உள்ளூர் செய்திகள்

பனி விழும் திகில் வனம்! (16)

முன்கதை: மலையேற்ற வீரர் துருவ் மகள் மிஷ்கா, சாகச துணிவுள்ள சிறுமி. இமயமலையில் ஏறிய அவளது தந்தை துருவ் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. அதை ஏற்க மறுத்த மிஷ்கா, அமைச்சக அதிகாரியிடம் கடுமையாக வாதிட்டாள். தந்தையை கண்டுபிடிக்க இமயமலைக்கு புறப்பட போவதாக தெரிவித்தாள். இனி -திறன் பேசியின் எதிர்முனை ஆங்காரமாய் சீறியது.''பத்து வயது சிறுமி எவரெஸ்ட் ஏறப்போகிறாயா... இதென்ன பச்சைக்குதிரை தாண்டி விளையாடுறதுன்னு நினைச்சுட்டியா... கழுதை வலிக்கு சாம்பல் மருந்தா... அரசு உன்னை மலையேற அனுமதிக்காது...''''என் அப்பா தொலைந்து விட்டார். தொலைந்தவரை கண்டுபிடிப்பது மகளின் வேலை தானே...'' என்றாள் மிஷ்கா.''நீ கற்பனை உலகில் வாழ்கிறாய் சிறுமியே... நீ மலையேறினால் சுடச்சுட மரணம் தான்...'' ''தந்தைக்காக உயிர் நீந்தால் மிக மகிழ்வேன்...'' ''உன் உறவுக்காரர்களின் அலைபேசி எண் கொடு. அவர்களிடம் பேசி, உனக்கு தகுந்த அறிவுரை கூற செய்கிறேன்...''''யார் அலைபேசி எண்ணையும் தர மாட்டேன்...'' பிடிவாதமாக மறுத்தாள் மிஷ்கா.''எவரெஸ்ட் ஏற வயது தகுதி, உடல் தகுதி, தகுந்த பயிற்சி, சிறப்பான வழிகாட்டல் தேவை...'' ''வயது தகுதி எனக்கு இல்லாமல் இருக்கலாம். கடந்த, ஆறு ஆண்டுகளாக டேக்வான்டோ கராத்தேயும், கிக் பாக்சிங்கும் மார்ஷியல் ஆர்ட்சும் கற்று வருகிறேன். யோகா தியானத்தில் நான் எக்ஸ்பர்ட்...'' ''எவரெஸ்ட் ஏற, 75 லட்சத்திலிருந்து, 1 கோடி ரூபாய் வரை செலவாகும். உனக்கு யார் கொடுப்பர்...'' ''மனமிருந்தால் மார்க்கமுண்டு பூமர் தாத்தா...'' ''என்னையையே கிண்டல் செய்றியா...'' ''ஆமா... எதையுமே அது ஆகாது, அது நடக்காது, அது முடியாது, அது புட்டுக்கும்ன்னு சொல்ற உங்களை வேறெப்படி கூப்பிடுறது...'' கிண்டலாக பேசினாள் மிஷ்கா.''இன்னும் ஒரு வாரம் பொறு. அதற்குள், உன் தந்தையின் உடலை மீட்டு விடுவோம். அதன்பின், உன் எவரெஸ்ட் பயணம் தேவைப்படாது...'' ''என் சாபத்தை வாங்கி கட்டிக் கொள்ளாதீர். என் அப்பா உயிருடன் இருக்கிறார். நான் எவரெஸ்ட் ஏறி மீட்பேன்...''''நீ தங்கியிருக்கும் விடுதியை விட்டு, ஒரு அடி வெளியே வர விட மாட்டேன்...'' ''என்ன செய்வீர்...'' கோபமாக கேட்டாள் மிஷ்கா.''மத்திய அரசு, மாநில அரசிடம் கூறி, உன்னை வீட்டு காவலில் வைப்பேன்...'' சட்டம் பேசினார் அதிகாரி.''எந்த வீட்டுக்காவலும் என்னை கட்டுப்படுத்தாது. காற்றுக்கென்ன வேலி; கடலுக்கு என்ன மூடி... கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது! மங்கை உள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது...'' ''எவரெஸ்ட் மலையேற லுக்லாவுக்கு விமானம் தானே ஏறுவாய். விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவாய்...''''நான் என்ன கொலைக்குற்றவாளியா...'' ''உன்னை பாதுகாக்க, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை...'' ''உங்களிடம் என்ன எனக்கு வீண் பேச்சு! உங்க எண்ணை பிளாக் செய்து விடுகிறேன். வேறெந்த எண்ணிலிருந்தும், என்னுடன் பேச முயற்சிக்காதீர். பை பை...'' ''வராதே மிஷ்கா... படு பயங்கர ஆபத்து...'' எதிர்முனை குரல் தேய்ந்து மறைந்தது.மிஷ்காவின் விடுதி வாசலில் இரு போலீஸ்காரர்கள் அமர்ந்திருந்தனர்.''அதுக்குள்ள வந்துட்டீங்களா...''கேட்டபடி அடுத்த வழிமுறை பற்றி யோசித்தாள். ஜன்னல் வழியாக வெளியே குதித்தாள் மிஷ்கா.ஓட்டமும், நடையுமாய் போனவள், ஒரு பங்களாவின் முன் நின்றாள்.வாசலின் கேமராவில் முகம் பதித்து பேசினாள்.''நான் மிஷ்கா... எவரெஸ்ட் மலையேறும் வீரர் துருவ்வின் ஒரே மகள். உயிராபத்தில் சிக்கி இருக்கும் என் தந்தையை மீட்க போகிறேன். அதற்கு உங்கள் உதவி வேண்டும்...'' அந்த வீட்டு கோடீஸ்வர முதியவர், செக்யூரிட்டியிடம், ''அந்த மிஷ்காவை உள்ளே அனுப்பு...'' என்றார்.உள்ளே நடந்தாள்.வரவேற்பறையில் இரவாடையில் நின்றிருந்தார் கோடீஸ்வரர்.''வணக்கம் சார்...'' ''வணக்கம் அம்மா. இப்படி உட்காரு...'' ''என் தந்தை, 31வது முறையாக எவரெஸ்ட் ஏறிய போது காணாமல் போய் விட்டார். காணாமல் போய், நான்கு நாட்கள் ஆகின்றன. தொலைந்த தந்தையை மீட்க நானே எவரெஸ்ட் ஏற தீர்மானித்திருக்கிறேன்...'' ''சரி...'' ''என் மொத்த செலவையும், நீங்கள் தான் ஸ்பான்சர் செய்ய வேண்டும்...'' என்றாள் மிஷ்கா.''எனக்கு அதனால் என்ன லாபம்...''''ஒரு சிறுமியின் வீர தீர செயலை உலகமே திரும்பி பார்க்கப் போகிறது. அந்த சாகசத்தை ஸ்பான்சர் செய்யும் உங்களுக்கு அபரிமிதமான விளம்பரம் கிடைக்கும். உலகின் ஒட்டு மொத்த மீடியாக்களும் உங்களை போற்றி புகழும். என் தந்தை உயிருடன் திரும்பி வந்து, உங்கள் கம்பெனி பனியன்களுக்கு மாடலிங் செய்வார்... எல்லாவற்றையும் விட...''''எல்லாவற்றையும் விட...''''பணக்காரர்களுக்கும், மனிதாபிமானம் இருக்கிறது என காட்ட ஒரு தங்க சந்தர்ப்பம் இது. உங்கள் மகன் காணாமல் போய் உங்கள் பேத்தி பரிதவித்தால் லாபகணக்கா பார்த்துக் கொண்டு நிற்பீர்...''''சென்டிமென்ட்டாக தாக்குகிறாய்...''''ஆமாம்... சொல்லுங்க தாத்தா...''''வீடு புகுந்து என் இதயத்தை திருடி விட்டாய். உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்வேன். எத்தனை கோடிகள் செலவானாலும் உன் எவரெஸ்ட் சாகசத்துக்கு செலவிட தயார். உன் தந்தையை உயிருடன் மீட்பாய். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...''மிஷ்காவின் கைகளை பற்றி குலுக்கினார் பணக்காரர்.மிஷ்காவை ஏற்றிய தனி குட்டி விமானம் லுக்லாவுக்கு பறந்தது. பூம் பூம் சக்க சக்க!- தொடரும்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !