இளஸ்... மனஸ்... (28)
அன்புள்ள ஜெனிபர் ஆன்டி... குட்டீஸ்களின் பிரச்னைக்கு தாங்கள் கூறும் ஆலோசனைகள் சூப்பர்.ஆன்டி எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, எங்கள் தெருவில் உள்ள பல வீடுகளிலும் வேலை செய்கிறார். என் அம்மாவிடம், அந்த தெருவில் உள்ளவர்களின் ஒவ்வொரு வீட்டு விஷயங்களையும் கூறுவார். பக்கத்து வீட்டுப்பெண், ஒருவனை காதலிக்கிறாள்; அடுத்த வீட்டு அண்ணன், மாடி வீட்டு பெண்ணை, 'சைட்' அடிக்கிறான். அந்த மாமா அப்படி; இந்த மாமி இப்படி என்று இல்லாததையும், பொல்லாததையும் கூறுவாள். எங்கம்மாவும் ஆர்வத்துடன் கேட்பார். எனக்கு எரிச்சலாக வரும். நான் அம்மாவிடம், 'அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். நம் வீட்டைப் பற்றியும் ஏதாவது வதந்தியைப் பரப்புவார். அந்த அம்மாவை வேலையை விட்டு நீக்கி விடுங்கள்!' என்றேன்.'நீ ரொம்ப சின்னப் பெண்; படிக்கிற வேலையைப் பார்' என்கிறார் அம்மா.அந்த அம்மா சொல்வது தப்புதானே ஆன்டி? எங்கம்மாவை திருத்த ஒரு யோசனை கூறுங்கள்... சபாஷ் மகளே... ரொம்ப நல்ல பொண்ணு நீ. பொதுவாக பெண்கள் மற்றவர்களைப் பற்றி பேசுவதை மிகவும் விரும்புவர். நீயும் உங்கம்மா கூட சேர்ந்து, மற்றவர்களைப் பற்றி பேசும் கதைகளை ரசிக்காமல், உன் வீட்டு வேலை செய்பவர் புறளி பேசுகிறார் என்பதை புரிந்து, உன் அம்மாவை கண்டித்தாய் பாரு, அதற்குதான் சொன்னேன் சபாஷ்!இது மிகமிகத் தவறான காரியம். எந்த தனிமனிதனுடைய பெயரை கெடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. சிலருக்கு இது ஒரு பழக்கம். தூங்கி எழுந்ததில் இருந்து மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது, இல்லாததையும் பொல்லாததையும் சொல்வது. மற்றவர்கள் பிள்ளைகளைப் பற்றி கதை கட்டுவது, அவன் இப்படி, இவள் அப்படி... என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பர். இப்படி அவதூறு பேசுபவர்களின் பிள்ளைகள் சீர்கெட்டு போய் விடுவர். காரணம், நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் நாம் அறுவடை செய்ய முடியும்.இந்த அட்வைஸ் உங்க மம்மிக்கு: அம்மா, நீங்க வயதில் பெரியவர்கள். இருந்தாலும் உங்க மகள் எத்தனை அழகா உங்களுக்கு, 'அட்வைஸ்' பண்றா பாருங்க. உங்க மகளது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், நீங்க மற்றவர் வீட்டுக் கதைகளை, சுவாரஸ்யமாக கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும். உங்களிடம் இன்பமாக, மற்றவர்களை பற்றி பேசும் உங்கள் வீட்டு பணிப்பெண், மற்றவர்களிடம் உங்களை பற்றி என்ன சொல்லுவாள் தெரியுமா?'அந்தம்மா ஒரு லூசு... மற்றவங்க வீட்டு கதைன்னா நல்லா வாயை பிளந்துகிட்டு கேட்கும். நான் அத இத சொல்லியே வேலை செய்யாம ஏமாத்துவேன். அதுவும் நம்பிகிட்டு எனக்கு நல்லா கொடுக்கும்...' என்று சொல்லுவாள். அதுமட்டுமல்ல, உங்க மகளைப் பற்றியும் மற்றவர்களிடம் கேவலமாக கதை கட்டுவாள். இது தேவையா உங்களுக்கு?இப்படிப்பட்ட வேலைக்காரிகளை, 'சட்'டென்று நிறுத்தினாலும், கோபம் வந்து உங்களையும், உங்கள் மகளைப் பற்றியும் இன்னும் கேவலமாக மற்றவர்களிடம் பேசுவாள். எனவே, அவளுடன் பேசுவதை அப்படியே குறைத்து, சமயம் வந்தவுடன் அவளை வேலையை விட்டு நிறுத்தி விடுங்கள். அதுதான் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் நல்லது!இப்படி புறம் பேசுபவர்களால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படுவது எவ்வளவு ஆபத்தானது என்று யோசித்துப் பாருங்கள். அவர்களது சாபம் உங்கள் பிள்ளைகளை தாக்கும்.எப்போதுமே மற்றவர்களை நம்மை விட மேலானவர்களாகவே எண்ணுங்கள். உங்கள் மனதில் நல்ல எண்ணங்கள் வர, நல்ல புத்தகங்கள் வாசியுங்கள்; நல்ல நண்பர்களிடம் பேசுங்கள்.நல்ல மகளைப் பெற்றுள்ள நீங்கள், அவளுக்கு எல்லாவிதத்திலும், 'ரோல் மாடல்' ஆக இருக்க வேண்டும் என்பதை மறந்துடாதீங்க!உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,- ஜெனி பிரேம்.