உள்ளூர் செய்திகள்

சத்து நிறைந்த கேரட்!

ஏப்., 4 - கேரட் தினம்! மத்திய ஆசியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாரசீகப் பகுதியான ஈரானில், 10ம் நுாற்றாண்டில், முதன்முதலில் கேரட் அறிமுகமானது. அங்கிருந்து ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என, உலகெங்கிலும் பரவியது. ஆரம்பத்தில் ஊதா, மஞ்சள், வெள்ளை நிறத்திலேயே கேரட்கள் இருந்தன. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள விவசாயிகள், 16ம் நுாற்றாண்டில் அறிமுகப்படுத்திய ஆரஞ்சு நிற கேரட்கள், தற்போது உலகம் முழுவதும் பரவலான புழக்கத்தில் உள்ளன. கேரட்டில், பீட்டா -கரோட்டின், வைட்டமின் ஏ, கே, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. கண் பார்வை, தோல், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கேரட் உதவுகிறது. குறைந்த கலோரி, கொழுப்பு இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாலைக்கண் நோயை குணப்படுத்தும் மாமருந்தெனவும் போற்றப்படுகிறது. சாலட், சூப், அல்வா, கேக் மற்றும் புட்டிங் போன்ற பல உணவு வகைகளில் கேரட் பயன்படுத்தப்படுகிறது. கேரட் மற்றும் அதன் நற்பண்புகள் பற்றிய அறிவை உலகம் முழுவதும் பரப்புவதற்காக, 2003ல், கேரட் தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஏப்., 4ம் தேதி, சர்வதேச கேரட் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹோல்ட்வில்லி பகுதியில், முக்கிய விவசாய பயிராக கேரட் உள்ளது. அதனால், உலகின் கேரட் தலைநகராகவும் கருதப்படுகிறது. இங்கு, சர்வதேச கேரட் தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். அப்போது, விதவிதமான கேரட் உணவு வகைகளை செய்வது, கேரட் உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்ட போட்டிகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !