லட்சிய ஆசிரியர்!
மதுரை, முல்லைநகர், தனபால் மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 10ம் வகுப்பு படித்தேன். தமிழாசிரியை மல்லிகா, பாடங்களை இனிமையான குரலில், பாடல் வடிவில் நடத்துவார்; எளிமையாக புரிய வைப்பார். அவர் பாடம் நடத்தினாலும், கதைகள் கூறினாலும், 'லட்சியம்' என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவார். அதனால், அவரை அன்புடன், 'லட்சிய ஆசிரியை' என்றே கூறுவோம். அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு சென்ற போது, மாணவர்களுக்கு விடைத்தாள்களை தந்தார், தமிழாசிரியை. அதில் மதிப்பெண் குறைவாக பெற்ற, 15 பேரை மட்டும், பள்ளி முடிந்ததும் சந்திக்க கூறினார்; அதில், நானும் ஒருவன். ஆசிரியையை சந்தித்த போது, படிப்பின் நோக்கம், செய்யும் வேலையின் குறிக்கோள் போன்றவற்றை எடுத்துக் கூறி, 'அதிக மதிப்பெண்கள் என்ற லட்சியத்தை குறிக்கோளாக வைத்து, உங்களை அடையாளப்படுத்துங்கள்...' எனக் கூறி, ஊக்கம் தந்து அனுப்பினார். அடுத்த தேர்வில், நாங்கள் அதிக மதிப்பெண் எடுத்தோம். தற்போது என் வயது, 40. பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறேன். என் லட்சிய ஆசிரியை கற்றுத்தந்தபடி பணியாற்றி, என் வகுப்பில், 100 சதவீத மாணவர்களை வெற்றியடைய செய்து வருகிறேன். அதற்கு பரிசாக, 'தினமலர்' நாளிதழின், 'லட்சிய ஆசிரியர்' விருதையும் பெற்றுள்ளேன். வாழ்வின் உயர்வுக்கு வழிகாட்டிய தமிழாசிரியை மல்லிகாவை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். - பா.நுாருல்லாஹ், மதுரை. தொடர்புக்கு: 99449 77741.