உள்ளூர் செய்திகள்

மனப்பூங்கா!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, கோபாலசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில், 1986ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...வகுப்பில், முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்கும் நோக்கில் ஏதாவது செய்தபடியே இருப்பேன். அடுத்து நடத்தப்போகும் பாடத்தை மேலோட்டமாக தெரிந்து வைத்திருப்பேன்.அன்று வரலாறு ஆசிரியை சுந்தராம்பாள் பாடம் நடத்த வந்தார். மிகவும் எளிமையாக, ஒல்லி உடலுடன், உயரமாக காட்சி தருவார். நீண்ட தலைமுடியை எழிலாக பின்னியிருப்பார். பாடப்பகுதியை பிரித்து, ஒவ்வொருவராக வாசிக்க சொன்னார். ஆர்வமுடன் எழுந்து, பாடத் தலைப்பை, 'ஒ... ள... ரங்கசீப்...' என உரக்கப் படித்தேன். ஏளன சிரிப்பால் வகுப்பறை அதிர்ந்தது. புரியாமல், 'திருதிரு' வென விழித்தேன்.நிதானித்த போது தான் முகலாய மன்னர் 'அவுரங்கசீப்' பெயரை தவறாக உச்சரித்திருந்ததை உணர்ந்தேன். வெட்கத்தால் முகம் சிவக்க படபடப்புடன் நின்றேன். கனிவு பொங்க, 'எதற்காக அவசரப்படுகிறாய்...' என்றபடி அந்த பெயர்ச்சொல்லை தெளிவாக உச்சரிக்க கற்று தந்தார். மனம் குளிர்ந்தது.தற்போது, என் வயது, 47; தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறேன். வகுப்பறை சம்பவத்தை எண்ணும் போதெல்லாம் உதட்டில் ஒரு புன்னகை மிளிர்ந்து, பருவ பாடத்தை நினைவூட்டுகிறது. மனப்பூங்காவில் பசுமையுடன் காட்சி தரும் அந்த ஆசிரியையை போற்றுகிறேன்.- கீதா ராஜா, சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !