உள்ளூர் செய்திகள்

பிங்க் சிட்டி!

வரலாற்றில் சிறப்பு பெற்றது ராஜஸ்தான் அரச பாரம்பரியம். இங்குள்ள ஜெய்ப்பூர் நகரம், 'பிங்க் சிட்டி' என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் திட்டமிட்டு அமைக்கப்பட்டது . மகாராஜா இரண்டாம் சவாய் ஜெய்சிங் ஆட்சியில், 18ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இங்குள்ள இளஞ்சிவப்பு வண்ணக் கட்டடங்கள், நகரத்திற்கு தனித்துவ அழகை தருகின்றன. தீபாவளி திருவிழாவின் போது நகரம் ஒளிரும் காட்சி, பிரமிக்க வைக்கும். மன்னராட்சியில் இங்கு அமைக்கப்பட்ட அரண்மனையின் பெயர் ஹவா மஹால். இது, காற்றோட்டத்துக்கு ஏதுவாக, 953 ஜன்னல்களை உடையது. தேன்கூடு போன்ற வடிவமைப்பு வினோதமானது. மன்னர் குடும்ப பெண்கள் உலகை ரகசியமாக ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மலை உச்சியில் அமைந்த ஆம்பர் கோட்டை, மொகலாய மற்றும் ராஜபுதான கட்டடக்கலை கலவையாக உள்ளது. கண்ணாடி அறைகளாலும், வண்ண ஓவியங்களாலும் மிளிர்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க அரண்மனை, தற்போது ராஜவம்சத்தின் கலைப்பொருட்கள், ஆயுதங்கள், அரிய ஓவியங்களை காட்சிப்படுத்தும் கூடமாக விளங்குகிறது. இங்கு, யானை சவாரி, பாரம்பரிய திருவிழாகள் நிகழ்த்தப்படுகின்றன. ஜெய்ப்பூர் நகர கலாசாரம் உயிரோட்டமுள்ளது. பாரம்பரியமிக்க கூமர், கல்பேலியா நடனங்களை காணும் போது மனம் நெகிழும். இங்கு தயாராகும் பிளாக் பிரிண்ட் துணிகள், நீலப்பாண்ட பொருட்கள், வண்ணமய நகைகள் கைவினைஞர்களின் பெருமையை பறைசாற்றும். ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளான தால் பாடி, காட், காச்சோரியின் தனித்துவ சுவை உலகம் முழுதும் இன்று பேசப்படுகிறது. ஜெய்ப்பூர் ஜோஹரி பஜார் பகுதியில் நகை, மணக்சந்தில் கைவினை பொருட்கள் வாங்கலாம். ஜெய்ப்பூரில் ஜந்தர் மந்தர், வானியல் ஆய்வகம் ஆகியவை யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. இங்குள்ள பெரிய சூரியக் கடிகாரம், இன்றும் நேரத்தை துல்லியமாக காட்டுகிறது. ஜெய்ப்பூர் இலக்கிய விழாவும் இப்போது புகழ் பெற்றுள்ளது. உலக அளவில் புத்தக ஆர்வலர்களை ஈர்க்கிறது. ஜெய்ப்பூர் நகரம், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் இணைக்கிறது. பார்வையாளருக்கு மறக்க இயலாத அனுபவத்தை அள்ளித் தருகிறது. - வி.திருமுகில்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !