உள்ளூர் செய்திகள்

உலகம் விரட்டிய போலியோ!

இளம்பிள்ளை வாத பாதிப்பை, 'போலியோ' என்று, ஆங்கிலத்தில் கூறுவர். இது, கொடிய வைரஸ் நோய். குழந்தைகளை வெகுவாக தாக்கும். இதற்கு, 'போலியோ மைலிடிஸ்' என்று பெயர். இன்று உலகளவில் கட்டுபாட்டுக்குள் வந்து விட்டது. இதை ஒழிக்க முதன்முதலாக தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர், மருத்துவர் ஜோனஸ் சால்க். அவரது நினைவாகவே, உலக போலியோ தினம், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 24ல் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோயை விஞ்ஞானி கார்ல் லாண்ட்ஸ்டீனியர், 1908ல் கண்டறிந்தார். இதற்கான தடுப்பு மருந்தை, 1952ல் ஜோனாஸ் சால்க் முதன்முதலில் கண்டுபிடித்தார். விஞ்ஞானி தாமஸ் பிரான்சிஸ், ஊசி மூலம் செலுத்தும் மருந்தை, 1955ல் கண்டுபிடித்தார். வாய் வழியாக செலுத்தும் மருந்தை, விஞ்ஞானி ஆல்பர் சபின், 1957ல் கண்டறிந்தார். இதை வினியோகிக்க, 1962ல் அனுமதி வழங்கப்பட்டது. போலியோ நோய் தாக்கினால் குணப்படுத்த இயலாது. ஆனால், அது வராமல் தடுக்க முடியும். இதற்காக, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, இரு முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.உலகில் பெரியம்மை நோய்க்கு பின், முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் மட்டும், 2020ல் போலியோ பரவியதாக அறியப்பட்டது. பின், இந்த நாடுகளிலும் ஒழிக்கப்பட்டது. போலியோ வைரசில் மூன்று ரகங்கள் உள்ளன. அவை மூளை, நரம்பு மண்டலத்தை தாக்கும் தன்மையுள்ளவை. முதுகுத்தண்டு நரம்பு, தலை நரம்புகளையும் அதிகம் தாக்கும். தசைகளை இயக்கும் நரம்புகள் செயல் இழப்பதால், கை, கால்களில் பாதிப்பு ஏற்பட்டு சூம்பும். பாதிக்கப்பட்டவரால் எழுந்து நடக்க முடியாது. இந்த வைரஸ், பெரும்பாலும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையே தாக்கியது. இந்தியாவில், ஜனவரி 13, 2014ல் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இது பரவாமல் தடுக்க விழிப்போடு இருக்க வேண்டும்.- மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !