ரோஜா இளவரசி!
முன்னொரு காலத்தில் பாலசமுத்திரம் என்ற நாடு வளம் மிகுந்த நாடாக விளங்கியது. அந்நாட்டு அரசனுக்கு நீலிமா என்ற மகள் இருந்தாள். கண்ணைக் கவரும் பேரழகுடன் விளங்கினாள்.அந்த அரசர் ரோஜாச் செடிகளுக்கு என்றே பூந்தோட்டம் ஒன்றை அமைத்து இருந்தார். அங்கே ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் இருந்தன. அவற்றில் பல வண்ண மலர்கள் பூத்து மணம் வீசின.நாள்தோறும் இளவரசியும், தோழியர்களும் பூந்தோட்டத்திற்குச் செல்வர். அங்கே மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருப்பர்.அன்றும் வழக்கம் போல தோழிகளுடன் இளவரசி பூந்தோட்டத்திற்குச் சென்றாள். ரோஜா பூக்களைப் பறித்த அவர்கள், ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடினர்.மகிழ்ச்சியும், ஆரவாரமுமாக அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவர்களது சிரிப்பொலியும், கூச்சலும் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.அப்போது, தோழி மீது நீலிமா ஒரு ரோஜாப் பூவை எறிந்தாள். அந்த ரோஜாப் பூ தோழி மீது படாமல் அங்கு வந்த முனிவரின் முகத்தில் விழுந்தது. அதிலிருந்த முட்கள் முனிவரின் கன்னத்தில் கீறலை ஏற்படுத்தின.''யார் என் மேல் பூவை எறிந்தது?'' என்று கோபத்துடன் கத்திய முனிவர் திரும்பிப் பார்த்தார்.தன் தவறை உணர்ந்த இளவரசி அவர் முன் நடுங்கியபடி நின்றாள்.''யார் வருவது என்பது தெரியாமல் என்ன விளையாட்டு இது? பெரியவர்களை மதிக்க தெரியாத நீ, இன்றுமுதல் ரோஜாச் செடியாக மாறி விடுவாய்,'' என்று சாபம் தந்தார்.அவரது திருவடிகளில் விழுந்த நீலிமா, ''அறியாமல் செய்த பிழை இது. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்னை மன்னித்து அருள் செய்யுங்கள்,'' என்று அழுதாள்.இளவரசிகளின் தோழிகளும் அழுதனர்.அவர் உள்ளம் இளகியது.''பெண்ணே! நான் தந்த சாபத்தை முழுமையாக மாற்ற இயலாது. அதில் மாற்றம் செய்ய இயலும். நீ பகலில் மட்டும் இங்கே ரோஜாடிச் செடியாக இருப்பாய். இரவில் பழைய வடிவத்தில் இளவரசியாக இருப்பாய்,'' என்றார்.''முனிவரே! இந்தச் சாபத்திலிருந்து நான் விடுபட வழியே இல்லையா? நான் எப்போதும் ரோஜாச் செடியாகவே இருக்க வேண்டுமா?'' என்று வருத்தத்துடன் கேட்டாள் இளவரசி நீலிமா.''இங்கே ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் உள்ளன. அவற்றில் நீ எந்த ரோஜாச் செடியாக உள்ளாய் என்று கண்டுபிடிக்க வேண்டும். அந்தச் செடியை வேரோடு பிடுங்கினால் உன் சாபம் நீங்கும்.''இந்த முயற்சியில் தவறுதலாக வேறு ரோஜாச் செடியைப் பிடுங்கக் கூடாது. அப்படிச் செய்தால் உனக்குத்தான் ஆபத்து. பிறகு உன்னால் எப்போதும் சொந்த வடிவம் பெற முடியாது,'' என்று சொல்லி விட்டுச் சென்றார் முனிவர்.அப்போது பொழுது சாய்ந்தது. இளவரசியும், தோழிகளும் வருத்தத்துடன் அந்தப்புரம் சென்றனர். தோழியர் ஒன்று கூடிப் பேசினர்.''இளவரசியை எப்படியாவது சாபத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதற்கு வழி கண்டுபிடித்தாக வேண்டும்,'' என்றாள் ஒரு தோழி.அறிவு நிரம்பிய மற்றொரு தோழி, ''கவலை வேண்டாம். இளவரசி காலையில் தான் ரோஜாச் செடியாக மாறுவாள். இளவரசி எந்தச் செடியாக உள்ளாள் என்பதை என்னால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். இளவரசியின் சாபத்தைப் போக்க முடியும்,'' என்றாள்.''நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா? அங்கே ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் உள்ளன. மரங்கள் எதுவும் கிடையாது. ரோஜாச் செடியாக மாறிய இளவரசியை உன்னால் கண்டுபிடிக்க முடியுமா?'' என்று ஐயத்துடன் கேட்டாள் மற்றொருத்தி.''நாளை காலையில் இளவரசியின் சாபம் நீங்குவது உறுதி!'' என்றாள் அவள்.மறுநாள் பொழுது விடிந்தது. கதிரவன் தோன்றினான். அவர்களுடன் இருந்த இளவரசி மறைந்து விட்டாள்.அவள் ரோஜாச் செடியாக மாறி விட்டாள் என்பது அவர்களுக்குப் புரிந்தது. எல்லாரும் விரைந்து சென்று பூந்தோட்டத்தை அடைந்தனர்.அங்கே எல்லா ரோஜாச் செடிகளும் ஒன்று போலவே இருந்தன. அவற்றிற்குள் எந்த வேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை.''இளவரசியைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதி சொன்ன தோழி, யாரும் எந்தச் செடியையும் பறிக்காதீர்கள்,'' என்றாள்.அங்கிருந்த ரோஜாச் செடிகளை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தாள்.ஒரு செடியைப் பார்த்தவுடன் அப்படியே நின்றாள். அந்தச் செடியையே உற்றுக் கவனித்தாள்.''இந்தச் செடிதான் இளவரசி!'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் அவள்.அந்தச் செடியை வேரோடு பிடுங்கினாள்.என்ன வியப்பு! அவள் கையில் இருந்த செடி மறைந்தது. அங்கே இளவரசி நின்றிருந்தாள்.மகிழ்ச்சியில் திளைத்த தோழிகள் அனைவரும் அவளைப் பாராட்டினர்.அங்கே ஆயிரக்கணக்கான ரோஜாச் செடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றாக மாறி இருந்த இளவரசியை அவள் எப்படிக் கண்டுபிடித்து இருப்பாள்? கொஞ்சம் யோசிங்க பிரண்ட்ஸ்.இரவு முழுவதும் பனி பெய்யும். அதனால் செடிகளின் மீது பனித்துளி படிந்து இருக்கும். காலையில் கதிரவன் தோன்றியதும் ரோஜாச் செடியாக மாறினாள் இளவரசி. அந்தச் செடியில் பனித்துளி படிந்திருக்க வாய்ப்பு இல்லை.பனித்துளி படிந்திராத ரோஜாச் செடி ஒன்றைப் பார்த்தாள் தோழி. அந்தச் செடி தான் இளவரசி என்று கண்டுபிடித்து அதை வேரோடு பிடுங்கினாள். உடனே, இளவரசியின் சாபம் நீங்கியது. ஊ... ஹா...