குட்டு வெளிப்பட்டது!
அரும்பூர் என்னும் கிராமத்தில் தங்கராசு என்ற விவசாயி, விவசாயம் செய்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவர் தன் பிள்ளைகளான ஜெகன், பாலன் இருவரையும் வயலுக்கு வேலை செய்ய அனுப்பினார். இயல்பிலேயே உழைப்பாளியான ஜெகன், வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்க, சோம்பேறியான அவன் தம்பி பாலன் மரத்தடியில் படுத்து, சுகமாய் தூங்கினான்.மாலை மங்கியதும், இருவரும் வீடு திரும்பினர். பாலன் சாமர்த்தியமாக, சிறிது சேற்றை எடுத்து தன் கை, கால்கள், உடைகளில் அப்பிக் கொண்டு, அண்ணனுடன் வீடு திரும்பினான்.வீட்டுக்கு வந்ததும் பாலன், அம்மாவிடம், ''பாரும்மா! நான் நாள் முழுவதும் வயலில் கடுமையாக வேலை செய்தேன். அண்ணன் ஒன்றுமே செய்யாமல் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கினான்,'' என்று அண்டப்புளுகு புளுகினான்.பாலன் சொன்னதை உண்மை என்று நம்பிய அப்பாவி அம்மா, ஜெகனைக் கடிந்து கொண்டாள்.ஆனால், ஜெகன் தன் தம்பியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் மவுனமாக இருந்து விட்டான். இரவு உணவருந்திய பின் இருவரும் உறங்கச் சென்றனர். ஜெகன் உடனே உறங்கிப் போக, பாலன் தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தான்.அவனை உற்று கவனித்த அவன் தந்தை தங்கராசு, ''பாலா! உன் அண்ணன் நாள் முழுவதும் கடுமையாக வேலை செய்த களைப்பில் இப்போது அயர்ந்து தூங்கு கிறான். ஆனால், நீயோ வேலை செய்யாமல் நாள் முழுவதும் வெட்டியாய் தூங்கியிருக்கிறாய் என்பது நன்றாகத் தெரி கிறது. அதனால் தான், இப்போது நீ தூக்கம் வராமல் தவிக் கிறாய். உன் அண்ணன் அப்படியும் உன்னைக் காட்டிக் கொடுக்கவில்லை. நீயும் இருக்கிறாயே! சே!'' என்று இகழ்ந்தார்.குட்டு வெளிப்பட்டதைக் கண்டு, பாலன் கூனிக்குறுகினான்.***