புலியான எலி!
ஒரு காட்டில், பர்ணசாலையில் தவம் புரிந்தார் முனிவர். ஒரு நாள் -'ஐயனே... என்னை காப்பாற்றுங்கள்...' தீனக்குரலில் ஒலி கேட்டது.கண் விழித்தார் முனிவர்.எதிரே, நடுங்கியபடி நின்றது எலி.'ஏன் நடுங்குகிறாய்... உனக்கு வந்த துயர் தான் என்ன...'பரிவுடன் கேட்டார், முனிவர்.'ஐயனே... ஒரு பூனை துரத்தி வருகிறது... நீங்கள் தான், எனக்கு உயிர்ப் பிச்சை அளிக்க வேண்டும்...' 'பயப்படாதே... உன்னையும் பூனையாக்கி விடுகிறேன்; அப்போது, பூனை, உன்னை ஒன்றும் செய்யாது. நீ நலமுடன் வாழலாம்...' என கூறி எலியை, பூனையாக்கினார் முனிவர். சில நாட்களுக்குப்பின், முனிவரிடம் பதறியபடி ஓடி வந்தது, பூனையாக மாறிய எலி. 'ஏன் இப்படி நடுங்குகிறாய்... பயப்படாமல் உன் மனக்குறையைக் கூறு...' என்றார், முனிவர்.'என்ன சொல்வேன்... என்னை பூனையாக மாற்றிய பின், சிறிது காலம் மகிழ்ச்சியுடன் தான் இருந்தேன். இன்று எங்கிருந்தோ வந்த நாய், என்னை கொல்ல துரத்தியது... அதற்குப் பயந்து தான், தங்களிடம் வந்தேன்...' என்றது.'அப்படியா... உன்னை நாயாக்கி விடுகிறேன்; இனி, எவ்வித குறையும் இன்றி வாழலாம்...' என்று கூறியபடி, பூனையை, நாயாக்கிவிட்டார், முனிவர்.சிறிது காலத்திற்குப் பின் -அந்த நாய், பயத்துடன் முனிவரைச் சுற்றி வந்தது.'உனக்கு உற்ற துன்பம் என்ன... ஏன், இவ்வாறு பயத்துடன் சுற்றி வருகிறாய்...' என்றார்.'முனிவரே... ஒரு வேட்டை நாய் என்னை துரத்தி வருகிறது; அதற்குப் பயந்து தான், ஓடி வந்தேன். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்...' என்று கூறியது, நாய்.'கவலைப்படாதே... நீயும் வேட்டை நாயாக கடவாய்...' என்றார் முனிவர்.அது வேட்டை நாயாகி விட்டது.சில நாட்கள் சென்றன -மீண்டும் முனிவரிடம் வந்தது வேட்டை நாய். முனிவர் என்ன வென்று கேட்டார்.புலி ஒன்று துரத்தி வருவதாகவும், அதனிடமிருந்து, பாதுகாத்துக் கொள்ள, புலியாக மாற்றி உதவ கேட்டது.'அவ்விதமே ஆகுக...' என்றார் முனிவர்.வேட்டை நாய், புலியாக மாறி, காட்டுக்குள் ஓடியது. அது, விலங்குகளை கொன்று தின்றது; மனம் போனபடி அலைந்து திரிந்தது.ஒரு நாள் -அதற்கு இரை கிடைக்கவில்லை; எங்கெங்கோ சுற்றியது; ஒரு மிருகமும், அதன் கண்களுக்கு தென்படவில்லை. நேராக, பர்ணசாலைக்குச் சென்றது; முனிவரை கொன்று, தின்று பசியைப் போக்கி கொள்ள நினைத்தது.'இம்முறையும், ஏதோ துன்பத்துடன் வந்திருக்கிறது போலும்' என கருதினார் முனிவர். ஆனால், முனிவர் மீது பாய எழுந்தது.இதை கண்டதும், 'எலியே அப்படியே நில்...' என்றார்.புலி, எலியாகி கிலி பிடித்து நின்றது. நன்றி மறந்து செயல்பட்டதால், 'பூனையின் வயிற்றுக்குள் போய்ச்சேர்' என்று சாபமிட்டார் முனிவர்.அன்புள்ளங்களே... நன்றி மறக்காமல் வாழ பழகுங்கள்