இளஸ் மனஸ்! (145)
அன்புள்ள பிளாரன்ஸ் ஆன்டி...அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் நாங்கள். எங்கள் குழுவில், 20 பேர் உண்டு. குழுவில் சீனியர் அண்ணா, 10ம் வகுப்பு படிக்கிறார்; ஜூனியர் தங்கச்சி, 2ம் வகுப்பு படிக்கிறாள். சென்ற வாரம் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி பேசினோம். சில விஷயங்கள் எங்களுக்கு தெரியவில்லை.போக்குவரத்து விதிகள் மற்றும் சிக்னல் குறித்து முழுமையாக அறிய சொல்லி தாருங்கள் ஆன்டி. பள்ளி செல்லும் எங்களை தற்காத்து கொள்ள தேவையான அறிவுரைகளையும் கூறுங்கள்!-- இப்படிக்கு, அப்பார்ட்மென்ட் குட்டீஸ் கேங்.அன்பு பூக்குட்டிகளா...உங்கள் அறிவுத்தேடலுக்கு தலை வணங்குகிறேன்.சாலை விதிகள் என்பது, வாகன ஓட்டுனர்களுக்கான விதி, எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களின் தொகுப்பு. அது, போக்குவரத்தை சீர்படுத்துகிறது; தெருக்களில், பிரதான சாலைகளில் செல்லும் வாகனங்களை, பாதசாரிகளை ஒழுங்குப்படுத்துகிறது. சாலையில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் பதிவு எண் பெறுவது கட்டாயம். வாகனம் ஓட்டுபவரிடம், முறையான ஓட்டுனர் உரிமம், பதிவு எண் புத்தகம், வாகன காப்பீடு மற்றும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.போக்குவரத்தை முறைப்படுத்தும் சிக்னல் என்ற குறிகள் மொத்தம், 110 இருக்கின்றன; அவற்றை, ஆறு வகையாக பிரிக்கலாம்.அவை ...* போக்குவரத்து கட்டுப்பாடு குறிகள்* நேரம் குறித்த குறிகள்* கைகளால் இயக்கப்படும் குறிகள்* தானியங்கி குறிகள்* பாதசாரி குறிகள்* சிறப்பு போக்குவரத்து குறிகள் என்பனவாகும்.சில முக்கிய போக்குவரத்து குறிகளை பார்ப்போம்...* மருத்துவமனை அருகே ஒலி எழுப்பக்கூடாது* பள்ளிக் கூடப் பகுதியில் மெதுவாக செல்ல வேண்டும்* குறுகிய பாலம் போன்ற பகுதிகளில்,30 கி.மீ., வேகம் தாண்டக்கூடாது* ஆட்கள் வேலை செய்யும் பகுதியில் நிதானமாக ஓட்ட வேண்டும்* இடது, வலது பக்க வளைவுள்ள பகுதியில், கவனமாக ஓட்ட வேண்டும்* விபத்து பகுதியில், கவனமாய் ஓட்ட வேண்டும்.இது போன்ற குறிகளை கவனித்து பயணிக்க வேண்டும். நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த தானியங்கி முறையில், சிக்னல் விளக்குகள் இயங்குகின்றன.இவற்றின்படி...* சிவப்பு விளக்கு குறி என்றால் நிற்க வேண்டும் * மஞ்சள் என்றால் புறப்பட தயாராக வேண்டும்* பச்சை என்றால் புறப்பட வேண்டும்.சிவப்பிலிருந்து, பச்சை சிக்னலுக்கு மாற, 90 நொடிகள் வரை ஆகும்.தினமும் பள்ளிக்கு செல்லும் உங்களுக்கு, உங்கள் பெயர், பெற்றோரின் பெயர், வீட்டு முகவரி மற்றும் பெற்றோரின் அலைபேசி எண்ணை தெளிவாக சொல்ல தெரிந்திருக்க வேண்டும்.* சாலையில் நடக்கும் போது உடன் வருபவருடன் பேசக்கூடாது* தீயுடனோ, கூர்மையான பொருட்களுடனோ விளையாடக்கூடாது* புயல், பூகம்பம், சாலை விபத்து, குண்டு வெடிப்பு, தீ விபத்து நேரங்களில், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்* விளையாடும் போது, பாதுகாப்பு சாதனங்களை அணிய வேண்டும்* சாலையில் செல்லும் போது, மின்கம்பங்களை தொடக்கூடாது.பாதுகாப்பை உறுதி செய்ய, போக்குவரத்து விதிகளை மதித்து நடங்கள் கன்று குட்டிகளா!- அன்புடன், பிளாரன்ஸ்