உள்ளூர் செய்திகள்

புரட்சி சிறுவன் (3)

முன்கதை: ஏழை சிறுவர்கள் மாணிக்கமும், முருகனும் ஒரே பகுதியில் வசித்தனர். இருவரின் தந்தையரும் குடி போதையில் கொடுமை செய்தனர். படிப்பை நிறுத்தி, செருப்பு தைத்து வந்தான் மாணிக்கம். இனி -துயரத்தில் மாணிக்கத்தின் குரல் தழுதழுத்தது; கண்கள் கலங்கி முத்துக்கள் திரண்டன.''அட பாவமே... ''மிகவும் பரிதாபப்பட்டார் அவர்.''அப்பாவும், அம்மாவும் சம்பாதிக்கின்றனர். ஆனாலும் வறுமையில் தான் வாடுகிறது குடும்பம்...'' பேசிக் கொண்டிருந்தாலும், கவனம் செலுத்தி செருப்பை நேர்த்தியாக தைத்தான்.''பாலீஷ் போடட்டுமா ஐயா...''''வேண்டாமப்பா... ஆபீசுக்கு நேரம் ஆகிவிட்டது; இன்னொரு நாள் போட்டுக்கிறேன்...''தைத்த செருப்பை அவர் முன் வைத்து முகத்தை ஏறிட்டான். நிறைவுடன், ''எவ்வளவுப்பா...'' என்றார்''உங்கள் விருப்பம் போல கொடுங்க...''பணப்பையை திறந்து, 50 ரூபாய் நோட்டைக் கொடுத்தார்.நகர முயன்றவரிடம், ''ஐயா... 10 ரூபாய் தான் கூலி; மீதியைக் கொடுக்க என்னிடம் சில்லறை இல்லையே...'' என்றான்.''பரவாயில்லை தம்பி...'' புன்னகைத்தபடி நடந்தார்.''ரொம்ப நன்றி ஐயா...''அடுத்த வாடிக்கையாளரை எதிர்பார்த்தது அவன் முகம்.'வறுமையிலும், பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது' என்று கற்பித்திருந்தாள் அம்மா. கூலிக்கு மேல் பணம் கிடைத்ததைக் கண்டு கவலை ஏற்பட்டது. 'மீண்டும் அவரை சந்திக்கும் போது, மீதிப் பணத்தை திருப்பிக் கெடுத்துவிட வேண்டும்' என எண்ணிக் கொண்டான்.பசி வயிற்றைப் பிசைந்தது. எதிர்முனை பெட்டிக்கடையில் வேர்க்கடலை வாங்கி வந்தான். சாலையில் நடந்த கால்களைக் கவனித்தவாறே, கொறிக்க துவங்கினான்.அவன் முன் வந்து நின்றாள் ஒரு சிறுமி. அவள் காலணியின் வார் அறுந்திருந்தது. கடலைப் பொட்டலத்தை ஓரமாக வைத்துவிட்டு, அதை செப்பனிடத் துவங்கினான். சிறுமி அணிந்திருந்த சீருடை, அங்குள்ள முதன்மை பள்ளியின் மாணவி என்பதை காட்டியது.தங்கையை, அந்த பள்ளியில் தான் சேர்க்க நினைத்திருந்தான்.காலணியின் பழுது நீக்கி, சிறுமி முன் வைத்தான். பையினுள் துழாவியவள் முகம் வெளிறியது. மிகுந்த சங்கடத்துடன், ''பணம் இல்லை; நாளைக்கு தரட்டுமா...'' என்றாள்.மாணிக்கம் மவுனமாக புன்னகைத்தான்.''நாளை கட்டாயம் தந்துவிடுகிறேன்...''உணர்வின்றி தலையசைத்தான்.நன்றி கூறி ஓடினாள்.பிற்பகலில் அப்பா உட்காரும் இடத்தில் கடை விரித்தான். இரவு, 7:00 மணி வரை தொழிலை கவனித்தான். வழக்கமாக, 6:00 மணியானவுடன், அவன் சம்பாதிக்கும் பணத்தையும் பிடுங்கி, மதுக்கடைக்கு நடப்பார் அப்பா. அன்று, 300 ரூபாய் சேர்ந்திருந்தது. பிடுங்க அப்பா வரவில்லை. வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க வீடு நோக்கி நடந்தான். குடும்ப வறுமை பற்றி யோசித்தபடி, குப்பையில் பிரித்தவற்றை எடுத்து சாக்குப்பையை நிறைத்துக்கொண்டிருந்தான் முருகன். நகராட்சி ஊழியர்கள் முறையாக வேலை செய்யாதது வாய்ப்பாக இருந்தது. நிரம்பி வழிந்த குப்பை தொட்டியை நாய்கள் துளாவின. துர்நாற்றம் சகிக்க முடியவில்லை. அந்த வழியாக சென்ற ஒருவர், ''இதோ பாரப்பா... துப்புரவு பணியாளர்கள் குப்பை அள்ளுவதே இல்லை. இந்த லட்சணத்தில் நீயும் கிளறி, குப்பையை தெருவுக்கு வரும்படி செய்துவிடாதே... மீறினால் போலீசில் சொல்வேன்...'' என்று மிரட்டும் தொனியில் சொன்னார்.''அப்படி எல்லாம் செய்ய மாட்டேன் ஐயா...''கருமமே கண்ணாயினான்.'குப்பை அகற்ற, அரசு நிர்வாகத்தை முடுக்கி விட துப்பில்லை. என் போன்ற ஏழைகளை விரட்டி, மிரட்டி வீரம் பேச வந்து விடுவர்' என்று பொருமினான்.நண்பன் மாணிக்கம் போலவே, இருந்தது அவனது குடும்பமும்.அம்மா நோயாளி. சம்பாதிக்கும் பணத்தை, குடித்து நாசமாக்குகிறார் அப்பா. சம்பாதிப்பதை அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவிடம் தர எண்ணினான்.வேறு ஏதாவது ஒரு வேலை கற்கவும் ஆசைப்பட்டான் முருகன். ஆனால் எந்த தொழிலை எங்கு கற்பது... வழி தெரியவில்லை. செய்தித்தாள், வார, மாத இதழ் பிரதிகளை, வீடுகள் தோறும் விநியோகிக்கலாம். அதற்கு மிதிவண்டி வேண்டும். சிறுக சிறுக காசு சேர்த்து வாங்கலாம் என்றால், எமனாக குறுக்கே நின்றார் அப்பா. 'மிதிவண்டி வாங்க முடிந்தால் காலையில் நாளிதழ் வினியோகித்து, மற்ற நேரம் குப்பை அள்ளலாம்' என எண்ணினான்.படித்தபோது வகுப்பில், 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறைவாக வாங்கியதே இல்லை முருகன். முயன்றால், 90 சதம் கூட பெற்றிருக்க வாய்ப்பு உண்டு.'படிப்பை நிறுத்தியாச்சே... இனி யோசித்து என்ன பயன். பசித்தவன் பழங்கணக்குப் பார்த்த மாதிரி' என்று வருந்தியபடி, அடுத்த குப்பைத் தொட்டியை தேடினான்.எலும்பும் தோலுமாக இருக்கும் அம்மாவை, சற்று புஷ்டியாக பார்க்க ஆசைப்பட்டான் முருகன். படிப்பை தொடர விரும்பியபோது, 'பரம்பரையில் எல்லாரும் தற்குறிகள். கையெழுத்துக்கூடப் போட தெரியாதவர்கள்... 'நீ மட்டும், 4ம் வகுப்பு வரையிலாவது படித்தாய் என சந்தோஷப்படு. அதற்கு மேல் படிப்பெல்லாம் வேண்டாம். படித்தால் யார் வேலை கொடுக்க போகிறார். பேசாமல் குப்பை பொறுக்க போ...' என்று அடக்கி விட்டார் அப்பா.பெருமூச்சு விட்டபடி, கசப்புடன் சிரிக்கவும் செய்தான்.மாணிக்கமும், முருகனும் ஒரே குடிசை பகுதியில் வசிக்கின்றனர். பூங்காவில் விளையாடிய போது வலுப்பட்டிருந்தது நட்பு. தின்பண்டங்களை பங்கு போடும் அளவு வலுவாகிவிட்டது அன்பு.இருவருக்கும் ஒரே மாதிரி குடிகார அப்பாக்கள். குடிசை பகுதியில் பெரும்பாலான அப்பாக்கள் அப்படித்தான் இருந்தனர். 'குடிப்பதால் என்ன கிடைக்குமோ... நான் குடியை பழக மாட்டேன். மாணிக்கத்திடமும் அறிவுறுத்த வேண்டும். சிறு வயதிலேயே குடிப்பழக்கம் வந்து விட்டால், திருடும் பழக்கமும் தொடர்ந்து வரும். வளர்ந்த பின்பும் தொடரும்' என, யோசித்தபடி ஒரு குப்பைத் தொட்டியை நெருங்கினான் முருகன்.நாய்கள் கிளறியிருந்தன. துர்நாற்றம் வீசியது.அதில் இறங்கியதும் அதிர்ச்சி. மனம் உறைந்து கைகள் நடுங்கின.- தொடரும்...ஜோதிர்லதா கிரிஜா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !