மாய விழிகள்! (21)
முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் கும்பலிடம் இருந்து மாணவியரை மீட்க முயன்றபோது சிக்கி கொண்டனர். வேனில் அடைத்து காவல் காத்த ஓட்டுனர் திடீரென உறைந்தான். இதை யார் செய்தது என்பது புதிராக இருந்தது. இனி - அப்போது வேனுக்கு வெளியே குச்சியை ஊன்றி நின்று கொண்டிருந்தார் தோப்புக்கிணறு மூதாட்டி.''நான் தான், வேன் ஓட்டுநரை உறைய வைத்துள்ளேன். அவன் இன்னும், சில நிமிடங்கள் இப்படி தான் நிற்பான். நீங்கள் கீழே இறங்குங்கள்...''முகத்தில், எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டாமல் கூறினார் மூதாட்டி.வியப்பு மாறாத நிலையில், அனைவரும் இறங்கினர். 'மூதாட்டியிடம் பேசலாமா, கூடாதா'புரியாத நிலையில் அனுவும், தியாவும் உற்று நோக்கினர்.''பாட்டி... நீங்கள், இங்கு எப்படி வந்தீர்...''தைரியத்தை வரவழைத்து கேட்டாள் தியா.சிறிது நேரம் மவுனம் காத்து, முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் வெளிகாட்டாமல், பேச துவங்கினார் மூதாட்டி.''நான், இந்த மலை காட்டை சேர்ந்தவள் தான்...''''அப்போ, எங்க ஊர் பாட்டியா நீங்கள். உங்களை இங்கு பார்த்ததே இல்லையே...'' என்றாள் அனு.''என்னை யாரும் பார்த்திருக்க முடியாது. யார் கண்ணிலும் பட மாட்டேன்; உங்க ஊர் பூசாரிக்கு மட்டும் தான் என்னை தெரியும். அவரும், என்னை பற்றி வெளியில் கூற மாட்டார்...''''நீங்கள், யார் வீடு...''''என் வீடு, இங்கு கிடையாது. எங்கள் பரம்பரையில், என்னை தவிர, யாரும் உயிருடன் இல்லை...''''மன்னிச்சிடுங்க பாட்டி...''''எனக்கு, 96 வயதாகிறது...''''நிஜமாகவா... நம்பவே முடியவில்லை; பார்த்தால், 70 வயது மாதிரி தான் தெரிகிறது...''''தானியங்கள் சாப்பிடுவதை, 30 வயதிலேயே விட்டுட்டேன். பின், முழுக்க மூலிகைகள் தான் உணவாக எடுக்கிறேன்...''''மூலிகைகள் சாப்பிடுவீரா...''''இந்த காட்டை அடுத்துள்ள மலையின் உச்சியில் இருக்கும் சித்தர் ஒருவர், எனக்கு, ஆரோக்கிய மூலிகைகளை அடையாளம் காட்டினார். அவற்றை தான் சாப்பிடுகிறேன்; மூலிகைகளை சேகரிக்க காட்டிற்கு வருவேன்...''குழப்பத்தில் மூதாட்டியை பார்த்தனர்.''எனக்கு, முதுமை உண்டு. ஆனால், நோய் நொடிகள் அணுகுவதில்லை...'' என கூறி, ஆச்சரியப்பட வைத்தார் மூதாட்டி.''அந்த ஆழ்வார்குறிச்சி தோப்புக்கிணறு...''''அங்கு தான் என் குடியிருப்பு. என் அம்மா, அங்கு இருந்தார்; அவருடன், நானும் வளர்ந்தேன்; அங்கும், நாங்கள் ஊர் உலகத்தார் கண்ணில் அவ்வளவாக பட்டதில்லை...''''அப்புறம், இங்கு, எப்படி பாட்டி...''''நடை பயணமாய் வந்து, இக்காட்டுக்குள் மூலிகைகளை சேகரிப்பேன். இந்த பெண், முதன்முதலாக தோப்புக்கிணறுக்கு வந்தபோது பார்த்தேன்...''தியாவை சுட்டிக் காட்டி கூறினார் மூதாட்டி.''நான், அவளை கவனிக்கும் முன், தோப்புக்கிணறு நீரை குடித்து விட்டாள். அவள், வந்துள்ளதை பார்த்து இருந்தால், குடிக்க விடாமல் தடுத்து இருப்பேன்...''''மன்னிக்க வேண்டுகிறேன் பாட்டி. அங்கு, தண்ணீர் குடித்தது தப்பா...'' என வினவினாள் தியா.''நான், கவனித்து இருந்தால், உன்னை, குடிக்க அனுமதித்து இருக்க மாட்டேன். ஒருவர் முகநாடியை பார்த்து கணிக்க இயலும்; நீ பிறந்த நட்சத்திரம், ராசிக்கு, தோப்பு கிணறு தண்ணீர் குடித்தவுடன், உன் பார்வையில் சக்தி தோன்றியிருப்பதை உணர்ந்தேன்...''அதை கேட்டு, ஆச்சரியம் அடைந்தாள் தியா.''உற்றுப் பார்த்து, பொருளை மறைய வைக்கும் சக்தி, உனக்கு கிடைத்திருந்தாலும், அதை உணரும் சக்தி, உன்னிடம் இருந்ததா என, அப்போது, எனக்கு தெரியவில்லை. நீ, அதை பலமுறை பயன்படுத்தியிருக்கிறாய் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது...''''பாட்டி... எனக்கு...'' என்று ஆரம்பித்தாள் அனு.''உனக்கு, பார்வையால் பொருட்களை உறைய வைக்கும் சக்தி ஏற்பட்டிருப்பது எனக்கு தெரியும். நீயும், அதை பயன்படுத்தி இருக்கிறாய்...''''இந்த சக்தி எப்போதுமே இருக்குமா...''''ஒரு பவுர்ணமியிலிருந்து, மறு பவுர்ணமி வரை தான் இருக்கும். பின் மறைந்து விடும்...''''இதெல்லாம் எப்படி பாட்டி...''''மூலிகைகளை உண்டு வாழும் நான், இங்குள்ள விசேஷ மருத்துவ குணம் உடைய மரத்தண்டுகளையும், வேர்களையும் அந்த தோப்பு கிணறில் போட்டு வைத்திருக்கிறேன். அவை தண்ணீரில் ஊறி, நீருக்கு விசேஷ குணத்தை கொடுக்கும்...''''நீங்கள், இங்கு எங்களுடன் எப்படி...''''நான், வழக்கம் போல் மூலிகை சேகரிக்க வந்தபோது, இந்த வேனை பார்த்தேன். இம்மாதிரியான வாகனங்கள், இந்த காட்டுக்குள் பயணிக்க அனுமதிக்க மாட்டார் என தெரியும். இதில், ஏதோ சூது இருக்கிறது என நினைத்து, பின் தொடர்ந்தேன்; உங்களுக்கு நடந்ததை எல்லாம் பார்த்தபடியே இருந்தேன்...''''அப்போ, கல் திட்டில் தோப்பை மறைய வைத்தது...''''நான் தான். நீ, அந்த குழந்தைகளை அங்கு ஒளித்து வைத்ததையும், பின், இந்த கொடியவர்கள் தேடி வந்ததையும் பார்த்து, தோப்போடு குழந்தைகளை மறைய வைத்தேன்...''அவர்களுக்குள் நடக்கும் உரையாடலை கவனித்து, மெல்ல மூதாட்டியிடம் கேட்டார் வார்டன்.''பூஜைக்கு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளனரே, அவர்களை என்ன செய்வர்...''''அங்கு, ஒரு தொன்மையான கோவில் இருக்கிறது. மன்னர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. வேட்டைக்கு வரும் மன்னர்கள், இறைவனை கும்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது...''புலிகள் நடமாட்டம் இருப்பதால், அங்கு யாரும் வருவதில்லை. அதனால், பராமரிப்பின்றி, அக்கோவில் இடிந்து, சிதிலமடைந்து விட்டது. அங்கு தான், குழந்தைகளை வைத்து, பூஜை செய்கின்றனர் என நினைக்கிறேன்...''''குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது...''பதறினார் வார்டன்.''என்ன பூஜை செய்கின்றனர் என்று தெரியவில்லையே...'' என்றார் மூதாட்டி.''அங்கு சென்று பார்க்கலாமா...'' என கேட்டாள் தியா.பூஜை நடக்கும் இடம் தேடி புறப்பட்டனர் நால்வரும்.அவர்களின் கவனக்குறைவு, பிரச்னையாக உருவெடுக்க இருப்பது அப்போது தெரியவில்லை.- தொடரும்...- ஜே.டி.ஆர்.