உள்ளூர் செய்திகள்

ஜில்லு, ஜிட்டு.. (2)

''வாணாம்ப்பா... இந்த பயலை எங்கேன்னு ஒளிச்சுவைப்பே இவன் தான் ஓயாமே உம்... உம்... னு சவுண்டு கொடுத்துட்டே இருக்கானே... உன் அப்பா காதுலே வுளுந்தா அப்புறம் வெனையே வாணாம். நீ அப்பப்போ போயி கொஞ்சிட்டு வா...'' என்றாள்.பூசாரி ஐயா வீட்டிற்கு சென்ற பாரி, எல்லா விபரத்தையும் கூறினான்.''ஐயா! என் அப்பாவுக்கு மட்டும் தெரியக்கூடாது,'' என்று திரும்ப, திரும்ப சொன்னான்.''நீ கவலைப்படாமே போ... நான் பாத்துக்கறேன். இந்த பச்சிலைகளை விட இன்னும் வீரியமான பச்சிலை எந்தோட்டத்திலே இருக்குப்பா... நா இந்த பச்சிலையை எடுத்துட்டு அதனை வைச்சுகட்டிவிடறேன். இரண்டே நாள்லே சொகமாயிரும்.''சின்ன பயலை பத்தி கவலைப்படாதே. ஒரே மாசத்திலே இவனும், அவன் அம்மா மாதிரி அந்த ஆகாசக்கூரையிலே வட்டமடிப்பான். அதுக்கு நான் உத்தரவாதம். நீ கவலைப்படாம உன் வீட்டுக்கு போ,'' என்றார்.அடுத்து வந்த இரண்டு நாளில் பூசாரி மிக லாவகமாக சிவகாமி கட்டுப்போட்டிருந்த அந்த பச்சை இலை கூழையெல்லாம் அப்பறவையின் மீதிருந்து எடுத்து விட்டு, தான் புதிதாக தயாரித்து வந்த பச்சிலைக் கூழை தடவி... மேலும், சில தழைகளால் அதன் உடலை கட்டி வைத்தார்.பாவம். இந்த இரண்டு நாட்களிலேயே அதற்கு வலி சற்று குறைந்திருந்தது போலும். அவ்வப்போது கண்களை திறந்து தன் அருகில் தூவப்பட்டிருந்த தானியங்களை கொத்தி திங்க ஆரம்பித்து விட்டது. குட்டி பாப்பாவும் அம்மாவை சுத்தி சுத்தி வந்து, 'உம்... உம்...' என்று ஏதோ பேசிக்கொண்டே இருந்தது.பூசாரி சிகிச்சையால் இரண்டு நாட்களில் அம்மா பறவைக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம். அம்மாவிற்கு, 'ஜில்லூ' என்றும், குட்டி பயலுக்கு, 'ஜிட்டும்மா' என்றும் பெயர் சூட்டினான் பாரி. அன்று அப்பா சந்தைக்கு போன பின்பு ஜில்லூ, ஜிட்டுமாவுடன் காட்டுக்கு புறப்பட்டான் பாரி.''ஜில்லும்மாவை கட்டி அணைத்தபடி, ஜில்லும்மா! எனக்கு உன்னை விட்டு பிரிய மனசே இல்லை. ஆனாலும் உன்னை எப்படி வீட்டிற்குள்ளேயே அடைத்து வைப்பது. இந்த குட்டிப்பயலை நான் இன்னும் கொஞ்ச நாள் என்னோடு ஜாக்கிரதையாக வைத்துக்கொள்கிறேன்.''உன்னை மாதிரி பறக்க ஆரம்பித்ததும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். அதுவரை தினமும் நான் இங்கே வந்து உனக்கு ஜில்லூனு குரல் கொடுப்பேன் நீ பறந்து வந்து, பாப்பாவுடன் விளையாடிவிட்டுப் போ. ஜாக்கிரதை நான் குரல் கொடுத்தால் மட்டுமே வா!'' என எச்சரிக்கை கொடுத்து விட்டு, ''வாடா தம்பி. என் நயினா வர்றதுக்குள்ளே உன்னை வீட்லே கொண்டு போய் விட்டு விடுகிறேன்,'' என்று சொல்லி புறப்பட்டான்.