உள்ளூர் செய்திகள்

காலத்தை சீரமைக்கும் காலண்டரின் கதை!

சமூக, சமய, வணிக நிர்வாகத்தை முறைப்படுத்த உதவுகிறது காலண்டர் என்ற நாட்காட்டி. காகித அச்சில் உருவாக்கப்பட்டதே, உலகம் முழுதும் பயன்பாட்டில் உள்ளது. நவீன முறையில், அலைபேசி, கணினியில் அமைந்து, நிகழ்வுகள், செய்ய வேண்டிய பணிகளை திட்டமிட உதவுகிறது. லத்தீன் மொழியில், 'கலண்டே' என்ற சொல்லில் இருந்து உருவானதே காலண்டர். தமிழில், நாட்காட்டி எனப்படுகிறது.சந்திர, சூரிய இயக்க அடிப்படையில் நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்து பகுதியில் வீனஸ் கிரக இயக்க அடிப்படையில் நாட்காட்டி வழக்கத்தில் இருந்தது. புவியியல் மற்றும் காலநிலை மாற்றங்கள் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டது. உலகின் நீளமான நைல் நதியில் வெள்ளப் பெருக்கு அடிக்கடி ஏற்பட்டது. அதன் கால அடிப்படையில் பண்டைய எகிப்தியரால் ஒரு நாட்காட்டி உருவாக்கப்பட்டது. மொழி, சமயம், பண்பாடு, உற்பத்தி சார்ந்தும் நாட்காட்டிகள் உள்ளன. உலகெங்கும் கிரிகோரியன் நாட்காட்டி பயன்பாட்டில் உள்ளது. பண்டைய ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசர், கி.மு.45ல் ஒரு நாட்காட்டியை உருவாக்கியிருந்தார். அதில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என, 10 மாதங்களே இருந்தன. கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் 13ம் கிரிகோரி ஆணைப்படி, பிப்ரவரி 24, 1582ல் இது திருத்தப்பட்டது. அதில், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நாட்காட்டியில், கிறிஸ்தவ மதத்தை தோற்றுவித்த இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட காலத்தில் இருந்து ஆண்டு துவங்குகிறது. சர்வதேச அளவில் ஏற்கப்பட்டுள்ளது. சர்வதேச தபால் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, 1752ம் ஆண்டுக்குப் பின் தான் இதை அங்கீகரித்தன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பரவியது. ஹிந்து நாட்காட்டி: இந்திய வானியல் அறிஞர்கள் ஆரியபட்டா மற்றும் வராகமிகிரர் வடிவமைத்த பஞ்சாங்க அடிப்படையில் அமைந்தது. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை உடையது.இஸ்லாமிய நாட்காட்டி: இது ஹிஜ்ரி நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகிறது. சந்திர இயக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. இஸ்லாமிய சமய புனித நாட்கள், பண்டிகைகளை கணக்கிட உதவுகிறது. எத்தியோப்பியன் நாட்காட்டி: ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசு அலுவலகங்களில் அதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், 30 நாட்களை உடையது. ஒரு ஆண்டுக்கு, 12 மாதங்கள். இதன்படி, புத்தாண்டு செப்டம்பரில் தான் கொண்டாடப்படுகிறது.இந்திய தேசிய நாட்காட்டி: இது, சக நாட்காட்டி எனப்படுகிறது. ஆண்டுக்கு, 365 நாட்கள், 12 மாதங்களை உடையது. ஆண்டு, சக சகாப்தத்தில் எண்ணப்படுகிறது. இந்திய சீரமைப்புக் குழு பரிந்துரையில் தேசிய நாட்காட்டியாக மார்ச் 22, 1957ல் ஏற்கப்பட்டது. சக ஆண்டு சைத்ரா என்ற சித்திரை மாதத்தில் துவங்குகிறது. இயற்பியல் விதிகள் அடிப்படையில் அமைந்த கணித மற்றும் வானியல் நாள்காட்டியும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது வானியல் ஆய்வுகளில் பெரும் பங்கு வகிக்கிறது. புத்தாண்டில் இனிமையும், நலமும் வளர வாழ்த்துகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !