இளஸ் மனஸ்! (210)
அன்புள்ள ஆன்டி...என் வயது, 18; பிளஸ் 2 முடித்து, கல்லுாரியில் இளங்கலை பொருளாதாரம் சேர்ந்துள்ள மாணவன். இப்போதெல்லாம் அந்நிய செலாவணி என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகின்றனர். பத்திரிகைகளிலும் இது பற்றிய செய்திகளை பார்க்கிறேன். அந்நிய செலாவணி என்றால் என்ன... இது ஒரு நாட்டின் கையில் எவ்வளவு இருக்க வேண்டும்; அந்நிய செலாவணியை கூட்டும், குறைக்கும் நடவடிக்கைகள் எவை... இது பற்றி புரியும்படி சொல்லுங்கள் ஆன்டி...இப்படிக்கு,கார்த்திகேயன் ஜீவரத்தினம்.அன்புள்ள கார்த்தி...ஒரு நாட்டிற்கு, ஏற்றுமதியும், இறக்குமதியும் முக்கியம். இறக்குமதிக்கான செலவை அமெரிக்க பணமான டாலரில் தான் தர வேண்டும். ஒரு நாட்டின் அந்நிய செலாவணி, அந்த நாட்டின், மூன்று மாத இறக்குமதி தேவைகளையாவது குறைந்த அளவு பூர்த்தி செய்ய வேண்டும். நம் நாட்டின் அந்நிய செலாவணி,1 ஆண்டு இறக்குமதிக்கு போதுமானதாய் இருக்கிறது. இந்த பதில் எழுதும் போது, 1 அமெரிக்க டாலர், இந்தியாவில் 83 ரூபாய்க்கு சமம்.அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டம், (காபிபோசா) 1974ல் கொண்டு வரப்பட்டது. அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்கான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம், (பெமா) 1999ல் நிறைவேறியது.அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை கண்காணிக்க, மத்திய அரசில் ஒரு அமைப்பு இருக்கிறது. ஒரு நாட்டின் அந்நிய செலாவணி இருப்பை ரொக்கம், வங்கி வைப்பு தொகை, பத்திரங்கள், தேசிய நாணயங்கள், இந்திய ரூபாயை தவிர, மற்ற நாணயங்களில், குறிப்பிடப்பட்ட நிதி சொத்துகள், பணக்கார நாடுகளின் மானியங்கள், நன்கொடைகள் மற்றும் பிற நாடுகள் மற்றும் அமைப்புகள் தரும் கடன்கள் இவையே தீர்மானிக்கும்.அந்நிய செலாவணியை, இந்திய ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது; இந்தியாவிடம் அந்நிய செலாவணி இருப்பு, 532.835 பில்லியன் அமெரிக்க டாலர். 1 பில்லியன் டாலர் என்பது, 8,259 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சமம். இந்த கணக்கில் நம் நாட்டில் உள்ள நிதி நிலையை புரிந்து கொள்.வெளிநாட்டு நாணய மதிப்பில் உள்ள சொத்துகள், 471.496 பில்லியன் அமெரிக்க டாலர்கள். தங்கம் கையிருப்பு, 38.995 பில்லியன் அமெரிக்க டாலர்கள்; சர்வதேச நாணய நிதியம் கொடுத்தது, 17.582 பில்லியன் அமெரிக்க டாலர்.நம் நாடு, பெட்ரோலிய பொருட்கள், நகை, இயந்திரங்கள், பருப்பு வகைகள், இரும்பு, துணி, மின்பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதில், 660 பில்லியன் அமெரிக்கன் டாலர் சம்பாதிக்கிறது. தாதுப்பொருட்கள், கச்சா எண்ணெய், விலை உயர்ந்த கற்கள், பிளாஸ்டிக், உரங்கள், தங்கம், தொழிற்சாலை இயந்திரங்கள், கரிம ரசாயனம், கொழுப்பு மற்றும் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்கிறது. அதற்காக, 725 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்கிறது. சீனப்பொருட்களை, 16 சதவீதம் அளவில் நம்நாடு இறக்குமதி செய்கிறது; மொத்தத்தில், இந்திய பொருளாதாரம் ஆரோக்கியமாக, சிறப்பாக இருக்கிறது.இனி வரும் நாட்களில் இறக்குமதியை பெருமளவு குறைத்து, ஏற்றுமதியை கூட்ட வேண்டும். கச்சா எண்ணெய்க்கு முழுமையான மாற்று பொருளை கண்டுபிடிக்க வேண்டும். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.