உள்ளூர் செய்திகள்

மாஜிக் மந்த்ரா! (4)

சென்றவாரம்: மந்த்ரா மந்திரத்தை அடிக்கடி மறப்பதால் தாத்தா மிகவும் கோபப்பட்டார். இனி-கருப்புப் பூனை இங்குமங்கும் பார்த்தது. யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, போலியான கோபத்துடன், ''இதோ பாரு மந்த்ரா குட்டி! நீ இப்படி மந்திரங்களை மறந்து போவது நல்லா இல்லே... இப்படி ஞாபக சக்தி இல்லாத உனக்கு, நான் இனி எந்த மந்திரமும் சொல்லித்தரப் போவதில்லை. உன் ஞாபக மறதிக்கு தண்டனையா, நீ அந்தக் குல்லா வோடயே குளிக்கப் போறே... தூங்கப்போறே. நீயா அந்த மந்திரத்தை நினைவுப் படுத்திக் கொண்டு, குல்லாயை அப்புறப்படுத்திக்கோ நான் உதவ மாட்டேன்!'' என்று ஜன்னல் ஓரமாக தழைந்திருத்த ஒரு மரத்தின் கிளையில் தாவி மறைந்து போனார் கேசவன் குட்டி.மந்த்ராவுக்கு அழுகையாக வந்தது. தாத்தாவின் கோபம் நிஜமல்ல... என்று அவளுக்குத் தெரியும். ஆனால், இப்போது அவர் உதவமாட்டார் என்பதும் அவளுக்குத் தெரியும். ஏன் இப்படி தனக்கு இந்த மோச மான ஞாபக மறதி? தலையில் குட்டிக் கொள்ளப் போனாள். அதையும் அந்தக் கோமாளிக் குல்லாய் தடுத்து விட்டது! பாவம் மந்த்ரா.குளிப்பதற்கு பாத்ரூமுக்குப் போனாள். தலையில் குல்லாவோடு ஷவரின் கீழே நின்றாள். ஷவர் தண்ணீர் குல்லாயில் விழுந்து பரவலாகச் சிதறியது. குடையின் கீழ் இருப்பது போல. மந்த்ரா மீது தண்ணீர் விழவே இல்லை. மேலே தண்ணீர் விழாமல் எப்படி ஆனந்தக் குளியலை அனுபவிக்க முடியும்? துக்கம் தொண்டையை அடைத்தது மந்த்ராவுக்கு.அவளுடைய 27ம் என் அறையில் அவள் மட்டும் தனியாக இல்லை. பத்து மாணவியர் தங்கும் அறை அது. அந்த பத்து மாணவியரில் மங்காத்தாவும், அவள் கோஷ்டிகளும் அடக்கம்.மங்காத்தா தன் கோஷ்டியோடு 27ம் நம்பர் அறைக்குள் நுழைந்தாள். சோகமே உருவாக கோமாளித்தொப்பியுடன் மந்த்ரா கன்னத்தில் கை வைத்தபடி தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்டனர் மங்காத்தா கோஷ்டியினர்.மந்த்ரா தன் ஹாஸ்டல் அறையில், கவலையோடு உட்கார்ந்திருந்தாள். மங்காத்தா கோஷ்டியினரின் குறும்பை முறியடிக்க, அவள் தன் கோமாளிக் குல்லாயின் மீது போட்ட மந்திரம் விபரீதமாகி விட்டது. இப்போது அதை அவளாலேயே தலையிலிருந்து அகற்ற முடியவில்லை. தான் போட்ட மந்திரத்துக்கு முறிவு மந்திரம் போட, அவளுக்குத் தெரியவில்லை.மங்காத்தா கோஷ்டியினர் அறையின் வாசலில் ஓசை படாமல் வந்து கூடி நிற்பதை மந்த்ரா தெரிந்துக் கொண்டாள். ஆனால், அறியாதவள் போல அலட்சியமாக உட்கார்ந்திருந்தாள் தன் படுக்கையில். மாணவியர் எல்லாரும் படுக்க வேண்டிய நேரம் அது. ''கர்வம் பிடித்த அந்தப் புது மாணவியை, கொஞ்சம் மிரட்டி வைப்போம். அப்போதுதான் அவள் நம் வழிக்கு வருவாள்,'' என்று தன் தோழிகளிடம் கிசுகிசுத்தாள் மங்காத்தா.''நாம் வந்ததை அவள் பார்க்கவில்லை. ஓசைபடாமல், அவள் கட்டிலை வளைத்துக் கொள்ளுங்கள். பிறகு வழக்கமான நம் முதல் தண்டனையை வழங்குவோம் என்ன?'' கண்சிமிட்டி கட்டளையிட்டாள் மங்காத்தா.அவள் தோழிகளும் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையசைத்து சம்மதித்தனர்.புதிய மாணவியரை கிண்டலும், கேலியும் செய்து பயமுறுத்துவது பழைய மாணவியரின் வழக்கம். அதற்கு பல்வேறு உத்திகளைக் கையாளுவர்.அடங்காப்பிடாரியான மங்காத்தாவின் முதல் தண்டனை என்பது, படுக்கை விரிப்போடு மந்த்ராவை தூக்கி வீசுவது. எதிர்பாராத அந்த நிகழ்ச்சியினால் மந்த்ரா பீதியடைந்து அலறுவாள் என்று நினைத்தாள் மங்காத்தா.ஆனால், நடந்ததோ வேறு. மங்காத்தாவும், அவள் தோழிகளும் பூனைகளைப் போல ஓசைப்படாமல் வந்து மந்த்ரா கட்டிலை வளைத்துக் கொண்டனர். அவள் அமர்ந்திருந்த படுக்கை விரிப்பின் நான்கு முனைகளையும் அவர்களது கரங்கள் உறுதியாக பற்றிக் கொண்டன.''கர்வம் பிடித்த மந்த்ரா இதோ ஆகாயத்தில் பறக்கிறாள்!'' என்று கூறிய மங்காத்தா, தன் தோழிகளுக்கு சமிக்ஞை செய்தாள்.அடுத்த வினாடி, அத்தனை கைகளும் மந்த்ராவின் படுக்கை விரிப்பை குபீரென்று தூக்கி அறையின் மேல் கூரையை நோக்கி மந்த்ராவை பந்தாடின. அவர்கள் தன் கட்டிலைச் சூழ்ந்து கொண்டதை மந்த்ரா உணர்ந்தாலும், என்ன செய்ய போகின்றனர் என்பது தெரியாததினால், மந்த்ராவின் கண் களை மூடிக் கொண்டாள். அத்தனை மாணவியரும் சேர்ந்து வீசிய வேகத்தில், பலத்தில் மந்த்ராவின் தலை சீலிங்கில் போய் மோதியது. ஆனால், அவள் தலையிலிருந்த மந்திரக் குல்லாய் அந்த அதிர்ச்சியை வேகத்தைத் தாங்கிக் கொள்ள, அறையின் விதானத்தில் குல்லாயின் கூர்முனை செருகிக் கொண்டது. மந்த்ரா அறையின் உச்சியில் குல்லாயின் பிடிமானத்தில் அந்தரத்தில் தொங்கினாள். இப்போது பீதியடைந்து அலறியது மங்காத் தாவும், அவள் கோஷ்டியினரும்தான். விளை யாட்டாகச் செய்ய, தங்கள் விஷயம் விபரீத மாகிப் போய் விட்டதே... என்று கதிகலங்கினர்.மேல் கூரையை துளைத்துக் கொண்டு நிற்கும் குல்லாயோடு, அந்தரத்தில் தொங்கும் மந்த்ராவை கண்டால் யாருக்குத்தான் பயமாக இருக்காது? மந்த்ரா போட்ட மந்திரத்தினால் அந்தக் கோமாளிக் குல்லாய் கடப்பாரை போல உறுதியாக இருந்தது. தன் குல்லாயின் உறுதியை எண்ணி, மந்த்ரா சிரித்துக் கொண்டாள். அடுத்த வினாடி...மேல் கூரையின் பூச்சு விரிசல் கண்டது. சிமெண்டும், மண்ணும், கல்லும் சீலிங்கி லிருந்து பாளம் பாளமாகப் பெயர்ந்து, மங்காத்தா கோஷ்டியின் தலையில் பொல பொலவென்று விழுந்தன.கூரையில் குத்தி நின்ற குல்லாய் அதி லிருந்து விடுபட்ட மந்த்ரா மெத்தென்ற தன் படுக்கையில், 'பொத்' தென்று விழுந்தாள். மங்காத்தா கோஷ்டியினர் 'காச் மூச்' என்று பீதியினால் கத்தினர். கூச்சல் கேட்டு ஹாஸ்டல் வார்டன் மந்த்ரா அறைக்கு ஓடி வந்தார்.அங்குள்ள களேபரத்தையும், மாணவியர் பீதியடைந்து மிரள, மிரள விழித்தப்படி நிற்பதையும் கண்ட வார்டன், கட்டடத்தின் மேல் கூரையின் காரை தானாக பெயர்ந்து விழுந்திருக்கும். அதனால் மாணவியர் பயந்து விட்டதாக முடிவு செய்தார். மந்த்ரா மாஜிக் பற்றி அவருக்கு தெரியாதே! காலை யில் அதை ரிப்பேர் செய்து விடுவதாக அவர்களைச் சமாதானப்படுத்தினார். பிறகு மங்காத்தாவிடம், பெயர்ந்து விழுந்து சிதறி யுள்ள சிமெண்டுப் பாளங்களையும், கல் மண்ணையும் அப்புறப்படுத்தி சுத்தப் படுத்தும்படி கட்டளையிட்டு, விட்டு தன் அறைக்குத் திரும்பினார் வார்டன்.மங்காத்தா கோஷ்டியினருக்கு ஆத்திரம், அவமானம். நல்லவேளை மந்த்ரா தங்களை காட்டிக் கொடுக்க வில்லை. என்பதில் கொஞ்சம் திருப்தி! ஆனாலும் மங்காத்தாவுக்கு மந்த்ரா மீதுள்ள கோபம் குறையவில்லை.''ஏய்! இதெல்லாம் உன்னோட கோமாளிக் குல்லாயினால்தான். அதென்ன குல்லாயா இல்லே கோடாலியா? இந்தக் காரை, கல், மண்ணை நீதான் அகற்றித் துப்புரவு செய்யணும்!'' என்று துடைப் பத்தை மந்த்ராவின் கையில் திணித்து விட்டு, அறையின் கோடிக்குப் போய் நின்று கொண்டாள்.அப்போது அறையின் வாசலில் ஒரு கருப்புப் பூனை வந்து நின்று எட்டிப் பார்த்தது. அது மந்த்ராவின் தாத்தா கேசவன் குட்டிதான்!தன் பேத்தி இக்கட்டான நிலையில் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார் தாத்தா. அடாவடி முரட்டுப் பெண் மங்காத்தாவிடமிருந்து மந்த்ராவை காப்பாற்ற முடிவு செய்தார். மந்திரத்தை முணு முணுத்தார். அடுத்த வினாடி, கீழே சிதறிக் குவியலாகக் கிடந்த கல்லும், மண்ணும், காரையும் சினிமாவில் வரும் தந்திரக் காட்சியைப் போல குபீரென்று மேலே எழும்பி சீலிங்கில் போய் ஒட்டிக் கொண்டன.'தாத்தான்னா தாத்தாதான்!' என்று பெருமையும், மகிழ்ச்சியுமாக, பூனையை பார்த்தாள் மந்த்ரா.'என் தலையோடு ஒட்டிக் கொண்டு நகரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் குல்லாயையும் விடுவியுங்கள் தாத்தா!' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள். கருப்புப் பூனையின் கண்கள் பளபளத்தன.மங்காத்தாவும், கோஷ்டியும், காரையும், கல்லும், மண்ணும் மேலே எழும்பி மேல் கூரையில் போய் ஒட்டிக் கொண்ட அதிசயத் தைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றனர். அவர்களுக்குப் பேச்சே வரவில்லை. திறந்த வாயை மூடமறந்து போயினர்.மங்காத்தா கோஷ்டியிடையே, ஒரு பயம் பரவியது. அவர்களுடைய திகைப்பைக் கண்டு மந்த்ரா மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்களுக்கு, 'டாட்டா' கூற நினைத்து தன் குல்லாயை எடுத்தாள் தலையிலிருந்து. என்ன ஆச்சரியம்! தலையோடு ஒட்டிக்கொண்டிருந்த குல்லாய் குதிபோட்டபடி அவள் கையோடு வந்தது.'தாத்தா என் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டார்!' என்று மகிழ்ந்தாள் மந்த்ரா.மந்த்ராவின் கேலியும், அலட்சியமும் மங்காத்தாவுக்கு எரிச்சலூட்டின. அவளது வியப்பும், பயமும் அகன்றன. அவர்கள் யாரையும் லட்சியம் செய்யாமல், படுக்கையில் உட்கார்ந்திருக்கும் மந்த்ராவிடம் போனாள் மங்காத்தா.- தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !