உள்ளூர் செய்திகள்

பண்புடைமை!

ஆ சிரியர் சரவணன் வகுப்பில் நுழைந்ததும், மாணவர்களிடையே நிலவிய சலசலப்பு, சட்டென்று அடங்கியது. எழுந்து வணக்கம் கூறினர் மாணவர்கள். பதில் வணக்கம் செலுத்திய ஆசிரியர், அமரச் சொன்னார். நல்லொழுக்க பாடம் ஆரம்பமானது. ''உங்களிடம் இல்லாதவை எவை, எவை என்று எழுதுங்கள். எழுதி முடித்ததும், ஒவ்வொருவராக வாசித்து காட்ட வேண்டும்...'' மாணவர்கள் உற்சாகத்துடன் பேனாவை எடுத்து, 'கடகட'வென எழுதத் துவங்கினர். பத்து நிமிடங்கள் கடந்தன - ஒவ்வொருவராக முன் வந்து, எழுதியதை வாசிக்க ஆரம்பித்தனர். இல்லாதவையாக, வீடு, கார், பைக், கம்ப்யூட்டர் என, சிலர் எழுதியிருந்தனர். இன்னும் சிலர், வாட்ச், கிரிக்கெட் பேட், கிடார், மொபைல் போன் என்ற ரீதியில் குறிப்பிட்டிருந்தனர். ஒருவன், ''எனக்கு அப்பா இல்லை...'' என்று வாசித்தான். அனைவர் கண்களும் கலங்கின. இன்னொருவன், விபத்தில் ஒரு கால் பறிபோனதைக் குறிப்பிட்டான். அனைவரும் நெகிழ்ந்தனர். முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த மாறன், இறுதியாக எழுந்தான். ''என்னிடம் இல்லாதவை...'' என தலைப்பை சொன்னபடி தயக்கத்துடன் ஆசிரியரை பார்த்தான். தொடர்ந்து வாசிக்குமாறு சைகையில் அறிவுறுத்தினார் ஆசிரியர். ''கோபம், பொறாமை, வெறுப்பு, சோம்பல்...'' என, கம்பீரமாக வாசித்து முடித்தான், மாறன். அனைவர் விழிகளும் வியப்பில் விரிந்தன. ''மாணவர்களே... மாறன் வாசித்ததை கேட்டீர்கள் தானே... நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டும் என்பதை, எவ்வளவு நாசுக்காக உணர்த்தி இருக்கிறான் பாருங்கள். பலத்த கர ஒலி எழுப்பி, அவனது எண்ணத்துக்கு பரிசாக தருவோம்...'' என்றார் ஆசிரியர். மாணவர்களுடன் பாராட்டியபடி, ''இல்லாத நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கெட்ட குணங்களை நீக்கி விட வேண்டும்...'' என அறிவுரை கூறினார். வகுப்பு முடிந்ததற்கான மணியோசை கேட்டது. மாணவர்கள் மனதில் நல்ல விதைகளை துாவிய நிறைவுடன் வெளியேறினார் ஆசிரியர். குழந்தைகளே... நல்ல பண்புகளை வளர்த்துக் கொண்டால், வாழ்வு சிறப்பாக இருக்கும். ●●● பண்புடைமை! - கே.கீதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !