உள்ளூர் செய்திகள்

காணும் இடமெல்லாம் கண்ணன்!

ஆகஸ்ட் 16, கிருஷ்ண ஜெயந்தி இன்று சின்ன கண்ணன் பிறந்த நாள். இந்த இனிய நாளில் கண்ணனுக்காக உயிரை தியாகம் செய்த மாவீரனின் கதையை தெரிந்து கொள்வோம்... இதிகாசமான மகாபாரத கதையில் தர்மர், அர்ஜுனன், துரியோதனன், பாஞ்சாலி, கர்ணன்... இப்படி கதாபாத்திரங்களை அறிந்திருப்பீர். ஆனால், பார்பரிகன் என்ற பாத்திரம் பற்றி அறியும் வாய்ப்பு குறைவு. இவனை பற்றிய தகவல் மகாபாரதத்தில் நேரடியாக இல்லை. கந்த புராணத்தில் தான் வருகிறது. ஆனால், மகாபாரத கதையுடன் தொடர்புடையது. மகாபாரத கதையில் பீமனின் மகன் கடோத்கஜன். மிகப் பெரிய பலசாலி. இவனது மனைவி பெயர் மவுர்வி. இவர்களின் பிள்ளையே பார்பரிகன். சிவபெருமானை எண்ணியபடி காட்டில் தவம் இருந்தான். அவன் முன் தோன்றி, 'என்ன வரம் வேண்டும்...' என கேட்டார் சிவன். 'ஐயனே! எனக்கு சக்தி வாய்ந்த மூன்று அம்புகள் வேண்டும். அதில் ஒன்று, இந்த உலகில் எதையெல்லாம் அழிக்க நினைக்கிறேனோ, அவற்றை குறி வைக்க உதவ வேண்டும். இன்னொன்று, நான் குறி வைத்தவற்றை அழிக்க உதவ வேண்டும். மற்றொன்று, நான் தாக்க விரும்பாதவற்றை பாதுகாக்க வேண்டும். என் எண்ணப்படி வரம் தருவீரா...' 'சரி... சில நிபந்தனைகளுடன் நீ கேட்கும் வரத்தை தருகிறேன். போர்க்களத்தில் எந்த அணி பலவீனமாக இருக்கிறதோ, அந்த பக்கத்துக்கு உதவியாக நீ போரிட வேண்டும். ஒருவேளை, வெற்றிபெறும் அணி பக்கம் சேர வேண்டிய அவசியம் வந்தால், இந்த அம்புகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது...' சிவன் விதித்த நிபந்தனைகளை ஏற்றான் பார்பரிகன். பாரதப்போர் ஆரம்பமானது. பார்பரிகனை அழைத்து, 'நீ யார் பக்கம் நிற்பாய்...' என்றார் கண்ணன். 'சந்தேகம் இன்றி பாண்டவர் பக்கம் தான். அவர்களிடம் தான், படை பலம் குறைவாக இருக்கிறது. சிவனுக்கு கொடுத்த வாக்கின்படி பாண்டவர் பக்கமே நிற்பேன்...' உறுதியாக நின்ற பார்பரிகன் பேச்சு கேட்டு சிரித்தார் கண்ணன். 'நீ பாண்டவர் பக்கம் வந்து விட்டால், உன் அம்புகள், மிக எளிதாக கவுரவர்களை கொன்று விடும். கவுரவர் பக்கம் போனால் பாண்டவர்கள் மடிந்து போவர். ஆக, சிவன் விதித்த நிபந்தனையை நீ மீறியதாக ஆகிவிடும். இதற்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது...' 'என்ன தீர்வு அது...' 'உடனடியாக நீ மடிந்து விட வேண்டும்... செய்வாயா...' 'நீ கேட்டு நான் மறுப்பேனா... உனக்காக உயிரைக் கொடுக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி சாவதற்கு ஒரு நிபந்தனை விதிக்கிறேன். உன் கையால் தான் நான் சாக வேண்டும். என் தலையை நீ தான் வெட்டி எடுக்க வேண்டும். அப்படி செய்து விட்டால், உன்னோடு கலந்து விடுவேன். இனி பிறப்பு என்ற ஒன்றே எனக்கு இருக்காது...' கண்ணீர் மல்க வேண்டுதலை முன் வைத்தான் பார்பரிகன். கண்ணனுக்கு, என்னவோ போல் ஆகிவிட்டது. வேறு வழி இல்லை. வேண்டுகோள் படி, பார்பரிகன் தலையை வெட்டினார் கண்ணன். பின், 'பாரதப் போர் முடியும் வரை இந்த தலையில் உயிர் இருக்கும். இது குருஷேத்திர களத்தில் உயரமான இடத்தில் வைக்கப்படும். அங்கிருந்து போர் காட்சிகளை நீ பார்க்கலாம். யார் சிறப்பாக போரிட்டார் என்பதை இறுதியாக என்னிடம் சொல்...' என்றார் கண்ணன். பார்பரிகன் தலையை பீமனிடம் கொடுத்து, உயரமான இடத்தில் வைக்கச் சொன்னார். அந்த தலையை ஒரு மலையில் வைத்தான் பீமன். அங்கிருந்தபடியே, போர்க்காட்சிகளை பார்த்தது தலை. போர் முடிந்தது - பார்பரிகன் தலை அருகே வந்து, 'போரில் அபாரமாக வீரத்தை வெளிப்படுத்தியது யார்...' என்று கேட்டார் கண்ணன். 'சந்தேகமே இல்லை... நீதான் போரை நடத்தினாய். நீதான் போரிட்டாய். நீதான் அழிந்தாய். நீ தான் வாழ்ந்தாய். நீ தான் வெற்றி பெற்றாய். எங்கும் உன்னை தான் கண்டேன். இந்த உலகமே நீயாக இருக்கும்போது வேறு யார் என் கண்ணில் பட முடியும்...' பக்திப் பரவசத்துடன் கூறியது பார்பரிகன் தலை. கரிய நிறக்கண்ணன் கண்களில் நீர் பெருகியது. - தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !