உள்ளூர் செய்திகள்

நன்றியுள்ள பிரியாணி!

மதுரை மாவட்டம், செல்லுார், திருவாப்புடையார் முனிசிபல் ஆரம்பப் பாடசாலையில், 1961ல், 4ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்... அன்று வகுப்பில் சொற்றொடரை கேட்டு எழுதும், 'டிக்டேஷன்' பயிற்சி நடந்து கொண்டிருந்தது. மாணவ, மாணவியர் சிலேட்டில் எழுதியிருந்த வார்த்தைகளை சரிபார்த்து, திருத்தம் சொல்லிக்கொண்டிருந்தார், ஆசிரியர் நல்லுச்சாமி. சொன்னதை தவறாக புரிந்த மாணவன் மலைராமன், 'நாய் நன்றியுள்ள பிராணி' என்பதற்கு மாறாக, 'நாய் நன்றியுள்ள பிரியாணி' என எழுதியிருந்தான். அதை திருத்தியபடியே, 'முன்பொரு முறை, 'நெடுநல் வாடை' என சொன்னதை, 'நெடு நாள் வடை' என்று எழுதியிருந்தாயே. நினைவிருக்கிறதா... இப்போது, நாயை நன்றியுள்ள பிரியாணியாக்கியிருக்கிறாய். நீ என்ன சாப்பாட்டு ராமனா...' என நகைச்சுவையுடன் கேட்டார். வகுப்பறையில் கலகலப்பு தொற்றியது. அனைவரும் சிரித்து மகிழ்ந்தோம். என் வயது 70; மதுரை பஞ்சாலை தொழிலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்றேன். வகுப்பறையில் நடந்த அந்த நிகழ்வை என் பேரக் குழந்தைகளிடம் அவ்வப்போது சொல்லி கலகலப்பூட்டுவேன். அப்போதெல்லாம் ஆசிரியர் நல்லுச்சாமியின் முகம் என் மனதில் மலர்ந்து மகிழ்ச்சியை தருகிறது. - எஸ்.பெருமாள், மதுரை. தொடர்புக்கு: 99523 16595


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !