புராஜெக்ட் ஓ! (12)
முன்கதை: அறிவியல் கண்காட்சிக்காக, புதிய உயிரியை உருவாக்க மாணவ- - மாணவியர் குழு சோதனை திட்டத்தை வகுத்தது. திட்டப்படி ஆய்வக, 'இன்குபேட்டரில்' வார இறுதியில் வைத்து சென்ற முட்டை, திங்களன்று மாயமாய் மறைந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆய்வக உதவியாளரிடம் விசாரித்து முட்டை ஓடு குப்பை தொட்டியில் வீசப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதை சேகரித்து பத்திரப்படுத்தினார் மதிவதனி. இனி - ''நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா...'' என்றாள், அஞ்சலி. ''சொல்லு...'' என்றான், கதிர். மற்றவர்களும் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல், அஞ்சலியை நிமிர்ந்து பார்த்தனர். ''முருகேசன் அண்ணா விஷயத்தில் எனக்கு சந்தேகம் இருந்து கிட்டே இருக்கு. மதிவதனி மேம் சொன்னது எனக்கு ஏற்புடையதா இல்ல...'' ''எனக்கும்...'' என்றான், கதிர். ''நானும் பல கோணங்கள்ல யோசிச்சுப் பார்த்தேன். ஒரேயொரு சாத்தியக்கூறு தான் இருக்கும்ன்னு எனக்கு தோணுது...'' ''நீ முதல்ல உன் சந்தேகம் என்னன்னு சொல்லு, அஞ்சலி. அப்புறம் நான் சொல்றேன்...'' என்ற கதிரை யோசனையுடன் பார்த்தாள், அஞ்சலி. ''சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கப்பா. எனக்கு, 'சஸ்பென்ஸ்' தாங்கல...'' அவசரப்படுத்தினான், பரத். ''நான் ஒரு ஐடியா சொல்றேன்...'' குறுக்கிட்டாள், வினோதா. என்ன என்பது போல அவளைப் பார்த்தனர். ''அஞ்சலி ஒரு பாயின்ட் சொல்லட்டும். அப்புறம் கதிர் ஒண்ணு சொல்லணும்...'' வினோதாவின் ஆலோசனை ஏற்கப்பட்டது. ''நம்மைத் தவிர, ஆய்வகத்துக்குள் வந்து போனது முருகேசன் அண்ணா மட்டும் தான்...'' என்று ஆரம்பித்தாள், அஞ்சலி. அடுத்தடுத்து, அவர்கள் பேசப் பேச, நிகழ்வின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க, ஒரு நுனி கிடைத்ததில் எல்லாரும் மகிழ்ந்தனர். கதிரும், அஞ்சலியும் ஒரே கோணத்தில் தான் யோசித்திருந்தனர். ''கரெக்ட் அஞ்சலி. முருகேசன் அண்ணா உள்ளே வந்ததும் நிச்சயமா, 'இன்குபேட்டர்' இயங்கிட்டு இருக்கிறதை கவனிச்சி இருப்பார். சந்தேகத்தில் அதை திறந்து பார்த்திருப்பார். அங்கே முட்டை இருந்திருக்கும். எதார்த்தமா கையில் எடுத்து, என்னன்னு பார்த்திருக்கலாம். அப்போ கை தவறி கீழே விழுந்து முட்டை உடைந்து இருக்கலாம். அதை சுத்தம் செய்து, குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம்...'' என்று முடித்தாள், அஞ்சலி. ''சூப்பர். இது தான் நடந்திருக்கும்...'' என்றான், பரத். ''எனக்கும் அப்படித்தான் தோணுது...'' என்றாள், வினோதா. ''ஓகே... சாயங்காலம் மதிவதனி மேம் கிட்ட இதைச் சொல்லிடலாம்...'' என்றாள், அஞ்சலி. பிற்பகலின் கடைசி பாட வகுப்பு. 12ம் வகுப்பு, 'சி' பிரிவு மாணவர்கள், 'பிராக்டிகல்' - செய்முறை வகுப்புக்காக, உயிரியல் ஆய்வகத்தின் உள்ளே வர ஆரம்பித்தனர். மதிவதனியின் கவனம், மாணவர்களின் பக்கம் திரும்பியது. மாணவர்கள் ஆய்வக ஸ்டூல்களில் அமர ஆரம்பித்தனர். 'மைக்ராஸ்கோப்' அருகில் மாணவர்கள் பயன்படுத்தும் கண்ணாடி, 'ஸ்லைடு'களை வைத்துக் கொண்டிருந்தார், முருகேசன். ''ரெண்டு பேர், ஒரு மைக்ராஸ்கோப்பை பயன்படுத்திக்கோங்க... 'அப்சர்வேஷன்' பார்த்துட்டு, 'டயகிரம்' மட்டும் தெளிவா போடுங்க. 'ஷேடிங்' குடுக்க வேண்டாம்...'' என்று சொல்லி, பதற்றத்தை மறைத்தபடி மெல்ல நடந்து, ஒவ்வொரு மேஜையாக கவனித்தார், மதிவதனி. பார்வை, மேஜையின் மூலை முடுக்குகளில் துளாவியது. கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை. 'ஜலீர்' என்று கண்ணாடி விழுந்து, உடையும் சத்தம் கேட்டது. ''ஸ்லைடை உடைச்ச, அந்த பிரகஸ்பதி யாருப்பா...'' என்றார், மதிவதனி. ''அரவிந்த் கையை வெட்டிக்கிட்டான் மேம்...'' ஒரு மாணவனின் குரல் கேட்டது. அந்த திசை நோக்கி வந்தார் மதிவதனி. கடைசி வரிசை மேஜை ஒன்றில், இடது கை ஆள் காட்டி விரலை, வலது கையால் பிடித்தபடி, வலியுடன் இருந்தான், அரவிந்த். விரலில் ஒரு சின்ன கீறலுடன் ரத்தம் தெரிந்தது. ''கவனமா பண்ண வேண்டாமா, ரத்தம் வருதே... ஆழமா வெட்டிடுச்சா...'' ''இல்ல மேம், லேசா தான்...'' அரவிந்த்தின் விரலை அக்கறையுடன் பார்த்தார், மதிவதனி. காயம் ஆழமாக இல்லை. ''ஸ்ரீதர், இவனைக் கூட்டி போய், முதலுதவி பெட்டியில், 'பேண்ட் எய்ட்' எடுத்து போட்டு விடு...'' என்று அனுப்பினார். அப்போது தான் இரண்டு சொட்டு ரத்தம், தரையில் சிந்தி இருந்ததை கவனித்தார் மதிவதனி. ''முருகேசன் அண்ணே, இதை சுத்தம் பண்ணுங்க...'' ''வரேன் டீச்சர்...'' என்று முருகேசனின் குரல் கேட்டது. அங்கிருந்து நகர்ந்து மாணவர்களை கண்காணித்தபடி மெல்ல நடந்தார், மதிவதனி. ''ஸ்டூடன்ட்ஸ்... கருவிகளை கவனமா கையாளுங்க...'' என்றபடி, மாணவர்களின் ஊடாக நடந்தார். அதேசமயம், இன்குபேட்டர் இருந்த இடத்திற்கு அருகில், மறைவான பகுதியில், கோலிகுண்டு அளவு இருந்த ஈரமான சாம்பல் நிற உயிரினம், மெதுவாக அசைந்தது. அது ரத்த வாசனையை உணர்ந்தது. - தொடரும்- ஜாரா நரேஷ்