உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்!
அது ஒரு தெரு நாய். உடலில் சொறி, சிரங்கு இருந்தது. அந்த தெருவில் உள்ள வீடுகளை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். நல்ல மனம் படைத்த சிலர், அதற்கு அவ்வப்போது பிஸ்கட், சாதம், மீந்து போன உணவுகளை போடுவது வழக்கம். அத்தெருவில் உள்ள நல்லம்மாள், சிறிது அக்கறையுடன் அந்த நாய்க்கு உணவளித்தார். ஆனால், அவர் மகன் பிரபுவிற்கு, அந்த நாயை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பிரபுவிற்கு சின்ன வயதிலிருந்தே நாய்கள் மீது பயம் என்று அவருக்கு தெரியும். ஒ ரு நாள் இரவு, வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான், பிரபு. தெரு முனையில் இரண்டு மூன்று நாய்கள் நின்று கொண்டிருந்தன. அவை அமைதியாக இருந்தாலும், பிரபுவிற்கு அவற்றை கண்டு பயம். அப்பாவிற்கு போன் செய்து, தன்னை அழைத்து போக சொன்னான். அவரும் அவனை அழைத்து சென்றார். தெரு நாய்க்கு நல்லம்மாள் உணவு வைக்கும் போதெல்லாம், பிரபு கோபப்படுவான். ''அம்மா... அதுக்கு ஏன் சாப்பாடு போடுற... பேசாம கர்ப்பரேஷனுக்கு போன் செய்து பிடிச்சுட்டு போக சொல்லு...'' கோபமாக சொன்னான் பிரபு. நல்லம்மாள் மவுனமாக இருந்தார். மறுநாளே அந்த சம்பவம் நடந்தது. மாலையில் இருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. வேலை முடிந்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தான் பிரபு. அதை கைப்பையில் வைத்து, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். தெருவில் ஆள்நடமாட்டம் இல்லை. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒருவன், பிரபு கையிலிருந்த பையை பிடுங்க முயற்சித்தான். சட்டென்று சுதாரித்த பிரபு, பையை கெட்டியாக பிடித்துக்கொண்டான். திருடனுடன் போராடினான். திடீரென ஓடி வந்தது தெரு நாய். திருடன் மீது ஆக்ரோஷமாக பாய்ந்தது. உடனிருந்த நாய்களுடன் திருடனை துரத்தியடித்தது. துரத்தி திரும்பிய தெரு நாய், பிரபுவை பார்த்து வாலாட்டியது. அந்த நாயின் செயல், பிரபுவை நெகிழ செய்தது. அன்று முதல் நாயிடம் நட்பு பாராட்ட துவங்கினான். குட்டீஸ்... எந்த உயிரையும் வெறுக்கக் கூடாது; சிறுதுரும்பும், பல்குத்த உதவும் என்பதையும் மறக்கக் கூடாது. - ராதை