பாறையும் மணலும்!
திருப்பூர் மாவட்டம், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளியில், 2010ல், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது, உயிரியல் பாடத்தை மனப்பாடம் செய்து தான் தேர்வு எழுதுவேன். அந்த பாடம் நடத்த, புதிய ஆசிரியராக சந்துரு நியமிக்கப்பட்டார். அவரது பாணி அனைவரையும் கவர்ந்தது. மனப்பாடம் செய்யாமலே புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் கற்பித்தார்.முதலில், அன்று நடத்தும் பாட தலைப்பை, கரும்பலகையில் எழுதி, தலைப்பை ஒட்டி கேள்வி கேட்பார்; தெரிந்த தகவல்களை கூறுவோம். அவற்றை எல்லாம் குறித்துக்கொள்வார்.பின், பாடப் புத்தகத்தை திறக்க கூறுவார். நாங்கள் கூறிய கருத்துகள் தான், பாட புத்தகத்தில் இருக்கும். அது கண்டு மகிழ்வோம்; பாடம் மனதில் பதியும்.இந்த முறையிலிருந்து, 'கற்றல் என்பது பாறையை குடைவதாக இருக்காமல், ஆற்றங் கரையில் மணல் அள்ளுவது போல் இருக்க வேண்டும்' என உணர்ந்தேன். என் வயது, 26; பள்ளி நாட்களை நினைக்கும் போது, அந்த ஆசிரியர் தான் நினைவுக்கு வருகிறார். அவரது திறன், மேலும் மாணவர்களை சென்றடைய பிரார்த்திக்கிறேன்!- ச.சக்திவேல், திருப்பூர்.தொடர்புக்கு: 81447 74883