மவுனமே ஆயுதம்!
காலை நேரம் -பேத்தி சங்கவியுடன் நடை பயிற்சிக்கு சென்றார் ராமசாமி.கடைத்தெரு வழியாக நடந்தனர். வழியில் ரவுடி ரங்கனின் குரல் பயங்கரமாக கேட்டது. ''முனியா... உன்னை சும்மா விட மாட்டேன்...''சலவை தொழிலாளியை வம்புக்கு இழுத்தான் ரங்கன்.''காலையிலேயே ஆரம்பிச்சுட்டான்...''புலம்பினார் சலவை தொழிலாளி.''உன்னை தான்டா... காது கேட்கலையா...''வேகமாக வந்து, முகத்தில் குத்தினான் ரங்கன்.''தாக்கவா செய்கிறாய்... இதோ வருகிறேன்...'' ''போடா போ... யாரை வேண்டுமானாலும் அழைத்து வா...''இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றார் சலவை தொழிலாளி.அடுத்திருந்த காய்கறிக் கடைக்கு சென்றான் ரங்கன்.''அடேய்... பயம் இல்லாமல், வியாபாரம் செய்ய தைரியம் வந்துட்டதா...''விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளை தெருவில் வீசினான்.''என்ன தாத்தா... தவறை தட்டி கேட்க, யாருமே முன்வரல்லியே...''தைரியமாக கேட்டாள் பேத்தி சங்கவி.''வீட்டிற்கு சென்ற பின் இது பற்றி பேசுவோம்...''அமைதியாக நடந்தவரை வம்பாக இடை மறித்தான் ரங்கன்.''யோவ் பெரிசு... எப்படி இருக்க...''ஒதுங்கி சென்ற ராமசாமியை வம்புக்கு இழுத்தான்.எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காத்தார்.''யோவ்... சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறீயா... ரோசம் இல்லையா...''கண்டபடி பேசிக்கொண்டிருந்தான் ரங்கன்.அப்போது காவலர்களுடன் அங்கு வந்தார் சலவைத் தொழிலாளி. துரிதமாக செயல்பட்டு, ரங்கனை மடக்கி இழுத்து சென்றனர் காவலர்கள். பேத்தியுடன் வீட்டை அடைந்த ராமசாமி நாற்காலியில் அமர்ந்து சிந்தனை வயப்பட்டார்.அவரது மடியில் அமர்ந்தபடி, ''அந்த ரவுடி திட்டும் போது ஏன் அமைதி காத்தீங்க...'' என்று கேட்டாள் சங்கவி.''மவுனமே சிறந்த ஆயுதம்...''''என்ன தாத்தா சொல்றீங்க...''''மவுனமாக இருப்பதை விட சிறந்த ஆயுதம் வேறொன்றும் இல்லை. அந்த ரவுடிக்கு தண்டனை கிடைத்து விட்டது அல்லவா... பழந்தமிழ் புலவர் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...''''என்ன கூறியிருக்கிறார்...''''யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு...''''இதன் பொருள் என்ன தாத்தா...''''யாராக இருந்தாலும், கவனமாக பேச வேண்டும்; தவறான சொற்களை பேசினால் துன்பம் வந்து சேரும்...''''அப்படியா...''''ரவுடி ரங்கன் தேவையற்ற பேச்சால் காவலர்களிடம் சிக்கிக் கொண்டான் அல்லவா... இதன் வழியாக இன்று, என்ன கற்றாய்...''''யாரையும், மரியாதை குறைவாகவோ, தவறாகவோ பேச மாட்டேன் என உறுதி எடுத்துள்ளேன்...''பேத்தியின் தெளிவு தாத்தாவுக்கு மகிழ்ச்சியை தந்தது.பட்டூஸ்... பிறருக்கு துன்பம் வராத வகையில் இன்சொற்கள் பேசி பழக வேண்டும்!- வெ.மு.ஷா.நவ்ஷாத் முகமது