உள்ளூர் செய்திகள்

இளஸ் மனஸ்!

டியர் ஜெனி ஆன்டி, நான் எட்டாம் வகுப்பு படிக்கிறேன். அம்மா சில வீடுகளில் சமையல் வேலை செய்கிறார். என்னிடம் ஒரு சிறிய குறை உள்ளது. யாரிடமும் சொல்ல முடியவில்லை. புதிதாக, என்னிடம் இல்லாத எனக்குப் பிடித்த ஏதாவது வித்தியாசமான பொருள் என் கண்ணில் தென்பட்டால் அதை எடுத்து வந்து வீட்டில், ஒளித்து வைத்துக் கொள்வேன். இதனால், சில வீடுகளில் அம்மா மீதே திருட்டுப் பழி விழும். தினமும் வீட்டிற்கு வந்ததும் வீட்டை அலசி ஆராய்ந்து, நான் கடத்திய பொருட்களை உரியவர்களிடம் தந்து மன்னிப்பு கேட்பார் அம்மா.அவர்களும், 'நீ மட்டும் வா! உன் மகளை வேலைக்கு அழைத்து வராதே...' என்பர். அம்மா நொந்து போய், 'எங்காவது ஓடிப்போய்விடுடீ; என்னை அசிங்கப்படுத்தாதே,' என்று சொல்லி அழுவார்.இந்த திருட்டை மனதறிந்து நான் செய்யவில்லை. என் தவறை மாற்றிக் கொள்ள முயற்சி செய்தும் பயனில்லை; அம்மாவை விட்டு விட்டு, ஓடவும் மனதில்லை. நீங்கள்தான் வழிகாட்டணும் ஜெனி ஆன்டி.ஓ டியர்! உன்னுடைய நிலமை எனக்குப் புரிகிறது. உனக்குப் பிடித்தமான பொருளை கண்டுவிட்டால், உன்னோட கட்டுப்பாட்டை இழந்து, தீவிரமான தூண்டுதலின் பேரில் அந்தப் பொருளை எடுத்தாலே போதும் என்ற மன உளைச்சலில் எடுக்கிறாய்... சரியா?அந்தப் பொருளை நீ பயன்படுத்துறியோ இல்லையோ, ஆனால், எடுத்தே ஆகணும் என்ற தூண்டுதல் உனக்குள் இருக்கும். அப்படித்தானே. அதன்பிறகு இப்படிச் செய்து விட்டோமோ, என்ற குற்ற உணர்ச்சியால், மன உளைச்சலுக்கு ஆளாகிறாய்... சரியா?இதற்கு பெயர்தான், 'க்ளப்டோமேனியா' என்பது. இது ஒரு வகை, 'தூண்டுதல்' என்றுதான் சொல்ல வேண்டும். இதை, 'திருடுதல்' என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.நீ ஒண்ணு பண்ணு மகளே... இனி உனக்குப் பிடித்த பொருட்களை எடுத்த பிறகு, அந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லிவிடு. அப்போதுதான் உன் மனதை அரிக்கும் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வரமுடியும். அடுத்து, எடுத்த பொருளை அதே இடத்தில் திரும்ப வைக்க கற்றுக் கொள். 'அய்யோ நம்மை, 'திருடி' என்று நினைப்பார்களே...' என்று நினைத்து, இந்தப் பழக்கம் உள்ளவர்கள் திரும்ப கொண்டு போய் அந்தப் பொருளை எடுத்த இடத்தில் வைக்க மாட்டார்கள். ஆனால், நீ முடிந்தவரை அந்தப் பொருளை திரும்ப வைக்கப்பார். இல்லையென்றால், உன் அம்மாவிடம் சொல்லி அவருடன் சேர்ந்து வைக்கப்பார்.இரண்டாவது, 'உனக்கு அந்தப் பொருளை எடுக்க வேண்டும்' என்ற தூண்டுதல் வந்தவுடனே முடிந்தவரை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, 'டிலே' பண்ணு. நீ காலம் தாழ்த்தும்போது அந்த தூண்டுதல் கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பிக்கும். இந்தப் பழக்கத்தை கட்டாயமாக நீ பழகணும். க்ளப்டோமேனியாவுக்கு மருந்து என்று எதுவுமே இல்லை. நான் சொன்ன காரியங்களை நீ கஷ்டப்பட்டு பழகு.இந்த, 'அட்வைஸ்' உங்கம்மாவுக்கு... உங்கள் மகளுடன் நீங்கள் எங்கு சென்றாலும், அவள் எந்தெந்த பொருட்களை பார்த்தால் எடுத்துக்கொள்வாள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும் அல்லவா?அதை வைத்து, புதிய வீட்டில் உள்ள புதிய பொருட்களை பார்த்ததும், 'மகளே உனக்கு அந்தப் பொருளை எடுக்கணும்போல் உள்ளதா?' என கேட்டு பேசி, அவளுடன் சென்று அந்தப் பொருளை எடுத்துப் பார்ப்பது போல் பார்த்து, 'சரி பார்த்துட்டியா? இதில் ஒன்றும் இல்லை? இப்போ அதே இடத்துல வச்சிடு பார்ப்போம்...' என்று சொல்லி அந்தப் பொருளை எடுக்கும் தூண்டுதல் உணர்விலிருந்து அவளுக்கு ஒரு விடுதலை கொடுங்க...இப்படி தொடர்ந்து பழக்கினால் இந்தப் பழக்கம் மாறும். இதற்கு வேறு சிசிக்சையே கிடையாது. இன்றைய சினிமா பிரபலங்கள் மற்றும் மிகப்பெரிய செலிபிரிட்டீஸ் சிலருக்கும் இந்தப் பழக்கம் உள்ளது. இதனால், இவர்களும் எத்தனையோ அவமானங்களை அடைந்துள்ளனர். உங்கள் மகளை, 'திருடி' என்று பட்டம் சூட்டி நோகடிக்காதீங்க. இது திருட்டு வகையைச் சார்ந்தது அல்ல என்பதை புரிந்து கொண்டு அவளை நேசித்து, அரவணைத்து மேலே சொன்ன காரியங்களை பழக்குங்கள். உங்கள் மகள் சரியாகி விடுவாள்.மிகுந்த அக்கறையுடன்,- ஜெனிபர் பிரேம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !