உள்ளூர் செய்திகள்

பனி விழும் திகில் வனம்! (7)

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும் மிக்க சிறுமி. தன் தந்தைக்கு நீண்ட ஆயுள் கேட்டு தேவதையிடம் வரம் வாங்கினாள். மறைந்த அம்மாவின் உருவ சிற்பத்தை தந்தை உதவியால் வாங்கினாள். இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தபடி துாங்கினாள் மிஷ்கா. இனி - அதிகாலை 4:30 மணி -- பயணத்துக்கு தயாரானான் துருவ்.கண்ணீருடன் துாங்கும் மகளை தாய்மை கலந்து நோக்கினான்.மிருதுவாக, ''குட்டிம்மா... கிளம்புறேன்... 7:00 மணிக்கு பள்ளி வேன் வந்து உன்னை அழைத்து செல்லும்...'' என மகளின் கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தமிட்டான். அவனில் சிந்தனை சிறகடித்தது.'என் வாழ்வின் அர்த்தமே நீதானம்மா... இந்த மலை மலையாய் தாவும் நாடோடியை, குடும்பஸ்தன் ஆக்கியது உன் அன்பு தான்... உன் துாங்கும் அழகை காண கண் கோடி வேண்டும்...' எண்ணிய போதே அலைபேசி சிணுங்கியது.மலையேறும் நேப்பாளி நண்பனிடம் இருந்து அழைப்பு.அலைபேசியை காதில் இணைத்தான் துருவ்.''எங்கிருக்கிறாய் நண்பா...''''காத்மாண்ட்ல... நீ வரும் போது இணைந்து கொள்வேன். நீ இப்ப என்ன செய்கிறாய்...''''பத்து வயது மகளிடம் பிரியாவிடை பெற்று கொண்டு இருக்கிறேன்...''''நான் ஒன்று சொல்வேன், கோவித்துக் கொள்ள கூடாது. நம்மைப் போன்ற மலையேறிகளுக்கு குடும்பமே இருக்க கூடாது. இருந்தால் மனைவி ஒரு காலையும், பிள்ளைகள் மறுகாலையும் பிடித்து போகாதே என கெஞ்சுவர். இந்த தொல்லை இருக்க கூடாதுன்னு தான் திருமணமே செஞ்சுக்கிடலை...''''புரியாது நண்பா... திருமணம் தான் ஒரு ஆணையோ, ஒரு பெண்ணையோ முழுமைப்படுத்துகிறது. நம்முடன் சந்ததி நின்று விடக் கூடாது. கமா போட்டு தொடர வேண்டும்...''''சரி... மீதி தர்க்கத்தை இமயமலை ஏறும் போது வைத்துக் கொள்வோம்... உன் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...''ஓலா டாக்சியின் டிக்கியில் பயணச் சுமைகளை வைத்தான் துருவ்.கிளம்பியது கார்.இவ்வளவு நேரமும் துாங்குவது போல நடித்த மிஷ்கா துள்ளி எழுந்தாள். தந்தையின் முத்தங்களால் தடம் பதித்த ஈர எச்சில்களை முகம் முழுவதும் தேய்த்தாள்.அவசரமாக ராபிடோ பைக் புக் செய்தாள் மிஷ்கா. அது விமான நிலையம் நோக்கி சீறிப் பாய்ந்தது. காமராஜர் உள்நாட்டு போக்குவரத்து விமான நிலைய வாசலில் இறங்கினாள்.துாரத்தில் தந்தையை பார்த்து விட்டாள் மிஷ்கா.பதுங்கி பதுங்கி பின் தொடர்ந்தாள்.வழியில் ஒரு பயணி மிஷ்காவின் பதுங்கலை பார்த்து, ''என்னம்மா இதெல்லாம்...'' என்றார்.''எங்கப்பா கூட திருடன், போலீஸ் விளையாடுறேன். நீங்க போங்க தாத்தா...'' உதடுகளை பிதுக்கியபடி நகர்ந்தார் பயணி.வாசலில் நின்ற அதிகாரி யாருடனோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்க அவரது காலடிக்கு நடுவே நழுவினாள் மிஷ்கா.துருவ்வின் முதுகு தெரிந்தது.'என்னை விட்டுட்டா ஏர்போர்ட் போற அப்பா... இதோ பின்னாடியே வந்திட்டேன் பாரு...' முனங்கினாள் மிஷ்கா.பயணச்சுமைகளை சோதனைக்கு அனுப்பினான் துருவ்.மடிகணினியுடன் கூடிய தோள்பையை தன்னுடன் வைத்துக் கொண்டான்.விமான அறிவிப்புக்காக காத்திருந்தான் துருவ்.யாரோ முதுகுக்கு பின் பார்ப்பதாய் உணர்ந்து திரும்பினான்.தலைமையை இழுத்துக் கொண்டாள் மிஷ்கா.நான்கைந்து முறை திரும்பி திரும்பி பார்த்த துருவ் கண்களில் மிஷ்கா மாட்டிக் கொண்டாள்.''செல்லக்குட்டி...''''அப்பா...''ஓடி வந்து அதே வேகத்தில் காற்றில் பாய்ந்து, தந்தையை கட்டிக் கொண்டாள்.விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து மிஷ்காவை பிரித்தெடுக்க முயன்றனர். அவர்களின் கைகளை தட்டி விட்டாள்.''எப்படி வந்த...''''ராபிடோல...''''இப்படி நீ வரலாமா...''''இப்படி நீங்க என்ன விட்டுட்டு போலாமா...''''யானைக்கும், பானைக்கும் சரி... நீ கிளம்பு...''''விமானத்துக்கு டாட்டா காண்பிச்சுட்டு தான் விடுதிக்கு போவேன்...''''நீ ஒரு பிடிவாதக்காரி...''''நான் உங்க மகள் இல்லையா...''''ரொம்ப சமத்து தான் போ...''''அப்பா... ஆறுதலுக்கு என் கிட்ட அம்மா சிலை இருக்கு. உங்க கிட்ட என்ன இருக்கு...''''இருக்கு... ஆனா சஸ்பென்ஸ்...''''சொல்லுங்கப்பா...''சட்டை பொத்தானை கழற்றி, இடது பக்க நெஞ்சு பகுதியை காட்டினான் துருவ். அச்சு அசலாக தத்ரூபமாக மிஷ்கா உருவம் பச்சை குத்தப்பட்டிருந்தது. உருவத்துக்கு கீழே, 'மிஷ்கா என் உயிர் கிளி' என்ற வாசகம் இருந்தது.''இத எப்போ குத்தினீங்க...''''ஆறு மாசத்துக்கு முன்னாடி...''''இவ்வளவு உணர்வு பூர்வமாக என்னை நேசிக்கிறீங்களா அப்பா...''''ஆமா...''''எவ்வளவு நேசிக்கிறீங்கன்னு அளந்து காட்ட முடிமா...''''பால்வெளி பிரபஞ்சத்தை விட பிரமாண்டமானது என் மகள் மீது வைத்திருக்கும் அன்பு. நாளை உனக்கு கல்யாணமானாலும், குழந்தைகள் பிறந்தாலும், உன் மீதான பிரியம் நொடிக்கு நொடி விஸ்வரூபித்து கொண்டே இருக்கும்...'''ஓவ்...' என்றனர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள். ''நான், 31ம் முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி, இறங்கியவுடன், மலையேற்றத்துக்கு ஓய்வு அறிவித்து விடுவேன்... ''அப்புறம், நீயும், நானும் தான். உன் நிழல் போல் ஒட்டி கிடப்பேன்...''''நான் கொடுத்து வைத்தவள். இறைவனுக்கு நன்றி...''துருவ் விமானத்திற்கு கிளம்பி போனான். கண்ணாடி வழியே விமானத்திற்குள் ஏறுவது தெரிந்தது.''பை அப்பா... உலக சாதனை புரிந்து திரும்புங்கள்... இறைவன் உங்கள் சாகசத்திற்கு துணை நிற்கட்டும். வாழ்த்துகள்...''விமான நங்கைகளின் அருகே நின்று, தோராய திசையை பார்த்து கையாட்டினான் துருவ்.அலுமினிய பறவை கான்கிரீட் கூட்டிலிருந்து பாதையில் ஓடியது. ஒரு குறிப்பிட்ட தங்க நொடியில் வானேறியது.இன்னும் கையாட்டிக் கொண்டிருந்தாள் மிஷ்கா. 'தந்தை - மகள் உறவு இத்தனை உன்னதமாய் இருப்பது எனக்கு பிடிக்காதே! நிரந்தரமாய் பிரித்து விடுகிறேன்...' ரத்தம் வழியும் வாயால் கெக்கலித்தது தீய சக்தி.- தொடரும்...மீயாழ் சிற்பிகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !