உள்ளூர் செய்திகள்

குழந்தை உரிமை காக்கும் நீலவண்ணம்!

ஐக்கிய நாடுகள் சபையில் செயல்படும், 'யுனிசெப்' என்ற குழந்தைகள் நல அமைப்பு, உலக குழந்தைகள் தினமாக, நவம்பர் 20ம் தேதியை அறிவித்துள்ளது. அன்று குழந்தைகள் நலன் காக்கும் நிகழ்வுகளை உலகம் முழுதும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாடும் குழந்தை உரிமை தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது.அதன்படி...* குழந்தை உரிமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்* அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த கருத்துக்களை பரப்பும் விதமாக பிரசாரம் செய்கிறது யுனிசெப். குழந்தை உரிமையை காக்கும் அடையாளமாக, நீலநிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் குழந்தைகள் தினம் நாடுகளில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதுபற்றி பார்ப்போம்...கிழக்காசிய நாடான ஜப்பானில், இரண்டு முறை குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அதாவது, மார்ச் 3ம் தேதி பெண் குழந்தைகள் நலனுக்காகவும், மே 5ம் தேதி ஆண் குழந்தைகளுக்காகவும் கொண்டாடப்படுகிறது.பெண் குழந்தைகள் தினத்தன்று ஹெய்ன் வகை பொம்மைகளால் வீட்டை அலங்கரிப்பர் ஜப்பானியர். ஆண் குழந்தைகள் தினத்தன்று, மீன் வடிவப் பட்டங்களை பறக்க விட்டு கொண்டாடுவர்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஏப்., 30ல், குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று பள்ளிகளில் முழுக்க விளையாட்டு மயமாகவே இருக்கும்; அடர் வண்ணங்களில் ஆடை அணிந்து மகிழ்வர் குழந்தைகள்.ஐரோப்பிய நாடான பல்கேரியாவில், ஜூன் 1ல் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக அன்று வாகனங்களில் பகலிலும் விளக்கை ஒளிர விட்டு ஓட்டுவது வழக்கம்.தென் அமெரிக்க நாடான சிலியில், ஆகஸ்ட் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. பொம்மை வாங்க மட்டுமே ஒருநாள் இருந்தால் எப்படி இருக்கும். குழந்தைகள் விரும்பும் பொம்மைகள் வாங்கித் தருவதையே கொண்டாட்டமாக வைத்திருக்கின்றனர்.தென் அமெரிக்க நாடான பராகுவேயில், குழந்தைகள் தினத்தன்று வித்தியாசமாக நினைவு அஞ்சலி செலுத்துவர். அகோஸ்டானு என்ற போரில், 20 ஆயிரம் வீரர்களை எதிர்த்து சிறுவர்கள் போரிட்டதை, நினைவுபடுத்தும் தினமாக அது அனுசரிக்கப்படுகிறது.அமெரிக்கா, ஜியார்ஜியா மாநிலம் அருகே, டொக்லியூ தீவுகளில், அக்டோபர் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்படுகிறது குழந்தைகள் தினம். அன்று, குழந்தைகள் வெண்மை நிற உடை அணிவது வழக்கம். குழந்தைகளுக்கு பெற்றோர் சேவை செய்து மகிழ்வர்.இந்தியாவில், நவம்பர் 14ல் குழந்தைகள் தினம். நம் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாளே இவ்வாறு கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் போற்றப்படுகிறது.வட அமெரிக்க நாடான கனடாவில் நவம்பர் 20ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று குழந்தை நல சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்.வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்தில் நவம்பர் 20ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தெருக்கள் அலங்கரிக்கப்பட்டு, நாட்டுப்புற நடனங்கள், கலை நிகழ்ச்சிகள், பொம்மைகளின் அணிவகுப்பு என, விமரிசையாக நடக்கும்.தென் அமெரிக்க நாடான பெருவில் நடக்கும் குழந்தைகள் தின கொண்டாட்டத்தில், முக்கிய பங்கு வகிப்பது, வர்த்தக நிறுவனங்கள் தான். அனைத்துக் கடைகளிலும் சிறப்பு சலுகைகளும், தள்ளுபடியும் கொடுக்கப்படுகிறது. அது, ஷாப்பிங் தினமாகவே கொண்டாடப்படுகிறது.- விஜயன் செல்வராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !