உள்ளூர் செய்திகள்

உலகின் பெரிய பறவை சிற்பம்!

உலகில் மிகப்பெரிய பறவை சிற்பம் கேரளா, கொல்லம் அருகே சடையமங்கலத்தில் உள்ளது. ராமாயண கதையில், சீதையைக் காக்க, ராவணனுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த பறவை ஜடாயு, மிகப்பெரிய சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இது, 200 அடி நீளம், 150 அடி அகலம், 70 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சிதருகிறது. பிரபல சிற்பி ராஜீவ் அஞ்சல், 10 ஆண்டுகள் உழைப்பில் உருவாகியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை தரும் வகையில் அமைந்துள்ளது . ஜடாயு எர்த் சென்டர் என்ற அமைப்பு இதை, 65 ஏக்கர் பரப்பில் உருவாக்கியுள்ளது. நான்கு மலைகளில் பரந்து விரிந்துள்ளது. முதல் மலையில் ஜடாயு சிற்பமும், அருங்காட்சியகமும், காட்சியரங்கம் ஒன்றும் உள்ளன. இரண்டாம் மலை, சாகச விளையாட்டுகளுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு பெயிண்ட் பால், கயிறு பாலம், பாறை ஏறுதல், டிரெக்கிங் போன்ற சாகச விளையாட்டுகளை அனுபவிக்கலாம். மூன்றாவது மலை, ஆயுர்வேத சிகிச்சை மையமாக உள்ளது. நான்காம் மலை உணவு தயாரிப்பு மற்றும் முகாம் நடத்தும் விதமாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு, சூரிய ஆற்றல் மின் தயாரிப்பு போன்ற நவீன அமைப்புகள் இங்கு செயல்படுகின்றன. பிரமாண்டமான ஜடாயு சிற்பத்திற்கு செல்ல, கேபிள் கார் வசதி உள்ளது. இதில் பயணிப்பது, இயற்கை அழகை ரசிக்க அற்புத வாய்ப்பாகவும் அமையும். இங்கு, 826 படிகள் வழியாக நடந்தும் செல்லலாம். திருவனந்தபுரம் நகரில் இருந்து, 46 கி.மீ., தொலைவில் உள்ளது. புராணம், இயற்கை, சாகசம், ஆன்மிக அனுபவங்களின் கலவையாக திகழ்கிறது. - மு.நாவம்மா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !