அபூர்வ விலங்குகள்!
உலகில், 87 லட்சம் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் அபூர்வமாக உள்ள சிலவற்றை பார்ப்போம்...மயில் சிலந்தி: இதன் வயிற்றுப் பகுதி வண்ணங்களால் நிரம்பி இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. அண்டை நாடான சீனாவிலும் இருக்கிறது. வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஜெர்போவா: பாலைவனப் பகுதியில் காணப்படுகிறது. நீண்ட காதுகளை உடையது. கங்காரு போல் கால்கள் உடையது. மணிக்கு, 24 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு கேட்கும் திறன் அதிகம். ஆறு ஆண்டுகள் வரை வாழும். மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.ஆஸ்ட்ரோகோட்ஸ்: ஒரு வித கடல் வாழ் உயிரினம். 30 மி.மீ., வரை வளரக் கூடியது. உடல் அளவோடு ஒப்பிடும் போது, அதிக விந்தணுவை உற்பத்தி செய்யும் திறன் உடையது. உலகின் வேறெந்த உயிரினத்திற்கும், இத்தகைய திறன் கிடையாது.கோபிளின் சுறா: ஆழ் கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும் அரிய வகை இனம். நான்கு மீட்டர் வரை வளரக் கூடியது. பிங்க் நிறத்தில் இருக்கும். இதன் தோல் தாடை பகுதிக்கு மேலே நீட்டியபடி இருக்கும். வினோத மூக்குப் பகுதி இந்த உயிரினத்தை வேறுபடுத்தி காட்டும். ஆக்ஸலோடிஸ்: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ளது. இதிலிருந்து உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சாலமாண்டர் போல இருக்கும். இதை, நடக்கும் மீன் என்றும் அழைப்பர். இதன் ஆயுளில் அதிக காலம் இளமை பருவமாகவே கழிகிறது.ஜியோடக்ஸ்: அதிக ஆயுட்காலம் உடைய உயிரினங்களில் ஒன்று. கிராபிக்ஸ் படங்கள் போல இருக்கும். வட அமெரிக்க நாடான கனடாவின் மேற்கு பகுதியில் அதிகம் உள்ளது. அதிகபட்சமாக, 20 செ.மீ., வரை வளரும். இது, 140 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. சில, 168 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.டப்டட் மான்: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம். அண்டை நாடான மியான்மர் மற்றும் மத்திய சீனப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும், ஜோடியாகவே காட்டில் உலவித் திரியும். மிகவும் அழகு வாய்ந்தது.- மு.நாவம்மா