ஓவியம்!
ஆலக்குடி கிராமத்தில் பணக்காரர் நாகசாமி வாழ்ந்து வந்தார். பணத்தின் மீதிருந்த ஆசை, ஓவியங்கள் மீதும் இருந்தது. ஓவியங்கள் கிடைத்தால் மாட்டி வைப்பதற்கென்றே, வீட்டில் தனியாக கூடத்தை அமைத்திருந்தார்.ஒரு நாள் -நகரத்தில், ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதைக் காண அலைமோதிக் கொண்டிருந்தனர் ரசிகர்கள். பணக்காரரும் சென்றிருந்தார். அனுமான், இந்தியப் பெருங்கடலை, பறந்து தாவுவது போலவும், இலங்கை எரிவது போலவும், ஓர் ஓவியம் வாங்கும் விருப்பம், நீண்ட நாட்களாக பணக்காரரிடம் இருந்தது. ஓவியரைச் சந்தித்து ஆசையைக் கூறினார். விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்து, 'கட்டணமாக, 10 ஆயிரம் ரூபாய் ஆகும்...' என்றார் ஓவியர்.முகஞ்சுளித்தபடி, 'சிறிய ஓவியத்திற்கு, 10 ஆயிரமா... ரொம்ப அதிகமாக இருக்கிறதே; கொஞ்சம் குறையுங்கள்...' என்றார் பணக்காரர்.சற்று இறங்கி வந்தார் ஓவியர்.'அப்படி என்றால், 8000 ரூபாய் கொடுங்கள்; இதற்கு கீழ் குறைக்க முடியாது...' இப்படியே பேரம் நடந்து கொண்டிருந்தது. இறங்கி வராமல் அடம் பிடித்தார் ஓவியர். பணக்காரரும் விடுவதாக இல்லை. இறுதியாக, 'ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன்; முடிந்தால் வரையுங்கள்; இல்லையென்றால் ஆளை விடுங்கள்...' என்றார் பணக்காரர்.வேறு வழி தெரியாததால் அந்த தொகைக்கு ஒப்புக் கொண்டார் ஓவியர். ஆனால், பணக்காரருக்கு பாடம் கற்பிக்க மனம் துடித்தது.'மூன்று நாட்களில் வரைந்து முடித்து விடுகிறேன்...' உறுதி கொடுத்தார் ஓவியர்.முழுப் பணத்தையும் கொடுத்து புறப்பட்டார் பணக்காரர்.உரிய நாளில் ஓவியத்தைக் காண ஆவலாக சென்றார்; வரவேற்று ஓவிய அறைக்கு அழைத்துச் சென்ற ஓவியர் திரையை விலக்கினார். அங்கே, எதுவும் காணப்படவில்லை; நீலநிறம் மட்டும் தான் தென்பட்டது.'நீங்கள் கேட்ட ஓவியம் மிக அற்புதமாக அமைந்து விட்டது...' என்றார் ஓவியர்.'என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லையே... அனுமான் கடலைத் தாண்டும் ஓவியம் தானே கேட்டேன்...' அதிர்ச்சியுடன் கேட்டார் பணக்காரர்.'நீங்க பார்த்தது இந்தியக் பெருங்கடல்; அதுதான் நீல நிறமாக இருக்கிறது...' 'சரி... அனுமன் எங்கே...' 'கடலை தாண்டி, அந்த பக்கமாகப் போய் விட்டார்...' 'அப்படியென்றால், எரிந்த இலங்கை...' 'கதைப்படி, அது கடலுக்குள் மூழ்கி விட்டது; அந்த காட்சியைத் தான் பார்க்கிறீர்...' விளக்கினார் ஓவியர்.பணக்காரருக்கு தலை சுற்றியது.குழந்தைகளே... உரையாடல் கலை எவ்வளவு சிறப்பானது பார்த்தீர்களா... அறியாமையில் உழல்பவரிடம் பொறுமையாக உரையாடி தெளிவை ஏற்படுத்த முடியும். சிந்தித்து செயலில் ஈடுபடுங்கள்.