பதிந்த பாடம்!
கும்பகோணம், நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில், 1983ல், 9ம் வகுப்பு படித்தபோது, வரலாறு - புவியியல் ஆசிரியராக இருந்த, பி.எஸ்.சேதுராமன், எளிய முறையில் பாடங்களை புரிய வைப்பார்.அன்று பருவ காலங்கள் குறித்து பாடம் நடத்தினார். வடகிழக்கு பருவமழை, தமிழகத்தில், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டுமே பெய்யும். இதை மனதில் பதிய வைக்கும் விதமாக, மூன்று மாதங்களின் ஆங்கில முதல் எழுத்துக்களான, 'ஒ - என் - டி' என்பதை இணைத்து, 'வடகிழக்கு பருவமழை, 'ஒன்டி' தான் பெய்யும்...' என்று நகைச்சுவை ததும்ப கற்பித்தார்.எங்கள் பகுதியில், 'ஒன்டி' என்ற வட்டார வழக்கு, 'மட்டும்' என பொருள் தரும். இதனால், அவர் புகட்டிய பாடம் எளிதாக நினைவில் பதிந்தது. மகிழ்ச்சியுடன் கற்று உயர்ந்தோம். தற்போது, என் வயது, 53; அந்த ஆசிரியர் சுவாரசியமாக நடத்திய பாடம், மனதில் நிறைந்துள்ளது. அவரை வணங்குகிறேன்.- த.சிவக்குமார், திருச்சி.