உள்ளூர் செய்திகள்

கடற்பஞ்சு!

முதுகெலும்பற்ற உயிரினம் கடற்பஞ்சு. இதை, புரையுடலி என அழைப்பர். விலங்கு வகையை சேர்ந்தது. பல ஆயிரம் செல்களால் உருவானது. கடலின் அடிமட்டத்தில் வாழும். செரிமான மண்டலம், சுவாச மண்டலம், நரம்பு மண்டலம் என தனியாக அங்க அவயங்கள் கிடையாது. செல்கள் மட்டும் தன்னிச்சையாக இயங்கி உடல் செயல்பட தேவையான பணிகளை செய்யும்.பஞ்சு போலவும், செடி போலவும் தோற்றமளிக்கும். பல கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம் என கணித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதன் லார்வா நீரில் மிதக்கும். நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும். ஆழமற்ற பகுதிகளில், பலசெல் உயிரினமாக அது உருமாறும். குறைந்த காலமே உயிர் வாழும். கடல் அசுத்தமாவதை தடுக்கும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும். கடல் நீரின் உப்பு தன்மை, கலங்கிய நிலை, நீரோட்டத்துக்கு ஏற்ப, ஒரே கடல் பஞ்சு, வடிவம், நிறத்தில் மாற்றம் அடையும்!இதன் உடல் உட்புறம், தண்ணீர் தேங்கும் சிறு குழி அமைப்புகள் உள்ளன. மேஜை துடைக்கப் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் போல மிருதுவாக இருப்பதால் அதிக அளவு நீரை உறிஞ்சும். இது சுரக்கும் வேதி பொருட்களில் உள்ள நச்சு, பிற உயிரினங்களிடமிருந்து தற்பாதுகாப்புக்கு உதவுகிறது. கடல் ஆமை, நட்சத்திர மீன் போன்றவை மட்டும், கடல் பஞ்சை சாப்பிடும். இதில் உலகம் முழுதும், 7,000 சிற்றினங்கள் உள்ளன. வங்க கடல் மன்னார் வளைகுடா பகுதியில், 275 வகை வண்ண கடற்பஞ்சுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்க ஆராய்ச்சி நடந்து வருகிறது. தடை செய்யப்பட்ட வலைகளை மீன்பிடிக்க பயன்படுத்துவதால், இந்த உயிரினம் அழிந்து வருகிறது. இதை பாதுகாப்பதில் தீவிரமாக செயல்பட வேண்டும்.- ராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !