உள்ளூர் செய்திகள்

சிறந்த மன்னர்!

ஒருமுறை இரண்டு தேர்கள் குறுகலான பாதையில் எதிரெதிரே வந்துவிட்டன. பெரிய பெரிய அரண்மனை ரதங்கள். ஒன்றில் அமர்ந்திருந்தவர் மல்லிக் ராஜா. இன்னொன்றில் வீற்றிருந்தவர் பிரம்மதத்த ராஜா. ஒவ்வொரு தேரிலும் பூட்டப்பட்டிருந்த நான்கு-நான்கு குதிரைகள் எதிரெதிரே முகத்தோடு முகம் உரசும் அளவுக்கு நெருங்கி வந்து நின்றன.தேரில் அமர்ந்திருந்த அரசர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால், பேசிக்கொள்ளவில்லை. மல்லிக் ராஜாவின் தேரோட்டியும் பிரம்மதத்தா ராஜானின் தேரோட்டியும் யார் முதலில் பின்வாங்கி இன்னொருவரின் தேருக்கு வழிவிடுவது என்று, 'வாதவிவாதம்' செய்தனர். முதலில் பின்வாங்குவதற்கு இரண்டு சாரதிகளுமே தயாராக இல்லை. சிறிது நேரம் விவாதித்த பிறகு இருவருக்கும் ஒரு யோசனை தோன்றியது.பிரம்மதத்தனின் சாரதி சொன்னான், ''இந்த இரண்டு மன்னர்களிலும் எவர் சிறந்தவரோ, உயர்ந்தவரோ அவரது தேர் முதலில் செல்லட்டும். அதற்கேற்ப இரண்டாமவரின் தேர் பின்வாங்கி பாதை தரவேண்டும்,'' என்றான்.மல்லிக் ராஜாவின் சாரதி ,''இருவரில் யார் சிறந்தவர் என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அதுவும் பிரயாணம் தாமதிக்காமல் உடனே கண்டுபிடிப்பது இயலாத காரியம். இருவரும் ஏறத்தாழ சமவயதினர். இருவரின் நாடுகளின் பரப்பளவும் சமமானது. இருவரிடமும் ஒரே அளவு செல்வம் குவிந்துள்ளது. யார் யாரை விட எதில் குறைச்சல்?''''நீ சொல்வது சரிதான். ஒன்று செய்வோம். நீ உங்கள் மன்னரின் தலைசிறந்த ஒரு குணத்தை எடுத்துச் சொல். அதன்பிறகு நான் என் அரசரின் தலைசிறந்த பண்பு ஒன்றைக் கூறுகிறேன். அந்த அடிப்படையில் யார் உயர்ந்தவர் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்,'' என்று யோசனை கூறினான்.அதன்படி தேரோட்டிகள் இருவரும் தத்தம் அரசரை வானளாவப் புகழ்ந்தனர். மல்லிக்ராஜாவின் சாரதி ஆரம்பித்தான்; ''மகாராஜ ராஜேந்திரர் எங்கள் மல்லிக் மகாராஜா தேசமெல்லாம் புகழுடன் விளங்குபவர். அவர் நல்லவர்களுக்கும் மிக நல்லவர் தாய்போல. தீயவர்களுக்குப் பொல்லாதவர் பாம்புபோல புலிபோல அவர் நல்லவர்களிடம் மென்மையாக நடந்துகொள்வார். கெட்டவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவார். நல்லோர்க்கு மலரை விட மென்மையானவர். கொடியோருக்கு வஜ்ஜிரத்தை விட கடுமையானவர். இவ்வாறு எல்லா தரப்பு மக்களையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளார். அவரது விரலசைந்தால் எங்கள் நாடே அசையும். ஆனால், அவரை எதிர்த்து விரலசைத்தால், விரலுடன் தலையும் போய்விடும். உறுதியான ஆட்சிக்கு இதுதானே அடிப்படை. இந்த ஒரு தகுதியே போதுமே எங்கள் மன்னர்தான் சிறந்தவர் என்று நிரூபிக்க. இதனால் எங்கள் தேர் முன்னேறிச் செல்ல வழிவிடுக அதற்கு வசதியாக உன் தேரை பின்னோக்கிச் செலுத்துக,'' என்றான்.இதையெல்லாம் கேட்டு பிரம்மதத்தனின் தேரோட்டி அசந்துவிடவில்லை.''போதுமப்பா நிறுத்து! உன் வாய் வலிக்கப் போகிறது. எங்கள் மன்னரின் பெருமையைச் சொல்கிறேன் கேள். ராஜ மகாராஜேந்திர ராஜகுல சேகர ஸ்ரீராஜராஜ எங்கள் பிரம்மதத்த ராஜா வாழ்க! நல்லவர்களுக்கு மிக நல்லவர். அதற்காக, கெட்டவர்களுக்குக் கெட்டவர் என்று பொருளில்லை. கெட்டவர்களிடமும் இரக்கம் அருளுபவர். ஏனெனில், பகைவரிடமும் பரமன் வாழ்வதை அவர் உணர்ந்துள்ளார். கடுமையாக நடந்துகொள்பவர்களிடமும் அவர் கருணை காட்டுவார். தமது இதமான அறிவுரையால் அவர் கஞ்சனையும் வள்ளலாக மாற்றக்கூடிவர். தீயவர்களையும் தமது பண்புகளால் கவர்ந்து தன் மூலம் அவர்களை நல்வழிப்படுத்திவிடுவார். உலகில் தீமை உண்டே தவிர தீயவர் என்று அடிப்படையில் யாரும் கிடையாது என்ற கொள்கை உடையவர்,'' என்றான்.தேரில் அமர்ந்திருந்த அரசர்களும் இந்த விருதா வலிகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர். மல்லிக்ராஜா தன்னைப் பற்றி புகழ்மாலையைக் கேட்டுப் புன்னகை செய்தார். பிரம்மதத்த ராஜாவைப் பற்றிய பாராட்டைக் கேட்டதும், அவர் பிரமித்து விட்டார். ''இந்தாப்பா, நம்ம தேரை பின்வாங்கி வழி ஏற்படுத்து... பிரம்மதத்த ராஜாவின் தேர் முதலில் இப்பாதையைக் கடந்து செல்லட்டும். பிறகு நாம் முன்னேறிச் செல்வோம்,'' என்றார்.சாரதி திகைத்துப் போனான். மல்லிக் ராஜா விளக்கினார்.''பிரம்மத்தரே என்னை விட பல மடங்கு சிறந்தவர். ஏனென்றால், நான் தீமையை வன்முறையால் அடக்குகிறேன். அவரோ தீமையை அன்பால் வெல்கிறார். தீயவர்களை நான் குண்டாந்தடி எடுத்துத் தாக்கி என் வழிக்குக் கொண்டு வருகிறேன். பிரம்மதத்தரோ பெருந்தன்மை என்னும் மலர்ச்செண்டால் வருடி, தீயவர்களிடம் மனமாற்றம் ஏற்படுத்துகிறார். இத்தகைய மன மாற்றமே நிரந்தரமானது. ''நான் தீயதை அடக்க மட்டும் செய்கிறேன். இதில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும் தீயவை மறுபடியும் தலைதூக்கு பிரம்மதத்தரோ, களை பிடுங்கிய இடத்தை காலியாக விடாமல் செடி நடுவதுபோல், நல்லதை நாட்டியே தீயதை ஓட்டுகிறார். நானும் இனி அவரைப் பின்பற்ற முயல்வேன்,'' என்றார் மல்லிக்ராஜா.மல்லிக் ராஜாவின் தேர் பின் வாங்கியது.பிரம்மதத்த ராஜாவின் தேர் முன்னேறி மல்லிக்ராஜனின் தேரைக் கடந்தது. அப்போது மல்லிக் ராஜா அவரைப் பார்த்துக் கைகூப்பினார். பதிலுக்கு பிரம்மதத்தர் கை உயர்த்திக் கனிவுடன் அவரை வாழ்த்தினார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !