ணி விடாதீர். அது தின்னும், குடிக்கும், நக்கும், பொருளாக இருக்கும் என எண்ணி தின்று விடாதீர்; குடித்து விடாதீர்; உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும்.அம்மா கொடுக்காத, எந்த உணவு பொருளையும் தின்ன வேண்டாம்; எங்கு, எந்த பொருள் கிடந்தாலும், அது பற்றி, பெற்றோரிடம் விசாரித்து தெளிவு பெறுங்கள். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !