உள்ளூர் செய்திகள்

அகம் குளிர...

சென்னை, மயிலாப்பூர், சில்ரன்ஸ் கார்டன் மேல்நிலைப் பள்ளியில், 1998ல், 7ம் வகுப்பு ஆங்கிலம் வழி படித்தேன். வகுப்புத் தோழியர், ஆங்கில கவிதை எழுதும் நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்பர். தமிழை கவுரவக் குறைவாக கருதி வந்தனர்.தமிழ் கவிதை போட்டியில் பங்கேற்க வகுப்பாசிரியை தாராவிடம் கேட்ட போது, கிண்டலாக சிரித்த தோழியரை கண்டு சங்கடமாக உணர்ந்தேன். சிரித்தவர்களை அடக்கி, 'எழுதி எடுத்து வா...' என கனிவுடன் கூறினார்.மறுநாள், சற்றும் எதிர்பாராத விதமாக வழிப்பாட்டு கூட்டத்தின் போது, ஒலிபெருக்கியில் அழைத்தார். நாங்கள் அன்புடன், 'செக்கு அக்கா' என அழைக்கும் பள்ளி தாளாளர் சகுந்தலா சர்மா முன், என் கவிதையை வாசிக்க கூறினார். வாய்ப்பை பயன்படுத்தி, உச்சரிப்பு பிசகாமல் உரக்க வாசித்தேன்; கை தட்டல் மழையில் நனைந்தேன். இதமாக அணைத்து கன்னத்தில் தட்டி பாராட்டினார் தாளாளர். உள்ளம் நெகிழ்ச்சியால் மலர்ந்தது.எனக்கு, 40 வயதாகிறது. சொந்தமாக மழலையர் பள்ளி நடத்தி வருகிறேன். பல்தொழில் முனைவோராகவும் உள்ளேன். தமிழக கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் நடத்திய கனவு நினைவுத் திட்டத்தில் நெசவு பற்றி கவிதை பாடி, இருமுறை தங்கக்காசு பரிசு பெற்றுள்ளேன். இவற்றுக்கு வித்திட்ட ஆசிரியையை போற்றி மகிழ்கிறேன். - மைதிலி சிவகுமார், விழுப்புரம்.தொடர்புக்கு: 99520 44256


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !