உள்ளூர் செய்திகள்

தாத்தா!

பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ், கிேஷார். ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் கோபால். மூவரும் ஆத்துார் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தனர். கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவன் கோபால். ஒவ்வொரு நாள் இரவிலும் கதைகள் கூறுவார் அவன் தாத்தா. அவற்றை அக்கறையுடன் கேட்டபடி துாங்கி விடுவான். அதில் அறிவுரை, பொது அறிவுத் தகவல்கள் நிரம்பியிருக்கும்.அன்று வகுப்பில் கட்டுரை போட்டி நடக்கவிருந்தது.''நண்பர்களே... வலைத்தளத்தில் தேடி, கட்டுரை எழுத தகவல்களை சேகரித்துள்ளேன்...''பணக்கார குடும்பத்தை சேர்ந்த கிஷோர் பெருமிதமாக கூறினான்.''இரவு முழுதும், மடிகணினியில் தகவல்களை சேகரித்துள்ளேன்...'' பெருமை பொங்க உற்சாகத்துடன் கூறினான் சந்தோஷ்.எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் கோபால்.வகுப்பில் நுழைந்தார் தமிழாசிரியர். மாணவர்களை நோட்டமிட்டபடி கரும்பலகையில், 'தேவாங்கு' என எழுதினார்.''இந்த தலைப்பில் கட்டுரையை, 30 நிமிடத்தில் எழுதி தர வேண்டும்...''அறிவித்து வகுப்பறையை ஆராய்ந்தார்.தலைப்பை கண்டதும், குழம்பினர் மாணவர்கள்.கோபாலுக்கு எந்த தயக்கமும் இல்லை. இரவில் தாத்தா கூறியதெல்லாம் நினைவுக்கு வந்தது.அவற்றை முறைப்படுத்தி சுவாரசியமாக எழுதி சமர்ப்பித்தான்.எழுதும் நேர அவகாசம் முடிந்தது.''சிறப்பாக எழுதியுள்ளோருக்கு மாலையில் பரிசளிக்கிறேன்...''புறப்பட்டார் தமிழாசிரியர்.''ச்சே... ஒன்றுமே எழுத இயலவில்லை...''வெறுப்புடன் தலைமுடியை பிய்த்துக்கொண்டான் கிஷோர்.''என்னடா... இப்படி தலைப்பை கொடுத்து சோதிச்சுட்டார். எனக்கும் ஒன்றும் புரியல்லை...''பதற்றம் மேலிட கூறினான் சந்தோஷ்.'கோபால்... நீ எப்படி எழுதினாய்...'நண்பர்கள் விசாரித்தனர்.''தாத்தா கூறியது நினைவில் இருந்தது; அதையே எழுதி விட்டேன்...''அடக்கத்துடன் கூறினான் கோபால்.மாலையில் தமிழாசிரியர் வரவுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர் மாணவர்கள்.வகுப்பு துவங்கியது. ''இன்று, சிறப்பாக கட்டுரை எழுதி பரிசு பெறும் மாணவன்...''அறிவிப்பை பாதியில் நிறுத்தியபடி பார்த்தார் தமிழாசிரியர்.ஆர்வம் பொங்க அவரை கவனித்தனர் மாணவர்கள். கரும்பலகையில் நிதானமாக, 'கோபால்' என எழுதினார் தமிழாசிரியர்.கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.கோபாலுக்கு, பேனா ஒன்றை பரிசாக தந்து, ''கட்டுரையில் உள்ள விபரங்களை நீயே சொல்...'' என அழைத்தார் தமிழாசிரியர்.''தேவாங்கு, மனித இனத்தின் முன்னோடி. உருண்டை விழிகளுடன் காணப்படும். சூம்பிய கை, கால்கள், பயந்த சுபாவம் உடைய பாலுாட்டி வகை உயிரினம்... பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி, தட்டாம் பூச்சி பெருக்கத்தை தடுக்கும். விவசாயத்தை காக்கும்...''பகலில் துாங்கி, இரவில் விழித்திருக்கும். மரத்துக்கு மரம் தாவும்; மனிதர்களுடன் பாசத்துடன் பழகும். இது, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகளை உருவாக்கி இயற்கையை பேணுவதன் வழியாக இது போன்ற உயிரினங்களை காக்கலாம்...'' கடகடவென கூறி முடித்தான் கோபால்.வகுப்பே கைதட்டி ஆரவாரம் செய்தது.மகிழ்ச்சியுடன் வரவேற்றான் கோபால். பட்டூஸ்... அனுபவம் மிக்க முதியோரின் அறிவுரை கேட்டு, அறிவை பெருக்கி நல்வழியில் நடப்போம்!- ஜமதக்னி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !