மனம் கனிந்த கொஞ்சல்!
சேலம் மாவட்டம், பள்ளிபாளையம், அரசு தொடக்கப் பள்ளியில், 1967ல், 5ம் வகுப்பு படித்தபோது, இரண்டு நாள் சுற்றுலாவாக, ஸ்ரீரங்கம் அழைத்து செல்லப்போவதாக அறிவித்தார் ஆசிரியை பாப்பாத்தி. அப்பாவிடம் ஆசையோடு கூறி பணம் கேட்டேன்.'இரவில் தனியாக துாங்கி பழக்கமில்லாதவள் நீ; போக வேண்டாம்...' என்றார். பிடிவாதம் செய்ததால் எச்சரித்து அனுப்பி வைத்தார்.தோழியருடன், திருச்சி, மலைக்கோட்டை, கடை வீதி என, சுற்றித்திரிந்து, இரவு தங்கவிருந்த பள்ளிக்கு வந்தோம். படுக்கைக்கு சென்ற போது, அம்மாவின் நினைவு வர, அழ ஆரம்பித்தேன். சமாதானப்படுத்திய ஆசிரியை, அருகிலேயே படுக்க வைத்து கொஞ்சினார். என்னை அறியாமல் துாங்கி விட்டேன். மறுநாள் காலை, கேலி செய்தவர்களை அன்புடன் கடிந்து, 'கவலைப்படாதே... இன்று இரவும் அம்மாவின் மடியில் துாங்கலாம்...' என, புன்னகை செய்தார். மிகவும் ஆறுதலாக உணர்ந்தேன்; குதுாகலமடைந்தேன்.இப்போது என் வயது, 64; ஆசிரியை என்பவர் இரண்டாவது பெற்றோர் என உணர்த்திய அந்த ஆசிரியையின் முகம், மனதில் பசுமையாக உள்ளது.- பானு பெரியதம்பி, சேலம்.