நாள் தவறாமல் அம்மா சமைத்துக்கொடுக்கும் மீனை நிறைய எடுத்து போய் தன் தம்பிக்கு கொடுத்து, அதற்கு ஊட்டிவிட்டு அதனுடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருப்பான்.நல்ல ஊட்டமான உணவு, அன்பும், பரிவும் போட்டி போடும் அரவணைப்பு. குட்டி பயலின் வளர்ச்சிக்கு கேட்பானேன். பளபளவென்று இளஞ்சிவப்பு இறக்கைன்னு நீண்ட மஞ்சள் நிற அலகும் கால்களும் அப்பப்பா இந்த அழகுப்பயல் சீக்கிரமே என்னிடம் இருந்து புறப்பட்டு விடுவான். நினைக்கவே துக்கம் தொண்டையை அடைத்தது. ராசா! என்னைய வுட்டுட்டு நீ போயிருவாயாடா? என்று கட்டிக்கொண்டு முத்தமாரி பொழிந்து விடுவான்.நாள்தவறாமல் தம்பியை முதுகில் சுமந்து கண் வெடிக்கும் பாறைக்கு அருகில் சென்று ஆகாயக் கூரையை நோக்கி, ஜில்லும்மா! ரெடியா நானும் தம்பியும் உன்னை பார்க்க வந்திருக்கிறோம் என்று ஏங்கி குரல் கொடுப்பான். இந்த குரலுக்காகவே காத்திருந்ததைப் போல் பெரிய சிறகை விரித்து படபடவென்று சத்தத்துடன் விருட்டென்று கீழே பாய்ந்து அவன் மடியில் உட்காரும்.''டேய்! குட்டிப்பயலே! அம்மாவிற்கு நீ பறந்து காமிடா. நீ நல்லா பறக்குறேன்னு அம்மா சொன்னாதான் உன்னை அவர்களுடன் அனுப்பி வைப்பேன்...'' என்று செல்லமாக மிரட்டுவான்.பாரி சொன்னவுடன் டக்டென்று உயரே எழும்பி பறக்க ஆரம்பிப்பான். ஆனால், சிறிது நேரத்திற்கு பிறகு கீழே இறங்கி விடுவான்.''ஜில்லும்மா! என்னை மன்னிச்சுடு. என் தம்பி உனக்கு போட்டியா பறக்குற வரை இவனை அனுப்பமாட்டேன்'' என்று கண்டிப்பாக சொல்லிவிடுவான்.அவன் கொண்டுவரும் ஆகாரத்தை தின்று விட்டு, ''சரி உன்னிடம் நீ எப்போ அனுப்பறயோ அப்பதான் நா கூட்டிட்டு போவேன்,'' என்று சொல்லி இருவரையும் கொஞ்சிவிட்டு புறப்பட்டு விடுவான்.அவனும் பெரிய மனுஷியைப் போல் வரும்போது வெறும் கையுடன் வரமாட்டான். மலை உச்சியில் கிடைக்கும் சில ருசியான பழங்களை தன் அலகால் கொத்திக்கொண்டு வந்து கொடுப்பான். அண்ணனும், தம்பியும் அதனை மிகவும் ருசித்து சாப்பிடுவர்.ஜில்லும்மா மிகவும் கெட்டிக்காரி. பழங்களை ஒவ்வொன்றாக சேகரித்து நிறையவே அந்த பாறை இடுக்கில் குவித்து வைத்திருப்பாள். அப்புறம் ஒவ்வொன்றாக எடுத்து வந்து கொடுத்து உபசரிப்பார்.அன்று ஜிட்டுப்பயல் புறப்பட வேண்டிய தினம். மகளை அழைத்துப் போக அம்மா வந்து விட, இருவரையும் கட்டி அணைத்து முத்தமாரி பொழிந்து, ''தினமும் நா குரல் கொடுத்த உடன் நீங்க இரண்டு பேரும் ஓடி வரணும்,'' என்று சொல்லி விடை கொடுத்தான்.நாள் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்து பாரி குரல் கொடுப்பான். டக்டென்று விண்வெளியில் புறப்படும் ராக்கெட் போல இருவரும் மிக வேகமாக இறங்கி வந்து இவன் மடியில் அமர்ந்து கொஞ்சி குலாவிவிட்டு போவதும் மிக அற்புதமான காட்சி என்பதில் ஐயமில்லை.அன்று -ஆற்றங்கரையில் அமர்ந்து ஜில்லூ, ஜிட்டும்மா என்று குரல் கொடுத்தான். வழக்கப் படி இவனின் குரலுக்காகவே காத்திருந்த ஜில்லுவும், ஜிட்டுவும் உடனே விர்றென்று பறந்தோடி வந்து இவன் மடியிலும், தோளிலும் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்திருந்த அதி ருசியான பழங்களை அவனுக்கு கொடுக்க... அவனும், தன் அம்மா கொடுத்த மீன் கறி குழம்பை அவைகளுக்கு ஊட்டி விட்டான்.அந்நேரம் காட்டு வழியே வந்த செந்தில் 'ஜில்லு... ஜிட்டும்மா' என்று கூவுவது யார்? குரலைக் கேட்டால் பாரி குரலைப்போலல்லவா இருக்கிறது இவன் யாருக்கு குரல் கொடுக்கிறான்? என்று குழம்பியவாறே மிக கவனமாக குரல் வந்த திசையை நோக்கி நடந்தான். அங்கே ஆற்றங்கரையில் அவன் கண்ட காட்சி?'தன் தோளிலும், மடியிலும் அமர்ந்து அவனுடன் கொஞ்சி குலாவி ஆகாரம் தின்பது... ஓ! இது அன்று நான் குறிவைத்து அடித்த அந்த ஸ்டீலா பறவை அல்லவா? இந்த துரோகிப்பயல்தான் அதனை எடுத்துப் போய் எங்கேயோ ஒளித்து வைத்து குணப்படுத்தி பறக்கவிட்டிருக்கான். இவனை சும்மா விட்டுவிடுவதா?''டாய்!'' என்று மிக ஆக்ரோஷமாக குரல் கொடுத்தபடியே, தன் வில்லில் அம்பை ஏற்றி அப்பறவைகளை குறிவைத்து முன்னேறினான்.குரல் கேட்டு திரும்பியவன் ஒரே ஒரு கணம் பதறியவன் சட்டென்று சுதாரித்துக்கொண்டான்.''ஜில்லு... ஜிட்டும்மா! நீங்க சீக்கிரம் போங்கடா'' என்று அவைகளை துரத்தி விட்டு, தன் அப்பாவின் பக்கம் திரும்பினான்.''நயினா! இந்த பறவைகளை நீ கொன்றால் உடனே, நான் இந்த ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்து கொள்வேன். இப்போ இந்த பறவைகளுடன் என்னையும் சேர்த்து குறி வைத்து கொன்று போட்டுடு நயினா. அப்பதான் உனக்கு திருப்தி,'' என்றான்.இந்த பேச்சை கேட்ட செந்தில் சற்று அதிர்ந்தான்.'இந்த பயல் சொன்னதை செய்துவிடுவான். என்ன இருந்தாலும் என் மவனாச்சே. இவன் தற்கொலை பண்ணிட்டா அப்புறம் இவன் அம்மா என்னை சும்மா விடுவாளா? சரி... தற்காலிகமாக இவனை சற்று விட்டுப் பிடிப்போம்..' என்று நினைத்தான்.''சரிடா மவனே! உன் பறவைகளை நான் கொல்ல மாட்டேன். அதற்கு பதிலாக நீ எனக்கு என்ன தருவாய்?'' என்றான் செந்தில்.-2 தொடரும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !