உள்ளூர் செய்திகள்

பனி விழும் திகில் வனம்! (12)

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, நம்பிக்கையும், கற்பனை வளமும், சாகசம் செய்யும் துணிவும் மிக்க சிறுமி. இமயமலை சிகரம் ஏறப்போகும் தந்தையை பிரிய மனம் இன்றி கண்ணீர் வடித்தாள். மகளை பிரிந்து இமயமலை அடிவாரப்பகுதிக்கு சென்றான் துருவ். இப்போதைய காலநிலையில் மலை ஏறுவது ஆபத்து ஏற்படுத்தும் எச்சரிக்கையை புறக்கணித்து மலை ஏறினான். இனி - ''எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி முதல் காலடி எடுத்து வைத்து விட்டோம் மகளே...''துருவ்வின் மகரந்தக்குரல் மிஷ்கா காதுகளில் தேனாக பாய்ந்தது.''அப்பா... எவரெஸ்ட் சிகரம் எந்த நாட்டுக்கு சொந்தமானது...''''நேபாளுக்கும், திபெத்துக்கும் உரியது எவரெஸ்ட். திபெத், சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதி...''''எவரெஸ்ட்டை பார்க்க எப்படி இருக்கிறது...''''சாக்லெட் கோனில், வெண்ணிலா ஐஸ்கிரீம் அப்பியிருப்பது போல...'' ''எதாவது மிருகங்கள் தென்படுகின்றனவா...'' ஆர்வமாக கேட்டாள் மிஷ்கா.''அடிவார முகாமில் தானே இருக்கிறோம். எங்கு பார்த்தாலும் திபெத்திய சடை எருமைகள் கூட்டம் கூட்டமாய் நிற்கின்றன. இதை ஆங்கிலத்தில், 'யாக்' என கூறுவர்...'' ''பறவைகள் எதாவது தென்படுகிறதா...'' ''ஓ... தங்க கழுகுகளும், வரித்தலை வாத்துகளும் பறக்கின்றன...'' ''வாவ்... நானே, உங்களுடன் நின்று, சடை எருமை, கழுகு மற்றும் வரித்தலை வாத்துகளை கண்டு களிப்பது போல உணர்கிறேன்...'' ''சரி மிஷ்கா... மீண்டும் தொடர்பு கொள்கிறேன் பை...'' அலைபேசியை வைத்து, அம்மாவின் சிலையிடம் திரும்பினாள் மிஷ்கா.''நானும், அப்பாவும் பேசினதை கேட்டியா...'''கேட்டேன்...' என்றது சிலை மானசீகமாய்.''அப்பா உன் கூட பேசலையேன்னு வருத்தப்படுறியா...'' 'இல்லையே... நீ பேசினா என்ன, நான் பேசினா என்ன...' ''சுயநலமில்லாத தாய் நீ...'''உலகின் எல்லா தாய்மையும் இப்படித்தானே இருக்கும்...' ''அப்பாவை மிஸ் பண்ணிட்டோம்ன்னு வருத்தப்படுறியா...'' 'இதோ உன் கூடவே இருந்து, உன் அப்பாவின் சாதனையை கண் குளிர பார்க்கிறேனே...' ''ஐ லவ் யூ அம்மா...'' 'போடி போக்கிரி... அப்பனை துாக்கி, கரகாட்டம் ஆடிக் கொண்டு என்னை நேசிப்பதாக கதைக்கிறாயா...' ''இந்த பிரபஞ்சம் நிறைய அன்பை கொட்டி வைத்திருக்கிறேன். மனதுக்கு பிடித்தவர்களுக்கெல்லாம் அன்பை வாரி வாரி வழங்குகிறேன். யாருக்கும் கூடாமல், யாருக்கும் குறையாமல்...'' 'பத்து வயது பாப்பா மாதிரி பேசு...' ''சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் ஏன் படைத்தாய்...'' 'பாரதியாரை கேட்கிறாயா...' ''இல்லை... படைத்த சாமியை கேக்கிறேன்...'' 'சரி துாங்கு மகளே... நாளை பேசிக்கொள்வோம்...' அம்மா சிலையை தலைமாட்டில் வைத்து, துாங்க ஆரம்பித்தாள் மிஷ்கா.ஏழாவது நாள் -மிஷ்காவின் திறன்பேசி அப்பாவின் பதிவுக்குரலில் அழைத்தது. எடுத்து காதில் இணைத்தாள்.''காட்ரோ டெலக்...'' என்றான் துருவ்.''அப்டின்னா என்னப்பா...'' ''திபெத்திய மொழியில் காலை வணக்கம் சொன்னேன் மிஷ்கா...'' ''காட்ரோ டெலக்...''''எப்படி அம்மா இருக்கிறாய்...''''நீங்கள் இல்லாமல், நானும், அம்மாவும் மிகவும் சிரமப்படுகிறோம். அது சரிப்பா... இப்ப எங்க இருக்கீங்க...'' ''முகாம் ஒன்றில் இருக்கிறேன்...'' ''கண்ணெதிரே என்ன பாக்குறீங்க...'' ''பூமி முழுக்க வெள்ளியை காய்ச்சி ஊற்றியது போலவும், அதில் தத்தளிக்கும் எறும்பு போலவும், என்னை உணர்கிறேன்...'' ''நீங்கள் கவிஞன் ஆகிவிட்டீர்கள்...'' ''இமயமலை ஏறிப் பார்... நீயும் கவிதை எழுத துவங்கிவிடுவாய்...'' ''எதாவது மிருகங்களைப் பார்த்தீர்களா...'' ''ஹிமாலயன் கருப்பு கரடி, சிவப்பு நிற பான்டா, பனி சிறுத்தைகளை பார்த்தேன்...'' ''அவை உங்களை தாக்குமா...'' பயத்துடன் கேட்டாள் மிஷ்கா. ''இதுவரை தாக்கியதில்லை...'' ''உங்களுடன் இருப்பவர்களை பற்றி சில வார்த்தைகள் சொல்லுங்களேன்...'' ''என்னுடன் இரு ெஷர்பாக்கள் உள்ளனர். நேபாளிகள், குழந்தைகள் எந்த கிழமையில் பிறக்கின்றனரோ, அந்த நாளின் பெயரை வைத்து விடுவர். அந்தந்த நாட்களுக்குரிய தெய்வம் அவர்களை காப்பாற்றும் என்பது அவர்கள் நம்பிக்கை... ''ஞாயிற்றுக்கிழமை என்றால் நிமா. திங்கள்கிழமை என்றால் தவா. செவ்வாய் கிழமை மிங்மா. புதன்கிழமை லக்பா. வியாழக்கிழமை புர்பா. வெள்ளிக்கிழமை பசங். சனிக்கிழமை பெம்பா. என்னுடன் இருக்கும் இருவரும் கூட கிழமைகள் பெயர்களை தான் சூடியிருக்கின்றனர்...'' ''ஒரே கிழமையில் பத்து குழந்தைகள் பிறந்தால் குழப்பம் வந்து விடுமே...'' ''நல்ல கேள்வி. ெஷர்பா மக்களிடம் தான் கேட்க வேண்டும்...'' ''மீதி மூவர்...''ஆர்வத்துடன் கேட்டாள் மிஷ்கா.''மூவரில் ஒருவர் நுரையீரல் சிறப்பு மருத்துவர். செயற்கை சுவாசம் தருவதில் நிபுணர்...'' ''சரி...'' ''ஒருவர் மிக சிறப்பாக சமையல் செய்வார். கூடாரம் அமைத்துக் கொடுப்பார். கடைசியாக இருக்கும் ஒருவர் ஒளிப்பட சலனப்படநிபுணர்...'' ''மிகச்சரியான குழு...'' ''சாப்பிட்டாயா...'' ''சாப்பிட்டேன்...'' ''அம்மா என்ன செய்கிறாள்...''பாசத்துடன் கேட்டான் துருவ்.''நாம் பேசுவதை வாயை திறந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்...'' அத்துடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஐந்து நாட்களாக அப்பாவின் அழைப்பு இல்லாமல் பரிதவித்து போனாள் மிஷ்கா. திறன்பேசியில் மீண்டும் அழைத்தாள். இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.நள்ளிரவில் பெயரில்லாத ஒரு அழைப்பு வந்தது.எடுத்தாள் மிஷ்கா.''மிஸ் மிஷ்கா துருவ்... ஒரு கெட்ட செய்தி. உங்கள் அப்பா துருவ்வும், அவரது ஐந்து சகாக்களும் பனிப்புயலில் சிக்கி இறந்து விட்டனர். ஆறுதல் படுங்கள் அம்மா...''மிஷ்காவின் உச்சந்தலையில் இடி விழுந்தது.இரு பாதி துண்டுகளாய் உடைந்தாள் மிஷ்கா.- தொடரும்...- மீயாழ் சிற்பிகா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !