உள்ளூர் செய்திகள்

குரங்கு பொம்மை!

சென்னை, மடிப்பாக்கம், பிரின்ஸ் மேல்நிலைப்பள்ளியில், 2019ல், பிளஸ் 2 படித்தேன். வகுப்பு ஆசிரியை ரேகா, தாயைப் போல் அன்பு, பாசம் காட்டுவார். பொதுத்தேர்வு முடிந்து, பிரிந்த நேரத்தில், தோழியர் வினிதா, லோகேஸ்வரி, எழிலரசு ஆகியோருடன் இணைந்து நினைவு பரிசு கொடுத்தோம். அவரும் நினைவு பரிசு வழங்கினார்.எனக்கு, காந்திஜியின் மூன்று குரங்கு பொம்மையை தந்து, 'அது பற்றி என்ன தெரியும்...' என்று கேட்டார். 'வாய் பொத்திய குரங்கு, தேவையற்றதை பேச கூடாது என்றும், கண் பொத்தியது, கூடாதவற்றை பார்க்க கூடாது என்றும், காது பொத்தி, தேவையற்றதை கேட்கக்கூடாது எனவும் உணர்த்துகிறது...' என்றேன். என்னை பாராட்டி, 'இந்த அறிவுரைகளை வாழ்வில் பின்பற்றினாலே, துன்பமோ, தோல்வியோ ஏற்படாது...' என்று வாழ்த்தினார். சமீபத்தில், நம் நாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ரொனால்டு டிரம்ப், குடும்பத்துடன், குஜராத் மாநிலம், சபர்மதி ஆசிரமம் சென்றார்; அவருக்கு, மூன்று குரங்கு பொம்மையை பரிசளித்ததை கண்டு வியந்தேன். அவருக்கும், அதே அறிவுரை கிடைத்திருக்கும் என நம்பினேன்.என் வயது, 19; கல்லுாரியில், பி.டெக்., படிக்கிறேன். அன்று, வகுப்பாசிரியையின் அறிவுறுத்தலை வாழ்வில் கடைப்பிடித்து துன்பங்களை வென்று வாழ்கிறேன்.- எம்.மெஹபூப் நஸ் ரீன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !