இளஸ் மனஸ்! (86)
அன்புள்ள பிளாரன்ஸ்...நான், 62 வயது மூதாட்டி; பேரன், பேத்தி வயது முறையே, 10, 13. இருவருக்கும் குழந்தை முதலே, கை சூப்பும் பழக்கம் இருக்கிறது.எப்போதும் கை சூப்புவது இல்லை என்றாலும் துாக்கத்தின் போது, கட்டை விரலை வாயில் வைத்துள்ளனர். விரல்களில் துணி சுற்றியும், பிளாஸ்திரி ஒட்டியும், வேப்பெண்ணெய் தடவியும் பார்த்து விட்டோம். அந்த பழக்கத்தை விடுவதாக இல்லை.இந்த பழக்கத்தை தவிர்க்க, பல வழிகளிலும் முயற்சித்து வருகிறேன். என் பேத்தி தான், 'பிளாரன்ஸ் ஆன்டிக்கு எழுதிப் போடுங்கள்... நல்ல ஆலோசனை கிடைக்கும்...' என்று கூறினாள்; இதற்கு நல்லதொரு வழியை காட்டுங்கள்!அன்புள்ள அம்மா... உங்கள் வேதனையை உணர்ந்தேன்.கருவறையில் மிதக்கும் குழந்தை கூட, கை சூப்புகிறது என, விஞ்ஞானம் கூறுகிறது. எனக்கு தெரிந்த, 80 வயது பெண்மணி இன்னுமே விரல் சூப்புகிறார். சோம்பேறியாக உள்ள அம்மாக்கள், குழந்தை அழும் போது, குழந்தையின் கட்டை விரலை வாயில் திணித்து சூப்ப வைத்து இந்தப் பழக்கத்தை ஏற்படுத்துகின்றனர். ரப்பர் நிப்பிளை குழந்தை வாயில் திணித்து அழுகையை அடக்க முயல்கின்றனர். இவை எல்லாம், விரல் சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான குழந்தைகள், தாய்பால் குடிக்காத போது, அமைதிக்காக விரல் சூப்புகின்றனர்; 90 சதவீத குழந்தைகள், மூன்று வயது நிரம்பியவுடன், விரல் சூப்புவதை சுயமாகவே நிறுத்திக் கொள்கின்றனர்.ஒழுங்கீனமான, களைப்பற்ற, பாதுகாப்பு உணர்வற்ற, பதட்டமிக்க குழந்தைகளே, தொடர்ந்து, விரல் சூப்புகின்றனர். நிரந்த பற்கள் முளைப்பதற்கு முன், குழந்தைகளின் விரல் சூப்பலை தடுத்து நிறுத்த வேண்டும். விரல் சூப்புவதால், காது தொற்றும், வாய் வழி கிருமி தொற்றும் ஏற்படும். விரல் சூப்பும் பழக்கம், பேச்சு, பல் மற்றும் தாடை அமைப்பை சீர் கெடுக்கும்.விரல் சூப்பும் குழந்தையை திட்டவோ, அடிக்கவோ கூடாது. தொடர்ந்து சூப்பினால், 'தெற்று பல் வரும்; முகம் கூம்பிப் போகும்' என்பதை, பேரக்குழந்தைகளிடம் தொடர்ந்து வலியுறுத்துங்கள்.குழந்தைகளிடம் அனுமதி பெற்று, துாங்கும் பேரக்குழந்தைகளின் கைகளை கட்டிலுடன் கட்டுங்கள்; குழந்தைகள் ஒத்துழைத்தால் மனம் திறந்து பாராட்டுங்கள்; பரிசு பொருள் வழங்குங்கள்.* துாங்க போகும் போது கதைகள் கூறுங்கள்* பொம்மை கொடுத்து, கை சூப்பும் பழக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்புங்கள்* கட்டை விரலில், 'பேண்ட் எய்ட்' ஒட்டுங்கள்; விரல்களில் வேப்பெண்ணெய் தடவுங்கள்; துாங்க போகும் முன், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்* பொறுமையாக செயல்பட்டு விரல் சூப்பலை அறவே நிறுத்துங்கள்* பல் மருத்துவரிடம், தகுந்த அறிவுரை பெறுங்கள்* துாங்கும் போது, குழந்தைகளை, உங்களின் இரு பக்கமும் படுக்க வைத்து கண்காணியுங்கள்* விரல் சூப்புவதை புகைப்படம் எடுத்து, விழித்திருக்கும் போது, காட்டுங்கள்; வெட்கப்பட்டு நிறுத்திக்கொள்வர்* வகுப்பு ஆசிரியர்களிடம் தகுந்த அறிவுரை கூற வலியுறுத்துங்கள்; அம்மாவை விட, வகுப்பு ஆசிரியையின் வார்த்தைகள் வீரியமானவை.- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.