உள்ளூர் செய்திகள்

ஜீவ நீரூற்று!

முன்னொரு காலத்தில், ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்களும் ஒரு சகோதரியும் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். முதலில் ஏழையாக இருந்தனர். பிறகு, உழைத்து, விரைவிலேயே ஓர் அழகிய மாளிகையை தங்களுக்காக கட்டிக் கொண்டனர். தங்கள் அற்புத மாளிகைக்குக் குடி புகுந்த அன்று ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து விருந்து வைத்து, அதை ஒரு பெரிய விழாவாகவே கொண்டாடினர். அந்த விழாவுக்கு வந்திருந்த ஒரு முதியவர் அவர்களுடைய மாளிகையை மிகவும் பாராட்டினார்.''இத்தனை அற்புதமான மாளிகையில் ஜீவ நீரூற்றும், அதன் அருகே அழகின் அவதாரமான மரமும், அதன் கிளையிலே பேசும் பறவையும் இருக்குமானால்... ஆஹா! அதற்கு ஈடாகவோ, இணையாகவோ பிறகு எதையும் கூற முடியாது,'' என்றார்.''நீங்கள் கூறும் அந்த அபூர்வ பொருள்கள் எங்கிருக்கின்றன? அவற்றை அடைவது எப்படி?'' என்று கேட்டனர் சகோதரர்கள்.''இதோ இந்த நெடுந்தூரச் சமவெளிக்கு அப்பால் உள்ள மலைக்குப் போனால் நீங்கள் விரும்பினதெல்லாம் கிடைக்கும். இந்த வாளை வைத்துக் கொள்ளுங்கள். இதன் பளபளப்பு மங்காத வரை அந்த அதிசயப் பொருள்களைத் தேடிப் போகிறவர்களுக்கு எவ்வித அபாயமும் இல்லை என்று அறிந்து கொள்ளலாம். ஆனால், எந்த நிமிஷம் இதன் பளபளப்பான பகுதிகளில் ரத்தத் துளிகள் தோன்றுகின்றனவோ... அப்போதே, அவர்களுடையே உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,'' என்று ஒரு பெரிய வாளைக் கொடுத்து விட்டுப் போனார் அந்த முதியவர்.''சகோதரர்களில் மூத்தவன், ஜீவ நீருற்றைத் தேடி நான் போகிறேன். இதோ புறப்பட்டு விட்டேன்,'' என்று கூறி நெடுந்தூரத்துக்கு நீண்டு கிடக்கும் சமவெளிப் பிரதேசத்தில் புகுந்து மறைந்தான். சமவெளியின் முடிவிலே ஒரு ராட்சதனைக் கண்டான். ''எங்கே போகிறாய்?'' என்று கேட்டான் அந்த ராட்சதன்.''ஜீவ நீரூற்றைத் தேடிப் போகிறேன்,'' என்றான் மூத்தவன்.''இந்த வழியாக, அதோ தெரிகிறதே அந்த மலைக்குச் சொந்தமான அற்புதங்கள் பலவற்றையும் தேடி எத்தனையோ பேர் வந்தனர். ஆனால், அவர்களில் யாருமே திரும்பியதை நான் காணவில்லை. உனக்கும் அதே நிலைதான் ஏற்படும். நான் கூறியபடி கேட்டாயானால், அத்தகைய அபாயத்திலிருந்து தப்பலாம். இதே வழியில் சென்றாயானால் அந்த மலை உச்சியை அடையலாம். ஆனால், போகும் வழியில் பல வினோதமான பாறைகளைக் கடக்க வேண்டியிருக்கும். ''அவற்றைத் தொடவோ, கூர்ந்து பார்க்கவோ செய்யாதே. தொடர்ந்து முன்னேறிக் கொண்டே போ. அப்படிப் போகும் போது பின்னால் பல குரல்கள் உன்னைப் பரிகசிக்கும், இழித்துரைக்கும், சிரிக்கும்; பயமுறுத்தும். எதற்கும் கலங்காமல், காது கொடுக்காமல், திரும்பிப் பார்க்காமல் போய் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அங்குள்ள பாறைகளில் நீயும் ஒன்றாகி விடுவாய். மலை உச்சிக்குப் போகும் வரை இப்படி வைராக்கியத்துடன் முன்னேறினால் முடிவில் வெற்றியோடு திரும்பலாம்,'' என்றான் ராட்சதன்.அவனுக்கு நன்றி கூறிவிட்டு, நடக்கலானான் மூத்தவன்.மலை கண்ணுக்குத் தெரியலாயிற்று. அதன் அடிவாரத்தில் வினோதமான உருவமுடைய பாறைகள் சிதறிக் கிடந்தன. எதையும் தொடாமல் மலை மீதேறலானான். பரிகசிக்கும் விதவிதமான குரல்கள், கேலி செய்து கொக்கரிக்கும் குரல்கள், வம்புக்கிழுத்து வசை மொழி கூறும் குரல்கள் அவனுக்கு மிக மிக அருகே தொடர்ந்து கேட்டுக் கொண்டு விரட்டி வந்தன. அவற்றின் இம்சை தாங்காதவன் ஆத்திரத்துடன் குரலுக்குரிய உருவங்களின் மீது வீசுவதற்காகக் குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்தான். அடுத்த விநாடி, அவன் கைகள் உணர்வை இழந்ததை அறிந்தான். வெகு வேகமாக அவன் உடல் முழுதும் கல்லாக மாறி அவனும் ஒரு பாறையானான்.பளபளக்கும் பட்டாக் கத்தியை பார்த்துக் கொண்டிருந்த சகோதரி, திடீரென்று அதன் ஒளி குன்றுவதையும், அதன் மீது ரத்தத் துளிகள் தோன்றியதையும் கண்டு கலவரத்துடன் கத்தினாள்.அண்ணாவுக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட சகோதரர்களில் இரண்டாமவன், 'நான் போய் வருகிறேன்' என்று புறப்பட்டான்.நடந்து, நடந்து வெகு தூரம் சென்றவன் அதே ராட்சதனைச் சந்தித்தான்.''மலை உச்சியை நோக்கி ஓர் இளைஞன் இந்தப் பக்கமாக வந்ததைக் கண்டாயா?'' என்று கேட்டான் இளைய சகோதரன்.''கண்டேன். ஆனால், அவன் திரும்பியதைக் காணவில்லை,'' என்று கூறி மூத்தவனிடம் கூறியதையே இவனிடமும் கூறி எச்சரித்து அனுப்பினான். ஆனால், இவனும் உறுதி இழந்து போனான். தன் அண்ணன் குரலைக் கேட்டுத் திரும்பியவன் அடுத்த விநாடியே கற்பாறையானான்.இரண்டாவது தடவை கத்தியிலே ரத்தத் துளிகள் தோன்றியதைக் கண்ட மூன்றாவது சகோதரனும், சகோதரியும் துடி துடித்துப் போயினர்.''என் அண்ணன்மார்கள் இருவருக்கும் நேர்ந்த அபாயத்தை அறிந்து அவர்களை மீட்டு வருகிறேன்,'' என்று சகோதரியிடம் கூறிவிட்டுக் புறப்பட்டான்.தனது சகோதரர்கள் சென்ற அதே பாதையில் முன்னேறிய அவன் முன்னேயும் அதே ராட்சதன் தோன்றினான். தன் சகோதரர்களைப் பற்றிக் கேட்ட அவனுக்கும் ராட்சதன் அந்தப் பாதையில் உள்ள அபாயங்களைப் பற்றிக் கூறி எச்சரித்து அனுப்பினான். விசித்திரமான குரல்களின் கேலியையும், ஏச்சுப் பேச்சுகளையும் சகித்துக் கொண்டு மிக்க உறுதியுடன், என்ன ஆனாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று முன்னேறினான் மூன்றாவது சகோதரன். ஆனாலும், அந்தக் குரல்களில் அவனுடைய அண்ணன்மார்களின் குரலையும் கேட்டபோது, 'என் அண்ணன்களுமா இந்த அநாகரிகக் கும்பலோடு சேர்ந்து விட்டனர்' என்று அடக்க மாட்டாத ஆர்வத்துடன் திரும்பி விட்டான். அடுத்த விநாடி, அவனும் கல்லாகிப் போனான்.சகோதரர்களால் நிர்மாணிக்கப்பட்ட அழகு மாளிகையில் கையில் வாளுடனும், விழிகளில் கவலையும், கண்ணீருமாக உலாவிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.கத்தியிலே ரத்தத் துளிகள் தோன்றாமல் இருக்க வேண்டுமே என்று இரண்டு அண்ணன்மார்களுக்கு நேர்ந்த கதி மூன்றாவது அண்ணனுக்கும் நேர்ந்து விடக் கூடாதே... என்று கலங்கியவளைக் கதறும்படி செய்து விட்டது வாளிலே தோன்றிய காட்சி.'என்னுடைய முறை வந்தாகி விட்டது. நான் எப்படியும் என் சகோதரர்களைக் காப்பாற்றி மீட்டு வருவேன்' என்ற உறுதியோடு சென்றாள் அந்த அன்புத் தங்கை.நெடுந்தூரம் நடந்து ராட்சதனைச் சந்தித்தாள்.''என்னுடைய மூன்று சகோதரர்கள் இவ்வழியாக வந்ததைக் கண்டாயா?'' என்று கேட்டாள்.''போவதைக் கண்டேன். வழியில் உள்ள அபாயங்களைக் கூறி எச்சரித்தும் அனுப்பினேன். ஆனால், அவர்கள் அதன்படி நடந்திருக்க மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் திரும்பவில்லை,'' என்றான் ராட்சதன். ''என் சகோதரர்களை மீட்க நான் என்ன செய்ய வேண்டும்? ஜீவ நீர் ஊற்றின் தண்ணீரைக் கொண்டு வர நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?'' என்று கேட்டாள் அந்தப் பெண்.அவளுக்கும் ராட்சதன் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.அவனுக்கு நன்றி கூறியவள், மன உறுதியுடன் மலையை நோக்கி நடந்தாள். விசித்திரமான கற்பாறைகளின் இடையே நடந்து போகும் போது காலடியில் கிடந்த கற்களெல்லாம் கூடக் கிசுகிசுத்துக் கேலி செய்தன. சில அழுதன; கூச்சலிட்டன; தாங்க முடியாத வேதனையோடு கதறின சில கற்கள். உயிருள்ள ஜீவன்களின் வேதனைகளையும், கதறல்களையும், களிப்பையும், கெக்கலிப்பையும், கற்களிடம் கேட்டாள் அவள்.அத்தனை பயமுறுத்தல்களையும் அவள் அலட்சியமாகக் கருதி மலை உச்சியையே பார்த்தபடி நடந்தாள். அண்ணன்மார்களின் அழுகுரலையும், 'ஐயோ! எங்களைக் காப்பாற்று' என்ற அலறலையும் கேட்டும் கூட அவள் மனதை கல்லாக்கிக் கொண்டாள். இல்லாவிடில் அவளே கல்லாகிப் போவாளே!மலை உச்சியை அடைந்ததுமே குரல்களின் கோலாகங்கள் சட்டென்று அடங்கி விட்டன. அவள் அபாயத்தைக் கடந்து விட்டாள். தங்கமாகத் தகதகத்துக் கொண்டிருந்தது ஜீவ நீரூற்றுத் தடாகம். அதிலே அழகின் பிறப்பிடமான அதிசய மரத்தின் நிழல் துல்லியமாகத் தெரிந்தது. அதன் மரக்கிளையிலே பேசும் பறவை அமர்ந்திருப்பதையும் கண்டாள் அந்த நீரூற்றுக்கு நிழலுக்கடியில்.முன்னேற்பாடாகக் கொண்டு போயிருந்த தோல் பையிலே ஜீவநீரை நிரப்பிக் கொண்டாள். அந்த அதிசய அழகு மரத்தின் கிளையிலே ஒன்றை ஒடித்துக் கொண்டாள். கையோடு கொண்டு போயிருந்த கூண்டிலே பேசும் பறவை தானாக வந்து அமர்ந்து கொண்டது. மலையை விட்டுக் கீழே இறங்கலானாள். தன்னைப் பல காலடிகள் தொடர்ந்து வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. ஆனாலும் அவள் பயப்படவில்லை. அவள் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது. தேடி வந்தவற்றையெல்லாம் அடைந்து விட்ட நிம்மதியினூடே சகோதரர்களைப் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லையே என்ற கவலையும் இல்லாமலில்லை. அந்தக் கவலையும், மலை ஏறிய களைப்பும் அவளைச் சற்றே தடுமாறச் செய்தன. அப்போது அவள் தோல் பையிலிருந்த ஜீவ நீர் கொஞ்சம் கீழே சிதறியது.அந்த மந்திர நீர் பட்ட கற்கள் எல்லாம் மனிதர்களாகவும், மங்கையர்களாகவும் மாறி அவளைச் சூழ்ந்து கொண்டு பாராட்டினர். தொழுதார்கள்; அழுதார்கள்; தங்களைக் காப்பாற்றிய தெய்வம் என்று கொண்டாடினர்.தன்னிடமுள்ள ஜீவ நீருக்கு மாய சக்தியால் கல்லாகிக் கிடக்கும் பாறைகளுக்கும் உயிரும், உணர்வும், சுய உருவமும் தரும் சக்தி உண்டு என்பதை அறிந்ததும் அவளுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஜீவ நீரை அள்ளி அங்குள்ள விசித்திரமான கற்பாறைகளின் மீதெல்லாம் தெளிந்தாள். என்ன விந்தை? கூட்டம் கூட்டமாக மனிதர்கள் 'குபீர் குபீர்' என்று தோன்றினர். அவர்களிலே அவளுடைய சகோதரர்களும் இருந்தனர்.சகோதரர்களையும் மீட்ட சகோதரி மாளிகைக்குத் திரும்பினாள். அதிசய மரத்தின் கிளையைத் தோட்டத்திலே நட்டு, அதற்கு ஜீவ நீரை ஊற்றினாள். அற்புதமான அழகோடு கூடிய ஏராளமான மலர்கள் பூத்துக் குலுங்கும் மிகப் பெரிய மரமாக வளர்ந்தது அது. பேசும் பறவை அம்மரத்தின் கிளையில் கூடு கட்டி முட்டை யிட்டுக் குஞ்சு பொரித்துக் குடியும், குடித்தனமுமாக வாழ்ந்தது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இந்த மூன்று அதிசயங்களையும் காண வந்து கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்களிலே அந்நாட்டு மன்னரின் மகனும் ஒருவன். அவன் காண வந்த அதிசயங்களை விட அந்தச் சகோதரர்களின் தங்கையின் அழகே அவனுக்குப் அதிசயமாகப்பட்டது.யாராலும் முடியாமல் கல்லாகிப் போன அனைவரையும் உயிர்ப்பித்த அவளது மனோதிடத்தைக் கண்டு பூரித்துப் போனான். அவளையே தன்னுடைய மனைவியாக்கிக் கொள்ளவும் முடிவு செய்தான். அப்படியே அவளை மணந்து அந்நாட்டின் ராணியாக்கினான். இருவரும் சந்தோஷமாக நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !