மல்லன் மாறப்பன்! (5)
சென்றவாரம்: ஐயாயிரம் வராகன்களை வென்ற மாறப்பனுக்கு, கிருஜ்ண தேவராயரை சந்திக்கும் முன் தன் குருவான பெட்ரோவை அறிமுகம் செய்து வைத்தான் திம்மராயன். பெட்ரோவிடம் பயிற்சி பெற்ற மாறப்பன் மீது பறங்கியர்களுக்கு பொறாமை வளர்ந்தது. இனி-அத்தனை பேரும் மாறப்பனின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள். அவர்களுக்குத் தலைமை தாங்கியவன் திருமலை. அன்றுபட்ட அவமானம் அவன் நெஞ்சில் கனன்று கொண்டிருந்தது. தன் அடியாட்களுடனும், குத்துச் சண்டையில் குரோதம் கொண்ட சில பறங்கியருடனும் சேர்ந்து மாறப்பனைப் பழிவாங்கச் சமயம் பார்த்திருந்தான்.''ஓய், என்னடா எங்களுக்கு வணக்கம் கூறாமல், கொஞ்சமும் மரியாதை இல்லாமல் அலட்சியமாகப் போறே?'' என்று வம்புச் சண்டைக்கு இழுத்தான் ஒரு குண்டன்.திகைத்துப் போய் நின்ற மாறப்பனை அவர்கள் சூழ்ந்து கொண்டனர்.''கொல்லுடா பயலை...!''''எழுந்து ஓட முடியாதபடி அடித்து நொறுக்கு நாயை!''''தப்பி ஓடிவிடப் போகிறான்... தாக்கி வீழ்த்து!''இப்படி வெறி கொண்டவர்களாக, மாறப்பனைத் தாக்க முற்பட்டனர்.''ஓய்... இதென்னது... ஏன் இப்படி எல்லாரும் வேட்டை நாய்களைப் போலப் பாய்கிறீர்கள்... காரணத்தைக் கூறிவிட்டுக் களத்தில் இறங்குங்கள்,'' என்று அவர்களுடைய தாக்குதலைச் சமாளிக்கத் தயாரானான்.ஆனால், பொறாமைக்காரர்கள் விளக்கமாக சொல்லிக் கொண்டிருப்பார்களா என்ன?''அடித்து வீழ்த்துங்கள் அவனை. பேச விடாதீர்கள்!'' என்று கூச்சலிட்டான் திருமலை.''ஓ! உங்களுக்குச் சண்டை வேண்டுமா? உடம்பு தினவெடுக்கிறதா? அப்படியானால்... இதோ...''என்று கூறியபடி வலதுசாரி, இடதுசாரியாக ஒவ்வொரு குண்டனையும் தாக்கி வீசினான்.மாறப்பனுக்குச் சண்டை என்றால் சர்க்கரைப் பொங்கலாயிற்றே!''பயல்களா! உங்களுக்குக் குத்துச் சண்டை மட்டும்தான் தெரியும். எனக்கு உங்கள் எலும்பு களை முறிக்கும் வர்மக்கலையும் தெரியுமாக்கும்!'' என்றான்.''ஐயோ, என் கழுத்து! தலையைத் திருப்ப முடியலியே!''''என் கை எலும்பு முறிஞ்சு போச்சு... இனி எப்படி சண்டை போடுவேன்!''''என் முன் பல் நாலும் காணோம்... வாயெல்லாம் ரத்தம்!'' என்று புலம்பியபடி தள்ளாடித் தடுமாறியபடி குண்டர்கள் ஓடினர். ''கோழைகளா! ஓடாதீர்கள். ஓடுபவர்களை நான் விரட்டமாட்டேன்,'' என்றான் மாறப்பன். ''பொறாமையால் புத்தி கெட்டுப் போய் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்ட கயவர்களே... இனியாவது நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். என் குத்துக்களை மறக்க மாட்டீர்களே, ஹ...ஹ... ஹா!'' என்று வெற்றிக் குலவையொலி எழுப்பினான் மாறப்பன்.தோல்வி கண்டு ஓட்டமெடுத்தவர்களில் அபிசீனிய வீரன் பாத்ஷாகானும், போர்த்துக்கீசியன் பெர்னாண்டஸும் இருந்தனர். மாறப்பனின் குத்துக்களால் நிலை குலைந்து போயிருந்தான் பாத்ஷாகான். அவமானமும், ஆத்திரமும் அவனை அறிவிழக்கச் செய்தது.''இருக்கட்டும்! அவனை விடப் போவதில்லை. அவன் எலும்புகளை முறிக்காவிட்டால் நான் பாத்ஷாகானல்ல,'' என்று வன்மத்தோடு உளறியபடி தள்ளாடிக் கொண்டு நடந்தான்.''திருமலை எல்லாம் உன்னால்தான்,'' என்று குற்றம் சாட்டிக் கோபப்பட்டான் பெர்னாண்டஸ்.''குத்துச் சண்டையில் பழக்கமில்லாதவன் பொடிப்பயல் என்றெல்லாம் கூறினாயே? இவனா பொடியன்? நீதான் மூளைகெட்ட தடியன். அவன் விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளும்படி செய்துவிட்டாய்!''குடிபோதை, மாறப்பனிடம் அடிபட்ட உதை, இவற்றினால் நிலை குலைந்து போன பாத்ஷாகான் நட்ட நடு வீதியில் தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தான்.விஜயநகரத்துச் செல்வச் சீமான் ஒருவர் தன் ரதத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தார். சவுக்கடியினால் ரோஷப்பட்ட குதிரைகள், காற்றெனப் பாய்ந்து வந்தன. அந்த ஓசை கேட்டு பெர்னாண்டஸ், பாத்ஷாகானை சாலையிலிருந்து விலகுமாறு எச்சரித்து கத்தினான்.''ஏய்! பாத்ஷா விலகி இந்தப் பக்கம் வா!''இமைக்கும் நேரத்தில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. மின்னலாக வந்த ரதம் பாத்ஷாகான் மீது மோதி அவனைத் தள்ளி விட்டு மறைந்தது.''அடப்பாவி! என் எச்சரிக்கை உன் காதில் விழவில்லையா... இப்படி...?'' குதிரையின் குளம்புகளும், வண்டிச் சக்கரமும் குதறிய பாத்ஷாகானின் உடலை நோக்கி ஓடினான் பெர்னாண்டஸ்.பாத்ஷாகானின் உயிர் போய்விட்டது.''இதுவும் ஒரு நன்மைக்குத்தான்!'' என்று கூறியபடி, பெர்னாண்டஸின் காதோடு ஏதோ கிசுகிசுத்தான் பழிபாவத்துக்கு அஞ்சாத திருமலை.நகரின் நீதிமன்றத்திலே மாறப்பன் நிறுத்தப்பட்டிருந்தான். திருமலையின் சூழ்ச்சி அது.பறங்கியர்களுடன் சதித் திட்டம் தீட்டி, பாத்ஷாகானைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி, விஜயநகரக் காவல் படையினரைக் கொண்டு மாறப்பனைக் கைது செய்து, நீதிமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்துவிட்டான் திருமலை.பாத்ஷாகானின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று வாதாடினார் போர்த்துக்கீசிய வழக்கறிஞர்.''கனம் நீதிபதி அவர்களே! அந்நிய நாட்டவர்களாகிய எங்களுக்கு, உங்கள் பாதுகாப்பில் எங்கள் உயிர், உடைமைகளை ஒப்படைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எங்கள் வீரன் ஒருவனை உங்கள் நாட்டுப் பிரஜை ஒருவன் மிகக் கொடூரமான முறையில் தாக்கிக் கொன்று விட்டான். இந்த நிலையில் நாங்கள் எப்படி அச்சமின்றி உங்கள் நாட்டில் வாழ முடியும்?'' என்று வக்கணையாகப் பேசினான் அந்தப் போர்த்துக்கீசியன்.''நீதிதவறிய நேர்மையற்ற அந்தக் குடிமகன் யார் என்று கூறினால், அவனை இந்த நீதி மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தக் காவல் படையினருக்கு ஆணையிடுகிறேன்,'' என்றார் நீதிபதி.''நான் அவனைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறேன். நீதிபதி அவர்களே!'' என்று முன் வந்தான் திருமலை.''அந்தக் கொடூரமான கொலை நடந்தபோது அருகிலிருந்து பார்த்தவன் நான்தான்!'' என்றான்.''அவனது அங்க அடையாளங்களையும் முடியுமானால் அவன் இருப்பிடத்தையும் இந்த நீதிமன்றத்தில் கூறலாம். காவல்படை அதிகாரி இங்கிருக்கிறார். அவர் உசிதப்படிச் செயல் படுவார்!''''இருபது வயது இளம் காளை அவன். நல்ல உயரம். கட்டுமஸ்தான உடம்பு. சிவந்த நிறம். தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் நாடோடி. மாறப்பன் என்று பெயர் விவரித் தான்,'' திருமலை.திம்மராயன் தன்னை அவமானப்படுத்தியதற்குப் பழிதீர்த்துக் கொண்டுவிட்டான் திருமலை. அதற்கு மாறப்பன் பலிகடாவாக்கப் பட்டான். நீதிபதி உடனே கொலைகாரனாகக் கூறப்படும் அந்த வாலிபனைத் தேடிப்பிடித்து நீதிமன்றத்திலே கொண்டு வந்து நிறுத்துமாறு,'' ஆணையிட்டார்.சதிகாரர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.''எங்கிருந்தோ வந்த அனாதைப் பயல் என்னிடமா வாலாட்டுகிறான்?'' என்று கர்வத்துடன் தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டான் திருமலை.''அந்தப் பயலைச் சரியானபடி சிக்க வைத்து விட்டாய் திருமலை,'' என்று அவன் தோளிலே தட்டிக் கொடுத்தான் பெர்னாண்டஸ்.அங்கே- திருமலையின் சூழ்ச்சி பற்றி அறியாத மாறப்பன் திம்மராயனிடம் பேசிக் கொண்டிருந்தான்.''மாறப்பா! நீண்ட நாளாக உன்னைக் காணவில்லையே... என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். உன் பயிற்சியெல்லாம் எப்படி இருக்கிறது?'' என்று வினவினான் திம்மன்.''பெட்ரோ பாராட்டுமளவுக்கு வல்லவனாகி விட்டேன். பறங்கியவர்களின் பொறாமைக்கும் ஆளாகிவிட்டேன்,'' என்றான் மாறப்பன்.''தலைநகரில் ஒரு குத்துச் சண்டைப் போட்டி நடத்துகிறார், மன்னர் கிருஷ்ண தேவராயருக்கு அந்தரங்கமான ஒருவர். அதில் நீ கலந்து கொள்ளுகிறாயா?'' என்றான் திம்மராயன்.''கரும்பு தின்னக் கூலியா? அப்படியே மகாராயரையும் சந்திக்க முடியுமா? வாய்ப்புக் கிடைக்குமா?'' என்று ஆவலோடு வினவினான் மாறப்பன்.- தொடரும்.