உள்ளூர் செய்திகள்

இதய துடிப்பு மானியின் கதை!

மருத்துவரின் கவுரவ தோற்றத்தை ஏற்படுத்துவது, அவர்கள் அணியும் வெள்ளை நிற கோட்டும், கழுத்தில் தொங்கும், கருவியும் தான்.நோயாளியின் நெஞ்சிலும், முதுகுப்புறத்திலும், 'ஸ்டெதஸ்கோப்' கருவியால் சோதிப்பார் மருத்துவர். இது, இதயத்துடிப்பை கண்டறிய உதவும். இந்த கருவியை தமிழில், 'இதயத்துடிப்பு மானி' எனலாம். இது, மிக எளிமையானது; மடித்து கையில் எடுத்து செல்ல வசதியானது. மருத்துவ உலகில் மிகவும் இன்றியமையாதது. இதை கண்டுப்பிடித்தவர், மருத்துவர் ரெனே லென்னக்.ஐரோப்பிய நாடான பிரான்சில், பிப்ரவரி 17, 1782ல் பிறந்தார்; தாயாரை, 6 வயதில் இழந்தார். தந்தை வழக்கறிஞராக இருந்தார். குடும்பத்துக்கு போதிய வருமானம் ஈட்ட இயலவில்லை. தாய்மாமா உதவியால் பள்ளியில் சேர்ந்தார் ரெனே. மருத்துவப் படிப்பில், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ராணுவத்தில் சேர்ந்தார்.அப்போது, பிரான்சை ஆண்ட நெப்போலியன், பல படையெடுப்புகள் நடத்தினார். போரில், காயம் அடைந்த வீரர்களுக்கு, கட்டுப் போடுவதற்கே, ரெனேக்கு நேரம் சரியாக இருந்தது. அவர் படித்த மருத்துவத்தை பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, அந்த பணியை உதறினார்.தலைநகர் பாரிஸ் சென்று, உயர் மருத்துவ கல்வி பயிற்சியை தொடர விரும்பினார். அதற்கு தேவையான பணம் இல்லை; மிக சொற்பமாக இருந்தது. எனவே, சொந்த ஊரில் இருந்து, 360 கி.மீ., துாரத்தில் இருந்த பாரிஸ் நகருக்கு நடந்தே சென்றார்.பாரிஸ் மருத்துவ பள்ளியில், பணக்கார குடும்ப பிள்ளைகளே பயிற்சி பெற்றனர். ஏழ்மை நிலையிலிருந்த ரெனே, அவர்களின் கேலிக்கு உள்ளானார். அதை பொருட்படுத்தாமல், ஆர்வம், ஈடுபாட்டுடன் பயிற்சியை மேற்கொண்டார்.இவருக்கு சீனியராக இருந்தார் மருத்துவர் புருசே. ஒருநாள் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மருத்துவ வார்டில், ஒரு நோயாளியை பரிசோதித்து கொண்டிருந்தனர். அந்த நோயாளியை, 'எம்பியெமா' என்ற நோய் தாக்கியிருப்பதாக கூறினார் ரெனே; அதை மறுத்து, 'நிமோனியா' என்றார் புருசே.இருவருக்கும் பயிற்சி அளித்த முதுநிலை மருத்துவர், விவாதம் பற்றி விசாரித்தார். பின், எம்பியெமா நோய் தான் தாக்கியுள்ளது என உறுதி செய்தார். உயர் மருத்துவ பயற்சி காலத்தில், 'பெரிடோனிட்டிஸ்' என்ற குடல் நோய் சம்பந்தமாக ஆராய்ந்தார் ரெனே. இன்று, அந்த நோய் குறித்து, கண்டுபிடிக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும், 200 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி கட்டுரைகளாக எழுதியுள்ளார் ரெனே. அவரது திறமையை, இன்றும் மருத்துவ உலகம் வியந்து போற்ற இதுவும் ஒரு காரணம்.உயர் மருத்துவ கல்வி பயிற்சியில் வெற்றி அடைந்தார்.இந்நிலையில் ஒரு புத்தகம் கிடைத்தது. மருத்துவர் ஆன்பிரக்கர், 1761ல் எழுதியது.அதை படித்தபோது, நுரையீரல் மற்றும் இதயம் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் கூடியது.நோயாளி மார்பின் மீது, காதை வைத்து, 'லப் - டப்' என இதயம் துடிப்பதை கண்டறிந்தவர், கிரேக்க மருத்துவ மேதை, ஹிப்போகிரேடிஸ். ரெனேவும் இம்முறையை கையாண்டார்.இது முழுமையானதாக இல்லை. காரணம், உடல் பருமன் உள்ளவரின் இதயத்துடிப்பை, சரியாகக் கேட்க இயலவில்லை. எனவே, மாற்று வழி பற்றி சிந்தித்தார் ரெனே.ஒரு நாள் -நகரப் பூங்காவில் அமர்ந்திருந்தார் ரெனே. அங்கு, 'சீ - ஸா' பலகையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். முடிவில் இருவரும் இறங்கி, வேறோரு விளையாட்டில் ஈடுபட்டனர்.ஒரு சிறுவன், சி - ஸா பலகையின் முனையில், குண்டூசியால் கீற, மற்றொரு சிறுவன், மறு முனையில், அந்த கீறல் ஒலியை கூர்ந்து கேட்டான்.அவருக்கு வியப்பாக இருந்தது.மரம் திடப்பொருள்; அதற்கு ஒலியைக் கடத்தவும், பெருக்கவும் தன்மை உண்டு; அதனால் தான், பலகையின் ஒரு முனையில் கீறியதால் ஏற்பட்ட ஒலி, மறுமுனையில் கேட்டது.இந்த அடிப்படையில், இதய ஒலியை கேட்கும் கருவி உருவாக்க முடியும் என நம்பினார் ரெனே. உற்சாகத்துடன் மருத்துவமனைக்கு விரைந்தார். காகிதத்தை உருளை வடிவில் சுருட்டினார்; உருளையின் ஒரு முனையை, பருத்த உடலுள்ள பெண் நோயாளி மார்பில் பதித்து, மறுமுனையில் காதை வைத்தார். இதயம் துடிப்பது மிக தெளிவாக கேட்டது. இதயம், நுரையீரலில் எற்படும் நோய்களின் தன்மையை அறிய ஏற்ற வகையில், ஒரு கருவியை, 1876ல் அறிமுகம் செய்தார்.நோயின் தன்மைக்கு ஏற்ப, இதயத்துடிப்பின், ஒலியை வேறுபடுத்தி, அந்த கருவி காட்டியது. காகிதத்தை விட, மர உருளை, ஒலியை மேலும் பெருக்கும் என கருதினார். மர உருளை ஒன்றை குழாய் போல் உருவாக்கினார். கண்டுபிடித்தாகி விட்டது புதிய மருத்துவ கருவி; அதற்கு பெயர் சூட்டும் முன், தாய்மாமாவுக்கு கடிதம் எழுதினார்.அவர், 'தோராக்ஸ்' என்ற லத்தீன் மொழி சொல்லையும், 'ஸ்கோப்பீன்' என்ற கிரேக்க மொழி சொல்லையும் சேர்த்து, 'தோராகாஸ்கோப்' என்று பெயரிட பரிந்துரை செய்தார்.லத்தின் மொழியில், 'தோராக்ஸ்' என்றால் மார்பு. கிரேக்க மொழியில், 'ஸ்கோப்பீன்' என்றால், 'சோதனை செய்தல்' என்று பொருள்.ஆனால், கிரேக்கச் சொல்லுடன், லத்தீன் மொழியை இணைக்க விரும்பவில்லை ரெனே.தோராக்ஸ் என்ற லத்தீன் சொல், கிரேக்க மொழியில், 'ஸ்டெதாஸ்' என அறியப்பட்டது. அவற்றின் பொருள் ஒன்று தான். எனவே, ஸ்டெதாஸ் என்ற சொல்லுடன், ஸ்கோபீன் என்ற சொல்லை இணைத்து, 'ஸ்டெதஸ்கோப்' என பெயரிட்டார் ரேனே.அந்த ஆராய்ச்சி முடிவுகளை புத்தகமாக வெளியிட்டார். புத்தகத்தை வாங்கிய மருத்துவர்களுக்கு, மர உருளையிலான, ஸ்டெதஸ்கோப் கருவி ஒன்றையும் இலவசமாக தந்தார்.ஓரிரு மருத்துவர்கள் அந்த கண்டுபிடிப்பை ஏற்றனர்; பலர் நிராகரித்தனர்; சிலர் எதிர்த்தனர்.மருத்துவ துறையில், உறுதுணையாக இருந்த இளம் விதவையை திருமணம் செய்தார் ரெனே. மருத்துவத்தில் பெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அவர், காச நோயால் பாதிக்கப்பட்டு, 1826ல் இறந்தார்.அவர் கண்டுபிடித்த, ஸ்டெதஸ்கோப் கருவியை, உலகம் முழுதும் இன்று பயன்படுத்துகின்றனர் மருத்துவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !