முயற்சியே முன்னேற்றம்!
பருவமழை பொய்த்திருந்தது. காடு வறண்டு காணப்பட்டது. பசும்புல்லின்றி பசியால் வாடின மான்கள். அவற்றின் துன்பம் கண்ட குரங்கு, 'துாரத்தில் தெரிகிறதே மலை; அதைத் தாண்டினால் பசும் புல்வெளி இருக்கிறது. அங்கு சென்றால் உயிர் பிழைக்கலாம்...' என நம்பிக்கையூட்டும் விதமாக அறிவுரைத்தது.நம்பிக்கையோடு புறப்பட்டன மான்கள்.வழியில் வந்த காகம், 'என்ன விஷயம்...' என்று கேட்டது.புல்வெளியை தேடி செல்வதை தெரிவித்தன.கேலியாக சிரித்த காகம், 'குரங்கு பேச்சை கேட்டு செல்கிறீர்களா... காட்டை கடந்ததும், பெரிய பாலைவனம் இருக்கிறது; உங்களால் அதை கடக்க முடியாது...' என்று கூறி பறந்தது.நீண்ட துாரம் நடந்ததால் சோர்வடைந்தன மான்கள். என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றன.அப்போது, 'இங்கு இருந்தால், பட்டினியால் சாவது நிச்சயம். அதை விட முயற்சித்து பார்ப்பது நல்லது...' என்றது மூத்த மான்.மீண்டும் நடக்க ஆரம்பித்தன மான்கள். காட்டை கடந்ததும் வெயில் சுட்டெரித்தது. கூட்டத்தை சோர்வின்றி வழி நடத்தி சென்றது மூத்த மான்.'பாலை வனத்தைக் கடந்து, மலையை தாண்டி விட்டால், அழகான சோலை இருக்கிறது. அங்கு வயிறு புடைக்க சாப்பிடலாம்...'பேச்சில் மயங்கின மான்கள். கடக்கும் துாரம், எரிக்கும் வெயில் பற்றி கவலையின்றி, புல்வெளியை அடையும் நோக்கத்துடன் வேகமாக நடந்தன. பாலை வனத்தை கடந்து, மலையை தாண்டின. கற்பனை செய்திருந்த புல்வெளியை கண்டன. எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தன மான்கள்.சுட்டீஸ்... வாழ்க்கை பாதையில் கஷ்டங்களை நினைத்து மலைக்காமல், வெற்றியை எண்ணியபடி துணிந்து முன்னேறுங்கள்.- என்.விஜயலட்சுமி