அழுக்கு மூட்டை!
பக்கத்து நாட்டுடன் போர் செய்து வென்றான் காந்தார தேசத்து மன்னன். வெற்றியைக் கொண்டாட அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். அரண்மனை அருகே பிச்சைக்காரன் ஒருவன் வசித்தான். தினமும் யாசகம் செய்து பழைய உணவுகளை சாப்பிட்டான். ஒரு நாளாவது அரண்மனையில் விருந்து சாப்பிட வேண்டும் என, ஏக்கத்துடன் இருந்தான். அதற்கு இப்போது வாய்ப்பு வந்திருக்கிறது. 'நான் விருந்துக்கு போக முடியுமா' மனதில் கேள்வியுடன் அணிந்திருந்த கந்தல் உடையை ஒருமுறை ஏற இறங்க பார்த்தான் பிச்சைக்காரன். நிச்சயம் காவலர்கள் அனுமதிக்க மாட்டர். என்ன செய்யலாம் என்று யோசித்தான். 'மன்னனிடம் யார் யாரோ, எதை எதையோ கேட்கின்றனர். நல்ல உடை ஒன்று கேட்டால் என்ன' தைரியத்தை வரவழைத்து அரண்மனைக்கு சென்று கோரிக்கை வைத்தான் பிச்சைக்காரன். அவனது துணிச்சலை ரசித்த மன்னன், 'உனக்கு என் ராஜ உடையில் ஒன்றையே தருகிறேன். அதை அணிந்து வந்து அமர்ந்து விருந்து சாப்பிடு...' என்றான். மன்னன் தந்த உடையை அணிந்து கொண்டான் பிச்சைக்காரன். கண்ணாடி முன் நின்று பார்த்தான். தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான். அரண்மனை விருந்தில் அவனுக்கு தனிக்கவனிப்பு கிடைத்தது. வாழ்நாள் கனவு நிறைவேறியது. அப்போது ஒரு ரகசியத்தை சொன்னான் மன்னன். 'முனிவர் ஒருவர் எனக்கு பரிசாக தந்தது இந்த உடை. விசேஷ சக்தி வாய்ந்தது. அழுக்கும் ஆகாது, கிழியவும் கிழியாது. வாழ்நாள் முழுக்க துவைக்காமல் உடுத்திக் கொள்ளலாம். இந்த உடை தரும் கம்பீரத்தை வைத்து நல்லபடியாக வாழ்வதற்கு முயற்சி செய்...' மன்னனுக்கு நன்றி சொல்லி திரும்பிய பிச்சைக்காரனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. 'ஒருவேளை மன்னன் சொன்னது பொய்யாக இருந்து, இந்த உடை கிழிந்து விட்டால் என்ன செய்வது' எண்ணியபடி, பழைய கந்தல் உடையை மூட்டையாக கட்டி பத்திரமாக வைத்துக்கொண்டான் பிச்சைக்காரன். எங்கேயும் அந்த அழுக்கு மூட்டையை துாக்கியபடி சென்றான். நாட்கள் நகர்ந்தன. மன்னன் சொன்னது உண்மை என்பது புரிந்தது. அணிந்திருந்த உடை, அழுக்காகவோ, கிழியவோ இல்லை என்றாலும், அழுக்கு மூட்டையை துாக்கிப்போட மனமின்றி இருந்தான் பிச்சைக்காரன். மக்களும் அவனது ராஜ உடையை கவனிக்காமல், சுமந்து சென்ற அழுக்கு மூட்டையையே பார்த்து எடை போட்டனர். பிச்சைக்காரனுக்கு, 'அழுக்கு மூட்டை' என பட்டப் பெயரும் சூட்டியிருந்தனர். இதை கவனித்து, மூட்டையை துாக்கி வீசினான். அவன் அணிந்திருந்த உடை கம்பீரம் தந்தது. அது வாழ்க்கையை மாற்றியது. குட்டீஸ்... கோபம், கவலை, சோகம், பகைமை, பழிவாங்கும் உணர்வு என வேண்டாதவை மனதில் அழுக்கு மூட்டை போல் தேங்கி கிடக்கின்றன. அவற்றை துாக்கி எறிந்தால் மகிழ்ச்சி கிடைக்கும். - எம்.நிர்மலா!