சுவையோ சுவை!
அன்று வகுப்பறை களை கட்டி இருந்தது. காரணம் நீதிபோதனை வகுப்பு. அதில் ஆசிரியர் கதை சொல்வார். விடுகதை, ஜோக்ஸ், புதிர் என்று கலந்து கட்டி இருக்கும்.''இன்று நான் உங்களுக்கு சுவையான உணவு வகைகளைச் சொல்வேன். அதன் சுவை என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும்!'' என்று ஆசிரியர் சொல்ல உற்சாகமாயினர் மாணவர்கள்.''மிக்சர் என்ன சுவை?'' என்றார் ஆசிரியர்.''காரம் கலந்தது?'' என்றான் சுரேஷ்.''அல்வா என்ன சுவை?'' ''இனிப்பு சுவை?'' என்றான் சதீஷ்.''புளியோதரை?'' ''புளிப்பு சுவை?'' என்றான் வினோத்.''கடல் நீர்?''''உப்புச் சுவையுடையது!'' என்றான் லட்சுமணன்.''பாக்கு?'' ''துவர்ப்பு!'' என்றான் ராஜன்.''பாவற்காய்?'' ''கசப்பு!'' என்றான் சரவணன்.''இப்படிச் சுவைகளை அறுசுவையாகப் பிரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது நான் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். யோசித்து நிதானமாகப் பதில் சொல்ல வேண்டும்.இந்த அறுசுவையும் இல்லாத ஒரு உணவு இருக்கிறது. அது எந்த உணவு என்று சொல்லுங்கள் பார்ப்போம்!'' என்றார் ஆசிரியர்.மாணவர்கள் திகைத்துப் போயினர்.''உப்பு, துவர்ப்பு, காரம், இனிப்பு, புளிப்பு, கசப்பு என்ற எந்தச் சுவையும் இல்லாத உணவைச் சொல்லுங்கள்!'' என்று மாணவர்களுக்குப் புரியும்படி மீண்டும் கேட்டார் ஆசிரியர்.மாணவர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். யோசிக்க யோசிக்கக் குழப்பமே மிஞ்சியது.''அரிசி!'' என்றான் செந்தில்.''இல்லை வெறும் சோறு!'' என்றான் சிவா.''கடைசியாக, தெரியாது சார்!'' என்று கையை விரித்தனர் மாணவர்கள்.''மாணவர்களே! இதற்கு நானே பதிலை கூறுகிறேன். முட்டையின் வெள்ளைக் கருவுக்கு அறுசுவைகளில் ஒரு சுவை கூடக் கிடையாது. சமீபத்திய ஆராய்ச்சியில் ஒரு உணவு நிறுவனம் கண்டறிந்த உண்மை!'' என்றார் ஆசிரியர்.உற்சாகமாக கைதட்டினர். அப்போது பள்ளி முடிந்ததற்கான வகுப்பு மணி அடித்தது. மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பியபடியே கலைந்து சென்றனர்.