புரட்சி சிறுவன்! (2)
முன்கதை: ஏழை சிறுவர்கள் மாணிக்கமும், முருகனும் நண்பர்கள். இருவரின் பள்ளிப் படிப்பையும் நிறுத்தி, பாரம்பரிய தொழிலில் ஈடுபடுத்தினர் அவர்களது தந்தையர். போதையில் கொடுமை செய்தனர். இனி -ஒருநாள், நன்றாக அடி வாங்கிய அம்மா, மூக்கில் ரத்தம் கசிந்தது. ஆத்திரம் தீர அடித்திருந்த அப்பா வெளியேறியதும், 'எங்கேயாவது போய்டலாமே அம்மா...' என்று கண்ணீருடன் கேட்டான் மாணிக்கம்.அழுவதை நிறுத்தி, 'போடா பைத்தியக்காரா... அதெல்லாம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும். எந்த மூலைக்குப் போனாலும் உன் அப்பன் அங்கு வந்து நிற்பான்...' என்றாள்.மிகவும் ஆத்திரப்படும் நேரங்களில் மட்டுமே, அப்பாவை மரியாதை குறைவாக குறிப்பிடுவாள் அம்மா. இது வியப்பாக இருக்கும்.ஒருமுறை, 'வேறு ஊருக்குப் போய்விடலாம்...' என ஆதங்கத்துடன் கேட்டான் மாணிக்கம்.'முன்பின் தெரியாத ஊரில் யார் வேலை தருவர்... எங்கே தங்குவது... அதை எல்லாம் யோசித்தாயா... தங்குவதற்கு ஒரு குடிசையும், பழகிய மனிதர்களும், சம்பாத்தியமும் இருக்கும்போதே நிலைமை இப்படி இருக்கிறதே... புது ஊர் சோறு போடுமா... இங்கே ஏதோ அரை வயிற்றுக்கு சோறு கிடைக்கிறதே என சந்தோஷப்படு...' விசும்பலுடன் சொல்லிவிட்டாள் அம்மா.பின், அது பற்றி பேச்சை எடுக்கவே மாட்டான்.படிப்பை நிறுத்தியதை தாங்க முடியாமல் தவித்தான் மாணிக்கம். படிப்பறிவற்ற குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு, சுமாராகத்தான் கற்கும் திறன் இருந்தது. இதை கவனிந்திருந்தான். ஆனால், அவன் விஷயமோ வேறாக இருந்தது. நன்றாகப் படிப்பு வந்தது.ஒருமுறை ஆங்கில ஆசிரியர், 'எப்படியாவது, 10ம் வகுப்பு தேறிவிடு. பின் தட்டெழுத்து, சுருக்கெழுத்து கற்றுக்கொண்டால் நல்ல வேலையில் அமர்ந்துவிடலாம்; படிப்பை மட்டும் நிறுத்தவே நிறுத்தாதே...' என்று அறிவுரைத்தார்.அது அவனுக்கு தெம்பை தந்தது. ஆனால் அப்பாவின் பிடிவாதத்தால் கனவாக கலைந்தது.பள்ளி திறந்து சில நாட்களாகியும் அவன் வகுப்புக்கு வராதது கண்டு, விவரமறிய வீட்டுக்கே வந்து விட்டார் ஆசிரியர். அவர் வந்த நேரம், போதை தெளிந்து இருந்தார் அப்பா.'என்ன கதிர்... உன் மகனை அடுத்த நிலை வகுப்புக்கு அனுப்பவில்லையா... பள்ளி திறந்த நாள் நன்றாக இல்லை என ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கிறாயா...' மிகவும் நாசூக்காக விசாரித்தார்.'அதெல்லாம் இல்லை ஐயா... படித்துக் கிழித்து என்ன சாதிக்கப் போகிறான்... கடைசியில் அவனும் என் தொழிலைத்தானே செய்ய வரணும்; அதற்குப் படிப்பு எதற்கு...''மாணிக்கத்துக்கு மிக நன்றாகப் படிப்பு வருகிறது. படித்து முடித்த முயற்சித்தால் நல்ல வேலையில் சேரலாம். அது குடும்பத்துக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்... படிப்பில் அவன் ஆர்வம் காட்டுவதால் தான், மெனக்கெட்டு வீடு தேடி வந்து பேசுகிறேன். பரம்பரைத் தொழிலைத்தான், அவனும் செய்ய வேண்டியது வரும் என்று எதை வைத்து முடிவு செய்கிறாய்...' மிகவும் எளிமையாக கேட்டார். அப்பாவின் முகம் கோணியது! ஆத்திரம் பொங்கியது. படித்தவர் வீடுதேடி வந்திருந்தார் என்பதால் எரிச்சலை அடக்கியபடி, 'நீங்க சொல்ற எதுவும் நடக்கப் போவதில்லை. என்னையும் கூட, படிக்க வைத்தார் என் அப்பா. ஆனால், 4ம் வகுப்புக்கு மேல் ஏறவில்லை. வம்சத்தில் படிப்பு ஏறினதே கிடையாதே...' என நம்பிக்கையற்று சொன்னார் கதிர். அடக்கிய சினம், குரல் நடுக்கத்தில் வெளிப்பட்டது.விடுவதாக இல்லை ஆசிரியர். 'கோபப்படாமல், நான் சொல்றதை கேளு. உன் அப்பாவும் நீயும் நான்கு வகுப்புகளை தாண்டவில்லை என்பதால், உன் மகனும் தாண்டமாட்டான் என்று எண்ணாதே... அவனுக்கு படிப்பு வராமல் இருந்தால் நீ சொல்வது சரியென ஒப்புக்கொள்ளலாம்...'கடந்த வகுப்பில், 2ம் இடம் பிடித்து முதன்மை மாணவர்களில் ஒருவனாக இருந்தான். முயன்றால் முதல் இடத்தைப் பிடித்து விடக் கூடியவன். அவன் படிப்பை நிறுத்துவது முறையில்லை...''சரிதான் ஐயா... கெட்டிக்காரனாகவே இருக்கட்டும். குடும்பம் சாப்பிட வேண்டாமா... எத்தனை நாள் பட்டினி கிடப்பது...''குடும்பம் சாப்பிடுவதற்கும், இவன் படிப்பை நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு...''சம்பந்தம் இருக்கிறது; இனி, அவனையும் என் தொழிலில் ஈடுபடுத்துவதாக இருக்கிறேன். ஒருவன் சம்பாதிப்பது குடும்பத்துக்குப் போதவில்லை. இவனும் என்னோடு வேலை செய்து சம்பாதித்தால் தான் அரை வயிற்றுக்காவது சாப்பிட முடியும்...'வாயடைத்து நின்றார் ஆசிரியர்.ஆசிரியரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி விடுவார் என எதிர்பார்த்தான் மாணிக்கம்.அப்படி ஏதும் நடக்கவில்லை.ஏமாற்றத்துடன் புறப்பட்டார் ஆசிரியர். ஆனால் நம்பிக்கை இழந்ததாக காட்டிக்கொள்ளவில்லை.'மோசமான மனிதர் என் அப்பா! குடும்ப வறுமை கருதியா வேலைக்கு அனுப்ப தீர்மானித்தார்... இல்லவே இல்லை. இன்னும் கொஞ்சம் காசு வரும்; அதையும் பிடுங்கி மது ஊற்றி கொள்ளலாம். போதையில் மயங்கிக் கிடக்கலாம் என்பது தானே அவர் திட்டம்...'நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறியது. உடம்பே அதிர்ந்தது; கண்களில் நீர் மல்கியபடி வெறித்திருந்தான்.''தம்பி... இந்த செருப்பைக் கொஞ்சம் தைத்து கொடப்பா...'' எண்ணத்தின் குறுக்கே பாய்ந்தது குரல். தலை உயர்த்திப் பார்த்தான்.நடுத்தர வயதுள்ளவர் நின்றுகொண்டிருந்தார். வார் அறுந்த செருப்பு அவன் முன் இருந்தது. கண்கள் கலங்கியிருந்ததைக் கவனித்தவர், ''என்ன தம்பி... எதற்காக வருத்தப்படுகிறாய்... வீட்டில் யாருக்காவது சுகமில்லையா...'' என்று விசாரித்தார்.கண்களை துடைத்து, புன்னகை செய்ய முயன்றான்.''அப்படி ஒன்றும் இல்லை ஐயா...'' என்று சமாளித்தான். வார் அறுந்த செருப்பை செப்பனிடும் வேலையில் ஈடுபட்டான்.''பள்ளிக்கு போகவில்லையா தம்பி... உன் பெற்றோர் என்ன செய்கின்றனர்...'' கனிவுடன் விசாரித்தார்.''பள்ளியில், படித்துக்கொண்டிருந்தேன்; நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறவும் செய்தேன். ஆனால், 'படித்தது போதும் வேலை செய்து சம்பாதி' என்று அழைத்து வந்துவிட்டார் அப்பா...'' என்றான் மாணிக்கம்.- தொடரும்...ஜோதிர்லதா கிரிஜா