வெற்றிகரமாக மூன்றாவது நாள்...
நான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பக்கத்து வகுப்பிற்கு புதிதாக ஒரு ஆசிரியர் பதவி உயர்வு பெற்று வந்திருந்தார். அவருக்கு முழுவதும் பெண்களாக உள்ள வகுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.மாணவிகள் எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பயம் இருந்தது அவருக்கு. அவர் வகுப்பிற்குள் நுழைந்ததும் கரும்பலகையின் மூலையில், 'இன்று முதல் நாள்!' என்று எழுதப்பட்டிருந்தது. தான் பணியில் சேர்ந்ததைத்தான் இப்படி எழுதியுள்ளனர் என நினைத்து அதை அழித்து விட்டு, பாடங்களை நடத்தினார்.அடுத்த நாள், வகுப்பிற்குள் நுழைந்தவுடன் அதே இடத்தில், 'இன்று இரண்டாவது நாள்!' என்று எழுதப்பட்டிருந்தது. உடனே ஆசிரியர், 'இதெல்லாம் தேவையில்லாதது. இப்படி எல்லாம் எழுதக்கூடாது!' என்று கண்டித்து விட்டு, பாடங்களை நடத்தினார்.அடுத்த நாள் வகுப்பிற்குள் சென்றபோது அதே இடத்தில், 'வெற்றி கரமாக மூன்றாம் நாள்!' என எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து திகைத்த ஆசிரியர் ஒரு மாணவியை அழைத்து, 'ஏன் இப்படி எழுதுகிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?' என்று கேட்டார். அந்த மாணவி பேசாமல் நிற்க, 'நான் பள்ளி முதல்வரிடம் ரிப்போர்ட் பண்ணப் போகிறேன்' என்றார்.பின் அந்த மாணவி தயங்கி, 'சார்... நீங்க ஒரே பேன்ட், சட்டையை மூன்று நாட்களாக போட்டுக் கொண்டு வருகிறீர்களாம். அதைத் தான் மாணவிகள் இப்படி எழுதி வைக்கின்றனர்' என்று சொல்ல, அவருக்கு வெட்கம் தாங்க வில்லை. அதன்பின் தினம் ஒரு பேன்ட், சட்டை என்று மாறி, மாறி போட்டு வர ஆரம்பித்தார். மாணவிகளின் குறும்பை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.- எஸ்.மாரியப்பன், தேனி.