இளஸ் மனஸ்! (318)
அன்பு மிக்க அம்மா... என் வயது, 16; பிரபல பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன். எனக்கு கவிதை, கதை எழுதுவதிலும், மேடையில் பேசுவதிலும் ஆர்வம் அதிகம். இதை பற்றி அறிந்த என் வகுப்பாசிரியர், 'ஒரே நேரத்தில் மூன்று குதிரைகளில் சவாரி செய்ய ஆசைப்படாதே... கவிதை, கதையை தலைமுழுகிவிட்டு மேடை பேச்சாளராகி விடு. பணமும், புகழும் கொட்டும்...' என்று அறிவுரைத்தார். வகுப்பாசிரியர் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் என்னால் சரியாக முடிவு எடுக்க இயலாமல் தவிக்கிறேன். மூன்று துறைகள் என்று குறிப்பிட்டுள்ளவற்றில் எது சிறந்தது என்பதை விளக்கமாக தெரிவித்து எனக்கு சரியான வழியைக் காட்டுங்கள். இப்படிக்கு, எஸ்.பி.நாறும்பூ நாதன். அன்பு மகனே... கவிதை என்பது அழகியியல் உணர்ச்சியையும், ஓசை, சந்தம் மற்றும் ஒத்திசை போன்ற மொழி தன்மைகளையும் கொண்டது. இது உணர்ச்சி, கற்பனையை துாண்டும் எழுத்து வடிவிலான ஒருவகை கலை வடிவம். இதை மரபு, புதுக்கவிதை என இருவகையாய் பிரித்துள்ளனர் இலக்கிய வல்லுனர்கள். இதில் நாடக பாடல், சினிமா பாடல், 14 வரி கவிதை, ஐந்து வரி கவிதை, ஹைக்கூ, கதைப்பாடல், வாழ்த்துபா, இரங்கற்பா, வேடிக்கை பாட்டு என பல பிரிவுகள் உள்ளன. பேச்சு மொழி, உரைநடை என எழுத்து நடைமுறைகளும் உள்ளன. எழுதுவதில், புனைவு, அபுனைவு என இரு வகைமைகள் உண்டு. புனைவில் சிறுகதை, நாவல், குறுநாவல், தொடர்கதை போன்றவை அடக்கம். அபுனைவில் பத்திரிகை இயல், தத்துவம், சுயசரிதை, விமர்சனம், விஞ்ஞானம் போன்றவை உள்ளன. ஒரு கல்விக் கூடத்திலோ, இரங்கற்கூட்டத்திலோ, ஒரு சிறப்பு தருணத்திலோ, கட்டுக்கோப்புள்ள மேடை பேச்சு நிகழ்த்தப்படுகிறது. நீதிமன்றத்தில் ஒரு வக்கீல், நீதிபதி முன் நின்று வாதத்தை எடுத்து வைப்பதும், மேடைப் பேச்சில் சேர்ந்தது தான். கவிதை, கதை, மேடைப்பேச்சு இந்த மூன்றுக்கும் அடிப்படையான கச்சா பொருள் மொழியறிவு. மொழியறிவு என்பது முழுமையாக புத்தக வாசிப்பு வழியாக கிடைக்கும். ஒருவர் படைப்பாளியாக விரும்பினால்... * முதலில் சிறுசிறு கவிதைகள் எழுதி, மொழியில் பாண்டித்தியம் பெற முயற்சிக்க வேண்டும் * கவிதைக்கு அடுத்து சிறுகதைகள் எழுத பழக வேண்டும் * தொடர்ந்து நாவல் எழுத முயற்சிக்கலாம் * நாவலுக்கு பின் அபுனைவில் நுழைவது சிறப்பான பலனை தரும். நல்ல எழுத்தாளன் ஒருவன் பேச்சாளனாகவும் பரிணாமம் அடைய வாய்ப்பு அதிகம். மேடையில் பேசுவோர் சொல் அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பர். சொற்களில் அலங்காரம் இல்லாவிட்டாலும் பேச்சில் சிறப்பான உள்ளடக்கத்தை வெகுஜனத்துக்கு பரிசளிப்பார் எழுத்தாளர். ஓரிரு முறை மேடையில் ஏறி பேசுவதற்கு பழகினால் சபைக் கூச்சம் முழுதும் அகன்றுவிடும். உன்னிடம் ஆசிரியர் கூறிய அறிவுரை மிகவும் தவறானது. உன் கொட்டடியில் மூன்று குதிரைகளையும் கட்டிப்போடு. தேவைக்கேற்ப தேர்த்தெடுத்து சவாரி செய்ய பழகு. மேடை பேச்சில் சிறிதளவு ஆன்மாவை கிள்ளி வைத்தாலே உன்னதமான பலன் கிடைக்கும். உன் கேள்வியில் ஓவியக்கலையை விட்டு விட்டாய். ஓவியர்களுக்கு ஒளிப்பட நினைவுத்திறன் இருக்கும். அவர்களால் மிகச்சிறந்த எழுத்தாளராக மிளிர முடியும். குறைந்தபட்சம் ஒரு முதுகலை பட்டமாவது பெற்றபின், கவிதை, எழுத்து, மேடைப்பேச்சு, ஓவியம் போன்ற கலைகளில் அணுகி முயன்று பார். அஷ்டவதானியாக அவதாரமெடுத்து புகழ் பெற வாழ்த்துகிறேன். - அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.